சொந்த ஊர்ல ஓட்டே இல்லையாம்... சட்டசபையில சீட் வேணுமாம்!
25 Mar 2026, 5:29 pm
<p><strong>சொந்த ஊர்ல ஓட்டே இல்லையாம்... சட்டசபையில சீட் வேணுமாம்! </strong></p>
<p>“ஊருக்கே ஓட்டுப் போடச் சொல்லிப் பிரச்சாரம் பண்ணப் போறோம்... ஆனா நமக்கு ஒரு ஓட்டு கூட கிடையாது!” - இது ஏதோ வடிவேலு பட காமெடி வசனம் அல்ல, கேரளத்தில் ‘டுவென்டி-20’ (Twenty20) கட்சி வேட்பாளர்கள் நிஜமாகவே அரங்கேற்றியுள்ள ‘லைவ்’ காமெடி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தக் கட்சி, கடந்த மார்ச் 18-ஆம் தேதி பெரும் ஆரவாரத்துடன் நடிகைகள் லட்சுமி பிரியா மற்றும் வீணா நாயர் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்தது. ஆனால், வேட்புமனுத் தாக்கல் செய்யப் போனபோதுதான், அவர்கள் இருவருமே இந்தியக் குடிமக்களாக வாக்காளர் பட்டியலில் ‘இல்லவே இல்லை’ என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது! லிஸ்ட்லேயே இல்லாத வேட்பாளர்கள்! பெரும்பாவூர் தொகுதிக்கு லட்சுமி பிரியாவும், எட்டுமானூர் தொகுதிக்கு வீணா நாயரும் வேட்பாளர்களாக ‘சீன்’ போட்டனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஒரு வேட்பாளர் அந்த மாநிலத்தின் ஏதாவது ஒரு தொகுதியிலாவது வாக்காளராக இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் இருவரது பெயரும் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. “ஏங்க... உங்க பெயர் ஓட்டுப் பட்டியல்ல இருக்கான்னு கூடவா செக் பண்ண மாட்டீங்க?” என்று கேட்டால், அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் அதைவிடப் பெரிய காமெடி: வீணா நாயர்: “முகவரியை மாத்திட்டேன்... அதான் என் பெயர் காணாமப் போயிருக்கும் போல!” (முகவரியை மாற்றினால் ஓட்டும் கூடவே வந்துவிடும் என்று நினைத்துவிட்டாரோ?) லட்சுமி பிரியா: “முன்னாடி திருச்சூர்ல ஓட்டுப் போட்டேன்... இப்போ புதுப்பிக்கும்போது என் பெயரை யாரோ தூக்கிட்டாங்க!” கடைசி நிமிடத் தவம்! வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 23 கடைசி நாள். ஆனால் மார்ச் 22-ஆம் தேதி வரை, “சார்... எப்படியாவது என் பெயரைச் சேர்த்துடுங்க சார்!” என்று தேர்தல் அலுவலக வாசலில் தவம் கிடந்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளோ, “மார்ச் 15-க்கு முன்னாடியே வந்திருந்தா பார்த்திருக்கலாம்... இப்போ போயிட்டு தேர்தல் முடிஞ்ச அப்புறம் வாங்க” என்று ‘நோ’ சொல்லி அனுப்பிவிட்டனர். அவசர அவசர ‘ஜம்ப்’! கடைசி நேரத்தில் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள, எட்டுமானூர் தொகுதிக்கு இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆதிரா டி. நாயரையும், பெரும்பாவூர் தொகுதிக்குச் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து ஜம்ப் அடித்த ஜி.பி. வர்கீஸையும் அவசர அவசரமாகக் களமிறக்கியுள்ளார் கட்சித் தலைவர் சாபு ஜேக்கப். “ஓட்டுப் போடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் வேட்பாளராக அறிவித்தது ‘டுவென்டி-20’ கட்சி நிர்வாகம் செய்த ‘அபாரமான’ சாதனை!” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். - வி.கே.பாண்டியன்</p>
