திருச்சி விரைவு செய்திகள்
21 Dec 2025, 3:21 pm

தீக்கதிர் செய்தி எதிரொலி: சாலையில் மின்விளக்குகள் சீரமைப்பு

பாபநாசம், டிச.21- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலக சாலையில், தாலுகா அலுவலகம் உள்ளது. அதுமட்டுமல்லாது, இதன் அருகில் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை, நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் மற்றும் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்தச் சாலை வழியாக கோபுராஜபுரம், உத்தமதானபுரம், மூலாழ்வாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல முடியும். இந்தச் சாலையில் இரவு நேரத்தில் பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகில் குறிப்பிட்ட தூரம் சாலையோரமுள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இந்தச் சாலையில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, குடியிருப்பு வாசிகளும் சிரமப்படுவதாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தியைத் தொடர்ந்து, தற்போது மின் விளக்குகள் எரிகின்றன. செய்தி வெளியிட்ட தீக்கதிர் இதழுக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். ஹைமாஸ் விளக்கு சீரமைப்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் தஞ்சாவூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஹைமாஸ் விளக்கு உள்ளது. இது பல மாதமாக எரியாதது குறித்து, தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, இந்த ஹைமாஸ் விளக்கு எரிகிறது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்

பாபநாசம், டிச.21- கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, கபிஸ்தலத்தில் நடைபெற்ற முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மானஷா, பரத்குமார், 300 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 57 பேருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு, கண்ணில் லென்ஸ் பொருத்தி பார்வையளிக்க மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இதில், கபிஸ்தலம் லயன்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்டத் தலைவர் துரைசாமி, முன்னாள் தலைவர் நாச்சியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புறம்போக்கு நிலத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி பொது மக்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.21- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை கிளைத் தலைவர் ஆர். மூக்கையன் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கே. பெஞ்சமின் துவக்கவுரையாற்றினார். ஒன்றியத் தலைவர் வி. தமிழ்ச்செல்வன் நிறைவுரையாற்றினார். மாநாட்டுக் கொடியினை ஒன்றியக் குழு உறுப்பினர் டி. சிவகாமசுந்தரி ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி. ஆசைத்தம்பி, எஸ். செல்வராஜ் உள்பட 19 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கிளையின் புதிய தலைவராக ஆர். ஜெயபாலமுருகன், செயலாளராக ஆர். மூக்கையன், பொருளாளராக வி. திருமுருகன், துணைத் தலைவராக எம். காந்திமதி, துணைச் செயலாளராக எஸ். செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில், “நம்பிவயல் கிராமத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றி, குடிமனை இல்லாத பொது மக்களுக்கு வழங்கி குடிமனைப் பட்டாவும் வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.