தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வளங்களைத் தர மறுப்பதும், உள்ளூர் வளங்களைச் சுரண்டுவதுமே ஒன்றிய பட்ஜெட்டின் நோக்கம்!

1 Feb 2026, 3:51 pm
வளங்களைத் தர மறுப்பதும், உள்ளூர் வளங்களைச்  சுரண்டுவதுமே ஒன்றிய பட்ஜெட்டின் நோக்கம்!
<p><strong>வளங்களைத் தர மறுப்பதும், உள்ளூர் வளங்களைச் &nbsp;சுரண்டுவதுமே ஒன்றிய பட்ஜெட்டின் நோக்கம்!</strong></p> <p>சு. வெங்கடேசன் எம்.பி., ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் வஞ்சகம். ஒரு சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்த நேரத்தில், பல புதிய திட்டங்கள் வரும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், குடியரசுத் தலைவர் உரையிலேயே தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருந்தது நமக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சியளித்தது; இப்போது பட்ஜெட்டிலும் அதே நிலை நீடிக்கிறது. வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு திருக்குறளோ அல்லது சங்க இலக்கியப் பாடலோ கூட இம்முறை இடம்பெறவில்லை என்பது அரசின் தமிழ்நாட்டின் மீதான பாஜக அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. வளங்களைத் தராத வஞ்சகம் - வளங்களைச் சுரண்டும் தந்திரம் இந்த பட்ஜெட்டின் முதன்மையான நோக்கம் தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் தர மறுப்பதும், அதே சமயம் தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்குத் தனியான முனைப்பு காட்டுவதும்தான். &lsquo;அரிய வகை கனிமங்களுக்கான ரயில் வழித்தடம்&rsquo; (Rare Earth Corridor) தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு அரிய வகை கனிமங்களை ஏலம் விடும் உரிமை மாநிலங்களிடம் இருந்தது. அதைச் சட்டம் மூலம் பறித்துத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஒன்றிய அரசு, இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது வளங்களைச் சூறையாடத் தனியான வழித்தடத்தை அறிவித்துள்ளது. அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்கியதைப் போலவே, இந்த அரிய வகை கனிமங்களையும் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கவே அரசு துடிக்கிறது. எங்கள் வரிகளைப் பறிப்பதற்கும், வளங்களைச் சுரண்டுவதற்கும் மட்டும் தமிழ்நாடு இவர்களுக்கு ஞாபகம் வருகிறது. அகழாய்வும் மருத்துவமும்: திட்டமிட்டப் புறக்கணிப்பு குஜராத்தில் தொடங்கி ஹரியானா வரை பல இடங்களில் அகழாய்வுத் திட்டங்களை அறிவித்துள்ள நிதியமைச்சர், உலகமே உற்றுநோக்கும் கீழடியைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆயுர்வேத மருத்துவத்திற்கு மூன்று பெரிய அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்; ஆனால், தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவத்தை அறவே மறந்துவிட்டார்கள். அதேபோல், மதுரையின் நீண்டகாலக் கோரிக்கையான &lsquo;நைபர்&rsquo; (NIPER) கல்வி நிறுவனம் குறித்து ஏற்கனவே அமைச்சகம் முடிவெடுத்தும், இந்த பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்பு வராதது மதுரையைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் செயலாகும். முடக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் தமிழக அரசு பலமுறை முன்மொழிவுகளை அனுப்பியும் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒற்றை பைசா கூட ஒதுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ரயில்வே திட்டங்களுக்காக ஒன்றிய அரசு அறிவித்த ₹32,000 கோடியில் தமிழ்நாட்டின் புதிய வழித்தடங்களுக்குக் கிடைத்தது வெறும் ₹302 கோடிதான். கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஒரு புதிய ரயில்வே வழித்தடம் (New Line) கூட உருவாக்கப்படவில்லை. உள்கட்டமைப்பை ஒரு பத்தாண்டு காலத் தேக்கத்தில் நிறுத்திவிட்டு, 2047-க்கான இலக்கு என்று பேசுவது தமிழ்நாட்டைக் கழித்துவிட்டுப் பார்க்கும் திட்டமா? வரலாற்றைத் திரிக்கும் கலாச்சாரப் பயிற்சிகள் மதம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்க 10,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதில் &lsquo;வரலாறு&rsquo; என்ற சொல்லே இல்லை. இந்தியாவின் பன்முகப்பட்ட வரலாற்றையோ, அறிவியல் ரீதியான பண்பாட்டையோ அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இவர்கள் தயாராக இல்லை. மாறாக, தங்களின் இந்துத்துவ திட்டங்களைப் புகுத்தவும், நம்பிக்கைகளின் பின்னால் மக்களைக் கொண்டு செல்லவும் நிதியை மடைமாற்றம் செய்கிறார்கள். ஏஐ (AI) தொழில்நுட்பத்தைக் கூட இவர்கள் அறிவியல் பூர்வமான பண்பாட்டிற்குப் பயன்படுத்தப்போவதில்லை என்பது தெளிவு. நிதியமைச்சர் கூறும் பொய் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு சமமாக வழங்கப்படுவதாக நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், தமிழ்நாடு வழங்கும் ஒரு ரூபாய் வரிக்கு வெறும் 29 பைசா மட்டுமே திரும்பத் தரப்படுகிறது; அதே சமயம் உத்தரப் பிரதேசத்திற்கு ₹2.70 பைசா வழங்கப்படுகிறது. பேரிடர் நிவாரணம் முதல் மாநில உரிமைகள் வரை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படுகிற வஞ்சகம் முற்றிலுமாக நிவர்த்தி செய்யப்படவில்லை. பாஜக நேர்மையான முறையில் மக்களிடம் வாக்கு கேட்கத் தயாராக இல்லை. மக்களுக்குத் திட்டங்களைச் செய்து வாக்கு பெறுவதை விட, மற்ற கட்சிகளை வளைத்துப் போடுவதிலும், ஈடி (ED) மற்றும் ஐடி (IT) சோதனைகள் மூலம் மிரட்டுவதிலும், குறுக்கு வழியில் கூட்டணி அமைப்பதிலும்தான் அவர்கள் 100% நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றையும், உரிமைகளையும் வஞ்சிக்கும் இந்த பட்ஜெட்டிற்கு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இது ஒரு கட்சியின் கோரிக்கை அல்ல; ஏழு கோடி மக்களின் உரிமைக்குரல்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.