மக்களவையில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் பிரச்சனை!
5 Dec 2025, 4:21 pm
<p><strong>மக்களவையில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் பிரச்சனை!</strong></p>
<p>புதுதில்லி, டிச. 5 - திருப்பரங்குன்றம் விவகாரம், வெள்ளிக்கிழமையன்று மக்களவையில் எதிரொலித்தது. கேள்வி நேரத்தின்போது, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, இந்தப் பிரச்சனை எழுப்பினார். திருப்பரங்குன்ற விவகாரத்தை காரணம் காட்டி தமிழ் நாட்டில் சமூக விரோத சக்திகள், மதக்கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அறநிலையத் துறை அதிகாரிகளால், கார்த்திகை தீபம் ஏற்றப் படவேண்டுமா? அல்லது யாராவது அப்பகுதியில் வாழும் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் அந்த தீபத்தை ஏற்ற வேண்டுமா? என்ற சிக்கலில், நீதிமன்றத்தை நாடி, தனி நபர் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நீதிபதி மூலமாக உத்தர வையும் பெற்றுவிட்டார்கள் என்று கூறினார். இவ்வாறு டி.ஆர். பாலு, நீதிபதியை ஆர்எஸ்எஸ்-காரர் என்று அழைத்ததை எதிர்த்து, பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்ட னர். நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும், சட்டத் துறையினர் குறித்து இவ்வாறு பேசக் கூடாது என்று அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். அமைச்சர் எல். முருக னும், டி.ஆர். பாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே, திருப்பரங்குன்ற விவகாரம் ஒன்றிய அரசு சம்மந்தப்பட்டது இல்லை என்பதால், அதுதொடர்பாக விவாதிக்க வேண்டிய தேவை இல்லை என்றும், டி.ஆர். பாலுவின் கருத்தை அவைக்குறிப்பில் நீக்குவதாகவும் சபாநாயகர் அறிவித்தார். முன்னதாக, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையின் மையப்பகுதியில் கூடி தி.மு.க. எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவையிலும் இந்த பிரச்சனையை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எழுப்பினர்.</p>
