அலைகள் திரும்புவதில்லை! - முனைவர் தராசு ஷ்யாம் மூத்த பத்திரிகையாளர்
17 Mar 2026, 3:26 pm

அலைகள் திரும்புவதில்லை! - முனைவர் தராசு ஷ்யாம் மூத்த பத்திரிகையாளர்

தமிழக அரசியல் களம் 2026 சட்ட மன்றத் தேர்தலை நோக்கி நகரும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யைச் சுற்றியுள்ள விவாதங்கள் ஒரு ‘சினிமா ரிலீஸ்’ போன்ற பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன. ஆனால், திரைமறைவு சஸ்பென்ஸ் என்பது சினிமா வியாபாரத் திற்கு வேண்டுமானால் கைகொடுக்க லாம்; எதார்த்தமான அரசியல் களத்தில் அது பெரும்பாலும் ‘நிழல் யுத்தமாகவே’ முடிந்துவிடும். திரைமறைவு பேரங்கள் அண்மையில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரான நிகழ்வை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஒரு வழக்கின் சாட்சியாக ஆஜரானவர், வெளியே வரும்போது வாகனத்தின் ‘சன்ரூஃப்’ வழியாக ரசிகர்களுக்குக் கையசைப்பது எந்த விதமான சட்ட நடைமுறை? இது ஒரு விசாரணைக்கு வந்தவரின் நடத்தையாகத் தெரிய வில்லை; மாறாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட ஒரு ‘ரோடு ஷோ’ போலவே இருந்தது. இதற்கும் மேலாக, தில்லியில் தனியார் விமான இயக்கத்திற்கு அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு சாதாரண குடிமகனுக்குக் கிடைக்காத இந்தச் சலுகையை ஒன்றிய அரசு யாருக்காக நீட்டுகிறது? “விஜய் - பாஜக” உறவு குறித்த பேச்சுகள் வெறும் வதந்திகள் அல்ல; திரைமறைவு பேரம் என்பதை இத்தகைய நுணுக்கமான சிக்னல்கள் உறுதிப்படுத்துகின்றன. வாக்கு வங்கி கணக்கு உண்மையா? விஜய் கட்சியின் வாக்கு வங்கி குறித்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை நாம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அணுக வேண்டும். தமிழகத்தில் சுமார் 4.5 கோடி வாக்குகள் பதிவாகும் எனில், 20% என்பது 1 கோடி வாக்குகள். திமுக கூட்டணியே ஒட்டுமொத்தமாக 1.5 முதல் 2 கோடி வாக்குகளைத்தான் வாங்குகிறது. அப்படியிருக்க, தனியாக ஒரு கோடி வாக்குகள் என்பது விஜய்க்கு எட்டாக்கனிதான். தமிழகத்தில் சுமார் 1 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 50 லட்சம் பெண்கள். நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 25 லட்சம் பெண் வாக்காளர்களிடம் விஜய்க்குச் செல்வாக்கு இருக்கலாம். ஆனால், அதிலும் அஜித், தனுஷ் போன்ற பிற நடிகர்களின் ரசிகர்களைக் கழித்துப் பார்த்தால், எஞ்சியிருப்பது சொற்ப வாக்குகளே. விஜய்யின் உண்மையான பலம் என்பது 8% முதல் 10% (சுமார் 20 முதல் 40 லட்சம் வாக்குகள்) மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

கிராமப்புறங்களில் விஜய்க்குப் பெரிய கட்டமைப்பு இல்லாத சூழலில், இதுதான் எதார்த்தம். ராங் கார்டும், அதிமுகவின் நிபந்தனையும் அதிமுகவின் டி.ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் விஜய்க்கு ஒரு தெளிவான எச்சரிக்கை விடுக்கின்றனர். “எங்களோடு இருந்தால் நீங்கள் கெய்னர் (பலனடைவீர்கள்); இல்லையென்றால் லூசர் (நட்டமடைவீர்கள்)” என்பதே அதிமுக நிலைப்பாடு. ஆனால், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டு வந்தால் மட்டுமே கூட்டணி சாத்தியம். விஜய் தனது விக்கிரவாண்டி மாநாட்டில் “நானே முதலமைச்சர்” என அறிவித்தது ஒரு ‘ராங் கார்டு’ (Wrong Card). மாறாக, “ஆட்சியில் பங்கு” என்று சொன்னது ‘ரைட் கார்டு’ (Right Card).

ஆனால், அதிமுகவும் பாஜகவும் ஏற்கெனவே தங்களின் முதலமைச்சர் வேட்பாளர்களை முடிவு செய்துள்ள சூழலில், விஜய்யின் ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கை யாரால் ஏற்கப்படும் என்பது சந்தேகமே. வேட்பாளர் தேர்வும் களப்பணியும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது எளிது. ஆனால், வைப்புத் தொகையைத் (Deposit) தக்கவைக்கத் தேவையான 16.6% வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பெறுவது மிகப்பெரிய சவால். ஒவ்வொரு தொகுதியிலும் பலமும், செல்வாக்கும் கொண்ட வேட்பாளர்கள் தவெகவில் உள்ளனரா? வெறும் சினிமா ரசிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு பூத் கமிட்டி அமைப்பதோ, வாக்குகளைப் பிரிப்பதோ சாத்தியமற்றது.

பல தொகுதிகளில் 20,000 வாக்குகளைத் தாண்டுவதே தவெகவுக்குப் பெரும் போராட்டமாக இருக்கும். அலைகள் திரும்புவதில்லை அரசியல் அலைகள் சினிமாவின் அலை களைப் போன்றவையல்ல. சினிமாவின் ‘சஸ்பென்ஸ்’ வியாபாரத்திற்கு உதவும்; ஆனால் அரசியலில் மக்கள், தலைவர்கள் அல்லது கட்சிகளின் தெளிவான நிலைப்பாட்டையே எதிர்பார்க்கிறார்கள். தவெகவே திட்டமிட்டுப் பரப்பும் ‘ஹைப்’ செய்திகளுக்கும், கள எதார்த்தத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தனது ‘முதலமைச்சர்’ பிம்பத்தை விட்டுக்கொடுத்துவிட்டு ஒரு ஜூனியர் பார்ட்னராகக் கூட்டணிக்குச் செல்வாரா, அல்லது தனது வாக்கு பலத்தை முதல் தேர்தலிலேயே சோதித்துப் பார்த்து ‘லூசர்’ ஆகும் நிலையை ஏற்பாரா என்பதுதான் விஜய்யின் முன் உள்ள 2026-இன் மிகப்பெரிய சவால். தனியார் ஊடக விவாதங்களில் வெளிப்படுத்திய கருத்துக்களில் இருந்து