திருக்குறளும் இல்லை; திட்டங்களும் இல்லை
1 Feb 2026, 3:51 pm
<p><strong>திருக்குறளும் இல்லை; திட்டங்களும் இல்லை</strong></p>
<p>ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகவும், தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். தேர்தல் கால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த ஆண்டாவது ஒன்றிய பா.ஜ.க அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கச் செய்து, ஏழைகள், பெண்கள், விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் என எவருக்கும் பயனில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது என முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார். வரிப்பகிர்வில் தொடரும் அநீதி: ஆண்டுக்கு ₹5,000 கோடி இழப்பு மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டு, 41 விழுக்காடாகவே நீடிக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழ்நாட்டிற்கு, 16-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வெறும் 4.097 விழுக்காடு நிதி மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதனால், இதர மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்குச் சுமார் ₹5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும். மேலும், இந்த ஆண்டு ஒன்றிய வரிகளின் பங்கில் மட்டும் சுமார் ₹1,200 கோடி குறைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. திட்டங்களை முடக்கும் நிதிக்குறைப்பு முக்கியமான ஒன்றியத் திட்டங்களுக்கான நிதி திருத்திய மதிப்பீட்டில் பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதை முதலமைச்சர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்: * ஜல் ஜீவன் திட்டம்: ₹67,000 கோடியிலிருந்து வெறும் ₹17,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது குடிநீர்த் திட்டத்தையே முடக்கும் முயற்சியாகும். * கிராம சாலை மேம்பாடு: ₹19,000 கோடியிலிருந்து ₹11,000 கோடியாக நிதி குறைப்பு. * வீடு கட்டும் திட்டம்: ₹35,832 கோடியிலிருந்து ₹32,500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. * PM Internship திட்டம்: ₹10,831 கோடி ஒதுப்பதாகக் கூறிவிட்டு, வெறும் ₹526 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது இத்திட்டத்தின் மிகப்பெரிய தோல்வியைக் காட்டுகிறது. மறுக்கப்படும் நிலுவைத் தொகை மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்திற்கான ₹3,548 கோடி மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்கான ₹3,112 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்காமல் ஒன்றிய அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. புதிய திட்டங்கள் ஏதுமில்லாதது மட்டுமின்றி, உரிய நிதியையும் வழங்காமல் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. திருக்குறளும் இல்லை; திட்டங்களும் இல்லை “வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் வாசிக்கும் திருக்குறள் கூட இந்த முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, திருக்குறளும் இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் என்பது ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம் மட்டுமே” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.</p>
