ஏஐ (AI) குமிழி: மீண்டும் ஒரு ‘டாட் காம்’ சரிவு காத்திருக்கிறதா? - பப்பா சின்ஹா
27 Nov 2025, 3:11 pm

2008-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் வீட்டுக்கடன் சந்தை சரிவால் (Housing collapse) பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தபோது, அதை முன்கூட்டியே கணித்தவர் முதலீட்டாளர் மைக்கேல் பர்ரி. ‘தி பிக் ஷார்ட்’ படம் மூலம் பிரபலமான அவர், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறையை உற்றுநோக்கி வருகிறார். அன்று எப்படிப் பொய்யான கணக்குகள் மற்றும் பலவீனமான கடன்கள் மூலம் சந்தை உப்ப வைக்கப்பட்டதோ, அதேபோன்றதொரு ‘ஊக வணிக வெறி’ (Speculative excess) இன்று ஏஐ(AI) துறையிலும் நடப்பதாக அவர் எச்சரிக்கிறார். இது வெறும் மைக்கேல் பர்ரியின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல; ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகமும் இந்தக் கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளது.

தொழில்நுட்பம் உண்மை; பொருளாதாரம் பொய்

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏஐ(AI) என்பது உண்மையான, மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய தொழில்நுட்பம். கூகுளின் ஜெமினி 3.0 (Gemini 3.0) போன்ற மாடல்கள் மனித அறிவுக்கு இணையாகச் செயல்படுகின்றன. ஆனால் பிரச்சனை தொழில்நுட்பத்தில் இல்லை; அமெரிக்கா அதை முன்னெடுக்கும் நிதிசார் முறையில்தான் உள்ளது.

நான்கு ஆபத்தான தூண்கள்:

இந்த ஏஐ (AI) குமிழி நான்கு பலவீனமான தூண்களின் மீது நிற்கிறது:

வருமானம் இல்லாத முதலீடு: மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் 2028-க்குள் 3 லட்சம் கோடி டாலர்களை (3 Trillion Dollars) ஏஐ-க்காகச் செலவிடத் திட்டமிட்டுள்ளன. ஆனால், இந்தச் செலவை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் வருமா என்பது கேள்விக்குறி. கணக்கு மோசடி: நிறு வனங்கள் தங்கள் சர்வர்களின் ‘தேய்மானக் காலத்தை’ (Depreciation period) 4 ஆண்டு களிலிருந்து 7 ஆண்டுகளாகக் கணக்கில் மாற்றிக் காட்டு கின்றன. இதன் மூலம் செலவைக் குறைத்துக் காட்டி, காகிதத்தில் லாபத்தை அதிகப்படுத்துகின்றன. இது ஒரு கணக்கு கண் கட்டி வித்தை. சுழற்சி முறை மோசடி: என்விடியா (Nvidia) நிறுவனம் சிப்களை விற்கும். அதை வாங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் என்விடியாவே மீண்டும் முதலீடு செய்யும். இது ஒரு மூடிய வட்டம். பணம் உள்ளே புழங்குவது போலத் தெரியும், ஆனால் இது ஆரோக்கியமான தொழில் வளர்ச்சி அல்ல. கடன் சுமை: டேட்டா சென்டர்களைக் கட்ட நிறுவனங்கள் மறைமுக வழிகளில், அதிக வட்டிக்குக் கடன் வாங்குகின்றன. இது 2008-இல் வங்கிகள் செய்த தவறையே நினைவூட்டுகிறது.

அமெரிக்காவின் தோல்வியும் சீனாவின் வெற்றியும்

ஏஐ போட்டியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள அணுகுமுறையில் பெரும் வித்தியாசம் உள்ளது.

அமெரிக்கா: ‘மனிதனை மிஞ்சும் அறிவு’ (AGI) என்ற மாயமானைத் துரத்துகிறது. இதற்காகப் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி, ஏகபோகத்தை (Monopoly) உருவாக்க முயல்கிறது. ஆனால் அமெரிக்காவின் மின்சாரக் கட்டமைப்பு (Power Grid)

இந்தத் தொழில்நுட்பத்தின் மின் தேவையைத் தாங்க முடியாமல் திணறுகிறது.

சீனா: திறமையான, குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. ‘டீப்சீக்’ (DeepSeek) போன்ற சீன மாடல்கள், அமெரிக்க மாடல்களை விட 10 மடங்கு குறைந்த செலவில் உருவாக்கப்படுகின்றன. சீனாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் (Renewable energy) அதிகம் இருப்பதால், மின்சாரத் தேவையை அவர்களால் எளிதாகச் சமாளிக்க முடிகிறது.

இதன் விளைவு? அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமே, “எங்களிடம் நிதி கேட்டு வரும் 80% புதிய நிறுவனங்கள் சீன ஓப்பன் சோர்ஸ் மாடல்களையே பயன்படுத்துகின்றன” என்று ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

1990-களில் இணையம் (Internet) வந்தபோது, ‘டாட் காம்’ குமிழி உருவானது. இணையம் உண்மையானதுதான், ஆனால் அதைச் சுற்றியிருந்த நிதி ஊகங்கள் பொய்யானவை. அந்தக் குமிழி உடைந்தபோது கோடிக்கணக்கான டாலர் செல்வம் “ஆவி”யானது. இன்று ஏஐ துறையிலும் அதுவே நடக்கிறது.

இது தொழில்நுட்பத்தின் மீதான தீர்ப்பு அல்ல; குறுகிய கால லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதார மாதிரியின் மீதான தீர்ப்பு. இந்தக் குமிழி உடையுமா என்பது கேள்வியல்ல; எப்போது உடையும் என்பதே கேள்வி. அது உடையும்போது, வங்கிகள், பென்ஷன் நிதிகள் மற்றும் சாமானிய உழைக்கும் மக்களே அதன் பாதிப்பைச் சுமக்க நேரிடும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, நவ. 23

- தமிழில் சுருக்கம் : ராஜூ பாய்