தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக மாபெரும் மக்கள் அலை

12 Apr 2026, 5:30 am
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக  மாபெரும் மக்கள் அலை
<p><strong>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக மாபெரும் மக்கள் அலை</strong></p><p><br></p><p>கேள்வி : தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். நீங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் கள நிலவரம் மற்றும் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? பெ.சண்முகம் : மக்களின் மனநிலையைப் பொறுத்தவரை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான ஒரு மாபெரும் அலை வீசுகிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மிக உச்சகட்டமான ஆதரவுத் தளம் இந்தக் கூட்டணிக்கு இருப்பதை எங்களால் நேரடியாகப் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இதை எதிர்த்து நிற்கக்கூடிய அதிமுக-பாஜக கூட்டணியோ அல்லது தமிழக வெற்றிக் கழகமோ எங்களுடைய கூட்டணிக்கு ஈடாக ஒரு சவாலை முன்வைக்கக் கூட முடியாத நிலையில் உள்ளனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் இதர அணிகளுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வாக்கு இடைவெளி நிலவுகிறது. இதுவே எங்கள் வெற்றியை இப்போதே பறைசாற்றுகிறது. கேள்வி : இந்த முறை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த ஐந்து தொகுதிகளிலும் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? மக்களிடம் எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது? பதில்: கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலுமே இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100% வெற்றியைப் பெறும் என்பதில் ஐயமில்லை. இதற்குக் மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. ஏற்கெனவே எமது கட்சி வெற்றி பெற்ற கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை தொகுதிகளில் எமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய மக்கள் நலப்பணிகள் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளன. புதிதாகப் போட்டியிடும் மற்ற மூன்று தொகுதிகளுமே கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டுப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள். வலுவான அணி, இடதுசாரிகளின் நேர்மையான களப்பணி மற்றும் மக்களின் நம்பிக்கை இவை அனைத்தும் சேர்ந்து ஐந்திலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்துள்ளன. கேள்வி : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரக் கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். இந்தப் பிரம்மாண்டமான எழுச்சியையும் மக்களின் ஆர்வத்தையும் நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? பதில்: இதற்குக் மிக முக்கியமான காரணம், கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள். குறிப்பாக, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் பெண்களின் பொருளாதார நிலையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2021-இல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியது மக்களிடையே ஆழமான நம்பிக்கையை விதைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இது ஒரு கொள்கை ரீதியான வலுவான கூட்டணி என்பதால், அனைத்துக் கட்சிகளின் தொண்டர்களும் பொதுமக்களும் தன்னிச்சையாக ஆர்வத்துடன் வந்து பங்கேற்கிறார்கள். முதலமைச்சரின் கூட்டங்களில் திரளும் இந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டமே தேர்தல் முடிவை இப்போதே அறிவிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. கேள்வி : ‘தில்லி அணியா, தமிழ்நாடு அணியா?’ என்ற விவாதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்கிறார். இதன் உட்பொருள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன? பதில்: இது 100% எதார்த்தமான உண்மை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, மாநில அரசுக்கு எதிராகப் பல்வேறு மோசமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஆளுநர்களைப் பயன்படுத்தி ஒரு ‘போட்டி அரசாங்கத்தை’ நடத்துவது, தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, மொழித் திணிப்பு எனத் தமிழகத்தை வஞ்சித்து வந்திருக்கிறது. இப்போது அதிமுகவின் முதுகில் ஏறி எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறார்கள். அதிமுக தப்பித்தவறி வெற்றி பெற்றால் கூட, அது பாஜகவின் நிழல் ஆட்சியாகவே இருக்குமே தவிர தன்னாட்சி கொண்ட அதிமுக ஆட்சியாக இருக்காது. எடப்பாடி பழனிசாமி பெயரளவுக்கு முதலமைச்சராக இருக்கலாம், ஆனால் அதிகாரத்தை இயக்குவது பாஜகவாகவே இருக்கும். கோவா உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த இடங்களில் வென்ற பாஜக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்ததை நாம் மறக்க முடியாது. எனவே, தமிழகத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவே முதலமைச்சர் இந்த முழக்கத்தை முன்வைக்கிறார். கேள்வி : பிரச்சாரக் களத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் மோசமான விமர்சனங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? தமிழகத்தில் அரசியல் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து போயுள்ளதா? பதில்: எடப்பாடி பழனிசாமியிடம் மக்களிடம் சொல்வதற்குச் சாதனைகள் என்று எதுவுமே இல்லை. கையில் ‘சரக்கு’ இல்லாத காரணத்தினால் தான் அவர் இப்படி கீழ்த்தரமாகவும் கண்ணியக் குறைவாகவும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார். தனது ஆட்சிக் கால சாதனைகளையோ அல்லது தனது கூட்டணிக் கட்சியான பாஜகவின் திட்டங்களையோ சொல்லி அவரால் வாக்கு கேட்க முடியவில்லை. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் அவதூறு மற்றும் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுப்பார்கள். தனிநபர் தாக்குதல் என்பது அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது. அவரது இந்த அநாகரிகமான அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியது. கேள்வி : சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட அறிவுஜீவிகள் ஒன்றிணைந்து ‘ஜீரோ பிஜேபி’ (Zero BJP) என்ற இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர். இது தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்? பதில்: ‘ஜீரோ பிஜேபி’ என்பது ஒரு மிக முக்கியமான மற்றும் காலத்திற்குத் தேவையான முன்னெடுப்பு. தமிழகத்தின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து இத்தகைய முயற்சியை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லக்கூடாது என்கிற இந்த உயரிய நோக்கம் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். பாஜக உள்ளே நுழைந்தாலே மதவாத சக்திகள் வலுப்படும், வெறுப்பு அரசியல் தீவிரமாகும், இது அமைதிப் பூங்காவான தமிழகத்தைச் சீர்குலைத்துவிடும். இந்தியாவிலுள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் சமூகப் பதற்றமும் அமைதியற்ற சூழலும் தமிழகத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதே இவர்களின் நோக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இதனை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். கேள்வி : நடிகர் விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் பிரச்சாரங்கள் தமிழகத்தில் வாக்கு வங்கியில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா? பதில்: சீமான் அவர்களைப் பொறுத்தவரை, இப்போது விரக்தியில் வாக்காளர்களையே திட்ட ஆரம்பித்துவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாகப் பேசியும் மக்கள் ஏற்கவில்லை என்கிற ஆதங்கம் அவரிடம் வெளிப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் பிடிக்காதவர்களின் வாக்குகளைப் பெற்றார், ஆனால் இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு இல்லை. அவர் பெரும் சரிவைச் சந்திப்பார். விஜய் அவர்களின் கூட்டத்திற்கு இளைஞர்கள் வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால், அந்த இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை. இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையின்மை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு சொல்லவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26,000 வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது, ஆனால் விஜய் இத்தகைய கொள்கைகளை முன்வைக்கவில்லை. எனவே, அவர் வாக்குகளைப் பிரிக்கலாமே தவிர, வெற்றியைத் தீர்மானிக்க முடியாது. கேள்வி : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஒற்றைப் பேச்சாளராக வலம் வருகிறாரே, அங்கு பேச்சாளர்களுக்குக்கூட பற்றாக்குறை நிலவுகிறதா? பதில்: அதிமுகவின் நிலைமை இப்போது பரிதாபகரமாக உள்ளது. அந்தத் தனிமைப்பட்ட நிலையை ‘தனியே தன்னந்தனியே’ என்று தான் சொல்ல வேண்டும். அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் வேட்பாளர்கள் ஆகிவிட்டதால், மாநிலம் தழுவிய பிரச்சாரத்திற்கு ஆளில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு உள்மனப் பயம் இருக்கிறது; பாஜக அல்லது மோடியின் பெயரை உச்சரித்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் முற்போக்கு மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் பாஜக ஆதரவு வேட்பாளர் என்று கூடச் சொல்லாமல், மறைமுகமாகப் பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவில் முன்பு இருந்த அந்தப் பெரும் பேச்சாளர்கள் கூட்டம் இப்போது இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கேள்வி : மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முதல்வர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்து வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்? பதில்: தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை எப்படியாவது உயர்த்திவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். அதனால்தான் கூட்டணிக் கட்சிகளைக் கூடத் தாமரைச் சின்னத்தில் நிற்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இதன் மூலம் அதிமுகவைச் சிதைப்பது அவர்களின் மறைமுகத் திட்டம். அதுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தமிழகத்தின் உயர் அதிகாரிகளைத் தன்னிச்சையாக மாற்றி வருகிறார்கள். பல நூறு கோடி ரூபாய்களைக் கொண்டு வந்து கொட்டி மக்களை விலை பேசவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளோம். ஆனால், தமிழக மக்கள் இத்தகைய அதிகார பலத்திற்கும் பண பலத்திற்கும் ஒருபோதும் அடிபணியமாட்டார்கள். கேள்வி : “அதிமுகவின் முகமூடியை அணிந்து கொண்டு பாஜக தமிழகத்தைப் பிடிக்க முயல்கிறது” என்று நீங்கள் பிரச்சாரத்தில் பேசி வருகிறீர்கள், அது பற்றி விரிவாகச் சொல்லுங்கள். பதில்: இதுதான் கசப்பான உண்மை. நேரடியாகத் தேர்தல் களத்திற்கு வந்தால் தமிழக மக்கள் தங்களை நிராகரிப்பார்கள் என்பது பாஜகவுக்குத் தெரியும். அதனால்தான் அதிமுகவின் முதுகில் சவாரி செய்கிறார்கள். மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக இப்போது இல்லை. அது ஏற்கெனவே பல துண்டுகளாகப் பிளவுபட்டுவிட்டது. பாஜக இப்போது அதிமுகவை அரவணைப்பது என்பது ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ போன்றது; அது மெல்ல மெல்ல அதிமுகவையே அழித்துவிடும். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் தனது கூட்டணிக் கட்சிகளையே பாஜக எப்படி அழித்தது என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. அதிமுக தொண்டர்கள் இதைப் புரிந்து கொண்டு தங்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கேள்வி : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்ற உங்கள் நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள காரணிகள் என்ன? பதில்: இது வெறும் அரசியல் கணிப்பு அல்ல, மக்களின் உணர்வு. முதலாவதாக, திமுக அரசின் மகத்தான மக்கள் நலத் திட்டங்கள். இரண்டாவதாக, இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத ஒரு மிக வலிமையான மற்றும் கொள்கைப் பிடிப்புள்ள கூட்டணி. மூன்றாவதாக, பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான மக்களின் கடும் கோபம். குறிப்பாகச் சிறுபான்மை மக்கள் தங்களின் பாதுகாப்பு அரணாக இந்த அணியைத்தான் பார்க்கிறார்கள். இறுதியாக, 2026-க்கான திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாழ்வாதார வாக்குறுதிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த முறையை விட அதிக இடங்களில் இந்த முறை வெற்றி பெறுவோம் என்பது உறுதி. கேள்வி : தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஏதேனும் கடைசி நேர மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதா? பதில்: புதிய அதிசயங்கள் எதுவும் நிகழப்போவதில்லை. விஜய் அவர்கள் இப்போது வழங்குகிற ‘ஆட்சியில் பங்கு’ போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. பாஜக-அதிமுக அணி பணத்தை வைத்துத் தந்திரங்கள் செய்ய முற்படலாம். தேர்தல் ஆணையம் மூலம் அழுத்தங்களைக் கொடுக்கலாம். ஆனால், தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். என்னதான் முட்டுக்கட்டைகள் போட்டாலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் நல்லாட்சியை அமைக்கும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.