பேராவூரணி தேரோடும் பாதைகளில் மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைக்கும் பணி
24 Feb 2026, 3:55 pm
<p><strong>பேராவூரணி தேரோடும் பாதைகளில் மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைக்கும் பணி</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.24- பேராவூரணியில், தேரோடும் பாதைகளில் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் புதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள நீலகண்டப் பிள்ளையார் கோவிலின் தேரோடும் பாதையில் மூன்று இடங்களில் மின்கம்பிகள் குறுக்கே சென்று வந்தன. இதனால் தேரோட்ட தினத்தன்று மின் ஊழியர்கள் மின் கம்பிகளை அகற்றி, மீண்டும் தேர் நிலை வந்தடைந்ததும், மின்கம்பிகளை இணைத்து மின்விநியோகம் வழங்குவது வழக்கம். இதனால் இப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளுக்கு சில மணி நேரங்கள் மின் இணைப்பு வழங்க முடியாத நிலை இருந்தது. மேலும், தேரோட்ட தினத்தன்று மின் ஊழியர்கள் தேர் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகளை அகற்றி மீண்டும் இணைத்து, மின் இணைப்பு கொடுப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண, பேராவூரணி மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, மின் ஊழியர்கள் மூன்று இடங்களில் பூமிக்கு அடியில் உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை ஃபைபர் கேபிள் மூலம் புதைக்கும் பணியை மேற்கொண்டனர். சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், இதற்காக மூன்று இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இனி, தேரோட்டத்தின் போது மின் கம்பிகளை துண்டித்து அகற்றும் சிரமம் இருக்காது என்பதும், கடைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையும் தவிர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
