திருக்குறளும் சனாதனமும் ஒன்றல்ல! - க.உதயகுமார்
14 Jun 2026, 10:45 pm

திருக்குறளும் சனாதனமும் ஒன்றல்ல! - க.உதயகுமார்

தமிழக கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பில் உள்ளார். இவர் தமிழகத்தைக் காவிமயமாக்குவதில் முன்னாள் கவர்னர் ஆர்.என்.ரவியை மிஞ்சிவிடுவார் என்றே தெரிகிறது. சனாதனம் பற்றி பேசி வரும் இவர், குறிப்பாகத் திருவள்ளுவரைக் காவிமயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமோ, அந்த வகையில்தான் இருக்கிறது திருவள்ளுவர் பற்றி இவர் கூறும் கருத்துக்கள். திருக்குறள் இதுவரை 64 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் 143 பேர் வகை வகையாக மொழிபெயர்த்துள்ளனர். உலகில் உள்ள அனைத்து மொழிகள், மதங்கள், இனங்கள் மற்றும் நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய வகையில், காலத்தைக் கடந்து உலகப் பொதுமறையாக அது திகழ்கிறது. ஆனால், சனாதனம் நிரந்தரமானது, எப்போதும் உண்மையானது என்று அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். எத்தகைய தத்துவமும் நிலையானதாக இருக்க முடியாது. மார்க்சிய தத்துவம் கூட இயக்கவியல் தத்துவத்திற்கு உடன்பட்டதே ஆகும். அதனால் மார்க்சியம், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப செயல்படுகிற, தன்னை மேம்படுத்திக் கொள்கிற அறிவியல் என்கிறோம். எல்லாமே மாறக்கூடிய தன்மை பெற்றது என்பதை இந்த உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. நிலையான தன்மை (Static) எதிலும் இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அப்படி இருக்க, சனாதனம் மட்டும் மாறாதது, நிலைத்திருக்கக் கூடியது என்று கூறுவது அப்பட்டமான அபத்தமாகும்.

சாதிக்கொரு நீதி கூறும் மனுஸ்மிருதி

சாதிக்கொரு நீதி கூறும் சனாதன வாழ்வியல் முறை நிரந்தரமானது என்பதை நவீன உலகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சனாதனம் என்பது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை அடிப்படையாகக் கொண்டது. அதில் வரும் பாடல்கள் எல்லாம் அன்றைய ஒரு தரப்பினரின் வாழ்க்கை முறையை மட்டுமே பிரதிபலிப்பவை. மேலும், வேதகாலத்தில் சனாதனத்தைப் பின்பற்றியவர்கள் மாட்டுக்கறி புசித்துள்ளனர் என்பதும் வரலாற்றின் மூலம் தெரியவருகிறது. மனுஸ்மிருதி என்பது மிகவும் பிற்போக்கான, அபத்தமான ஒரு நூல். இந்த நூலில் ஒவ்வொரு சாதியினரும் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் முறைகள் மட்டுமே உள்ளன. அதில் பிராமணர்களுக்குக் குறைந்தபட்ச தண்டனையும், அடிமட்டத்தில் உள்ள சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கொடூரமான அதிகபட்ச தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் இயற்றப்படும்போது, இந்த மனுஸ்மிருதிதான் நாட்டின் சட்டமாக வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறினர். அவ்வாறு மனுஸ்மிருதியைச் சட்டமாக்கி இருந்தால் இந்நாடு என்னவாகியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். டாக்டர் அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவான அரசியல் சாசனத்தை உருவாக்கினர்; இல்லையென்றால் நம் நாடு குட்டிச்சுவராகி இருக்கும். குறிப்பாகப் பெண்களைப் பற்றி அவதூறாகச் சொல்லும் மனுஸ்மிருதி, எல்லோராலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும்.

திட்டமிட்ட காவிமயமாக்கல் சூது

தமிழக கவர்னர் அர்லேகர் எதையும் ஒழுங்காகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. படித்திருந்தால் இப்படிப் பேசித் திரிய மாட்டார். தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கு மாபெரும் மரியாதை இருப்பதால், அவரையும் தங்கள் வசம் இழுக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டுச் செய்யும் சூது இது என்பதை அனைவரும் அறிவர். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 1330 குறள்களில் எந்த நாட்டவருக்கும், எந்த மொழி பேசுபவர்களுக்கும் பொதுவான மனிதநேயக் கருத்துக்களை இயம்புகிறது. சனாதனத்தை உலகில் எந்த நாடாவது ஏற்றுக்கொள்ளுமா? பிறப்பிலேயே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பாகுபாடு காட்டும் ஒரு தத்துவத்தை யார் ஏற்பார்கள்? எனவேதான் சனாதனமும் திருக்குறளும் ஒன்றல்ல என்பதைப் பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மனித உழைப்பை முன்னிறுத்தும் குறள்

கவர்னர் அர்லேகர் போன்றவர்கள் சனாதனத்தைத் திருவள்ளுவருடன் ஒப்பிட்டுப் பேசுவது எந்த வகையிலும் சரியாகாது. திருக்குறள், வேதங்களையோ வேறு சாஸ்திர சம்பிரதாயங்களையோ புனிதப்படுத்தவில்லை; எதற்கும் அதை அடிப்படையாக்கவில்லை. “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று தெய்வ நம்பிக்கையை அல்லாமல், மனித உழைப்பையே முதன்மைப்படுத்தியவர் திருவள்ளுவர். குறளைச் சனாதனம் என்பதும், அதுவே நிலையானது, இறுதியானது என்று சனாதனப்படுத்துவதும் அறிவுடைமை ஆகாது. பெண்ணியம் பற்றிய குறளின் சில கருத்துக்களை இன்றைய நவீனச் சூழலில் ஏற்பதற்கில்லை என்ற விமர்சனம் இருப்பினும், திருக்குறளின் மனிதப் பொதுமை நோக்கும், மனிதனை முன்னிலைப்படுத்தும் தத்துவமும் சனாதனத்திற்கு முற்றிலும் முரணானது என்பதை உறுதிப்படுத்துகிறது.