நுண்கலையில் மீன் வாசனை - மயிலை பாலு
18 Jun 2026, 11:21 pm

நுண்கலையில் மீன் வாசனை - மயிலை பாலு

சென்னை லலித் கலா அகாடமியில் சுமார் ஒரு வார காலம் மீன் மணம் கமழ்ந்தது. அந்த மணம் சமைத்ததால் வந்ததல்ல; கடலையே நம்பியுள்ள மீனவ மக்களின் வாழ்வியல் பாடுகள் ஒளிப்படங்களாய், ஓவியங்களாய், சிற்பங்களாய் விரிந்து பரிணமித்ததால் வந்த மணமே அது! ஓவியர் அந்தோணி குரூஸ், புகைப்படக் கலைஞர் பழனிக்குமார், பேராசிரியர் நிரஞ்சனா.ர, பேராசிரியர் அ.பகத்சிங் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஜூன் 9 முதல் 15 வரை நடைபெற்ற ‘கொண்டல் நெய்தல் திணைக் கலைகள்’ ஓவியம் மற்றும் ஒளிப்படக் காட்சி மிக முக்கியமானதொரு நிகழ்வாகும். வங்கக்கடலில் இருந்து சென்னைக்குள் வீசும் கிழக்குக் காற்றுக்குக் ‘கொண்டல்’ என்று பெயர். இந்தப் பொருத்தமான பெயருக்காகவே ஒருங்கிணைப்பாளர்களை முதலில் பாராட்ட வேண்டும்.

சிந்தனை மணம் கமழ்ந்த நிகழ்வுகள்

கண்காட்சியின் அன்றாட நிகழ்வுகள் அடுக்கடுக்காகத் திட்டமிடப்பட்டிருந்தன. “Daughters of the sea” (கடலின் புதல்விகள்) ஆவணப்படம் திரையிடல், திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், முனைவர் கல்பனா கருணாகரன், ஊடகவியலாளர் அருள் எழிலன் ஆகியோருடனான உரையாடல், புதுச்சேரி யாழ் அரங்கத்தின் ‘’மீன் வாங்கலையோ மீனு’’ நாடகம் என நிகழ்வுகள் தொடர்ந்தன. மேலும், ‘கவுச்சி’ என்ற சொல்லின் பின்னாலிருக்கும் வாழ்வியல் குறித்து எண்ணூர், புதுச்சேரி மீனவப் பெண்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. சமூகச் செயற்பாட்டாளர் வ. கீதா, எழுத்தாளர் கவின் மலர், நாடகவியலாளர் பிரளயன் எனப் பல்துறை ஆளுமைகளின் பங்கேற்பால் மீன் மணத்தோடு சிந்தனை மணமும் சேர்ந்தே கமழ்ந்தது.

கேமரா வலையில் நெய்தல் நிலம்

கண்காட்சியின் நிறைவு நாளன்று சென்றபோது, விண்ணுக்கும் மண்ணுக்கும் மீன்கள் பயணிப்பது போன்ற ‘நிர்மாணக் கலை’ (Installation Art) நம்மை வரவேற்றது. உள்ளே திரும்பும் திசையெங்கும் வண்ண வண்ண ஒளிப்படங்கள் காட்சி அளித்தன. புகைப்படக் கலைஞர் பழனிக்குமாரின் வழிகாட்டுதலில், கடலோரப் பின்னணி கொண்ட மாணவர்களே தங்களது கேமரா வலையில் இவற்றை நெகிழ்ச்சியோடு பிடித்துள்ளனர். மீனவப் பெண்களின் வெள்ளந்தியான சிரிப்பும், வகைவகையான மீன்களும், சமையலறைக் காட்சிகளும் நம்மை நேரடியாக அவர்களின் வீதிகளுக்கே அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தின.

பிரமிக்க வைத்த சிற்பமும் ஓவியங்களும்

மீன்கள் தரையில் கோலமிட்டுக் காட்டுவது போன்ற பேரழகுக் காட்சியின் மையமாக, ஒரு மீனவப் பெண்ணின் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. மூடிய கண்கள், வாடிய முகம், முக்காடிட்ட வலை, கொண்டை முடிச்சில் ஒரு படகு... இவை யாவற்றோடும் சேர்த்து, அப்பெண்ணின் கன்னத்தில் ஒட்டியிருந்த உப்புக் கற்கள் நம்மைப் பிரமிக்க வைத்தன. அடுத்ததாக, ஓவியர் அந்தோணி குரூஸின் வழிகாட்டுதலில் புதுச்சேரி பாரதி பல்கலைக்கூட மாணவர்கள் தீட்டிய ஓவியங்கள் நம்மிடம் பேசின. ஆலம்பரைக் குப்பம், வீராம்பட்டினம் ஆகிய நெய்தல் நிலப் பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள வாழ்வியலை உள்வாங்கித் தூரிகைகளால் அவற்றுக்கு உயிரூட்டியிருந்தனர். பல்வேறு நுண்கலை வடிவங்களின் வழியே மீனவ மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்திய விதமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் பங்கேற்பும், சமூகத்தில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறது என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.