தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சொல் விருந்தோம்பல்… - ஐவி.நாகராஜன்

11 Jul 2026, 9:10 pm
சொல் விருந்தோம்பல்… -  ஐவி.நாகராஜன்

சொல் விருந்தோம்பல்… - ஐவி.நாகராஜன்

நண்பர் ஒருவர் சர்க்கரை பாதிப்புக்காகப் பிரபல மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார். மருத்துவரைச் சந்தித்துப் பேசியபோது எடுத்த எடுப்பிலேயே, “சர்க்கரைக்கெல்லாம் ஒன்றும் பண்ண முடியாது. வந்தால் அனுபவிக்க வேண்டியதுதான். நீங்கள் தமிழ்நாட்டில் எந்தவொரு மருத்துவரிடம் போய்ப் பார்த்தாலும் இந்த ஏழு மருந்துகளைத்தான் பரிந்துரை செய்வார்கள். மருந்துகளை மாற்றி மாற்றி எழுதிக் கொடுப்பார்கள். மற்றபடி ஒன்றும் மாயாஜாலம் நிகழ்ந்திடாது” என்று தன் பங்குக்கு என்னை மிரட்டினார். ஏற்கனவே நொந்துபோய் ஏதாவது சர்க்கரைக்கு நிவாரணம் கிடைக்காதா என்று மருத்துவரிடம் போய் நின்றால், அவரது வார்த்தைகளில் நிவாரணத்திற்குப் பதில் ரணம்தான் மிஞ்சியது. இதன் பிறகு மற்றொரு மருத்துவரிடம் சென்றோம். எனது நண்பர் என் சர்க்கரைப் பிரச்சினையையும், நான் கடுமையான உணவுப் பொதுக் கட்டுப்பாட்டில் இருப்பதையும் அவரிடம் கூறினார். அதற்கு அந்த மூத்த அனுபவமுள்ள மருத்துவர், “என்னங்க நீங்க, தமிழ்நாடு முழுவதும் சுத்துறீங்க... நல்லா சாப்பிட வேண்டாமா? நாம் உழைப்பது ஒருசாண் வயிற்றின் பசிக்காகத்தானே, அந்தப் பசியிலும் என்ன கட்டுப்பாடு? சாப்பாட்டிலும் கட்டுப்பாடுன்னா நல்லாவா இருக்கும்?” என்று கனிவோடு கேட்டார். மேலும் அவர், “சர்க்கரை என்பது நமக்குள்ள ஒரு சிறிய குறைபாடு. அது கூடினாலும் குறைந்தாலும் நாம் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அந்தச் சிறிய குறைபாட்டுக்காக அளவுக்கு அதிகமான உணவுக் கட்டுப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டாம். ஓரளவு சத்தான ஆகாரத்தைச் சாப்பிடுங்கள். முதலில் சர்க்கரை என்ற பயத்தை மனதிலிருந்து உதறித் தள்ளுங்கள். மற்றதை ஒரு மருத்துவராக நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னதும், எனது நண்பருக்கும் எனக்கும் மீண்டும் பிறந்து வந்தது போன்றதொரு புதிய உற்சாகம் பிறந்தது.

சோர்ந்த மனம் தேற்றும் இன்சொல்

இதுதான் ‘சொல் விருந்தோம்பல்’ என்று அழைக்கப்படுவது. விருந்தோம்புதல் எந்த அளவிற்கு உறவையும், நட்பையும் பலப்படுத்துகிறதோ, அந்த அளவிற்குச் சொல் விருந்தோம்பல் என்பது சோர்ந்துபோன மனதையும் உற்சாகமாக்கி, நம் வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்கான நம்பிக்கையான பொழுதாக மாற்றிக்கொண்டே இருக்கிறது. உங்களால் அடுத்தவர்களுக்கு ஒருவேளை உணவு அளிக்க முடியாமல் இருக்கலாம்; ஆனால், உங்கள் நாவண்மை ஒருபொழுதும் அடுத்தவர்களைச் சோர்வடையச் செய்யாமல் இருந்தால், நீங்கள்தான் சொல் விருந்தோம்பலின் உண்மையான நாயகர்! குறிப்பாகப் பணம் இருக்கும், வசதி இருக்கும், பல்வேறு வாய்ப்புகள் இருக் கும்; ஆனால், நிம்மதி இல்லா மல் புலம்பும் நண்பர்கள் அதிகம்பேரை நாம் சமூகத்தில் பார்க்கலாம். அவர்களுக்கு நீங்கள் மாபெரும் விருந்து கொடுத்து உபசரிக்க வேண்டிய அவசியம் இல்லை. “உங்களுக்கு என்ன பிரச் சினை, என்னிடம் சொல் லுங்கள், நிச்சயம் உதவு கிறேன்” என்ற ஒற்றை நம்பிக் கையான வார்த்தையை நீங்கள் சொல்லிப் பாருங்கள்; அந்த இடத்தில் உங்களுக்கும் அந்த நண்பருக்குமான நட்பு ஒரு புதிய பரிணாமத்தை எட்டும்.

வார்த்தைகளில் காட்டும் அக்கறை

அதே நண்பரிடம் இப்படிச் சொல்லிப் பாருங்கள்: “எப்போது பார்த்தாலும் உனக்கு இதே புலம்பல்தானா? வேறு நல்ல விஷயமே கிடையாதா? என்ன வாழ்க்கை வாழ்கிறாய் நீ!” என்று நீங்கள் கடுமையான வார்த்தைகளைக் கொட்டிப் பாருங்கள். அடுத்த முறை உங்கள் முகத்தைப் பார்க்கச் சங்கடப்பட்டு அவர்களே ஓட்டம் பிடித்து விடுவார்கள். துயரத்திலோ, சோகத்திலோ உள்ள நண்பருக்கு நமது ஆறுதல் கொடுக்கும் வார்த்தைகளும்; துன்பப்படும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை வார்த்தைகளும்தான் சொல் விருந்தோம்பலுக்கான மிகச்சிறந்த அடிப்படையாகும்.

வெளி உலகத்தில் மட்டுமல்ல... வீட்டுக்குள்ளும்!

வெளி உலகத்தில் மட்டுமல்ல, நம் வீட்டுக்குள்ளும் இதன் மகத்தான வலிமையை நீங்கள் எளிதாக உணர முடியும். மனைவி சமைத்த சாப்பாட்டை, “என்ன சாப்பாடு இது... சாப்பிட முடியுதா?” என்று நீங்கள் சலித்துக் கொள்வதற்கும்; “சாப்பாடு நல்லா இருக்கு, நாளைக்குக் கொஞ்சம் உப்புக் காரத்தைக் குறைச்சுக்கோமா” என்று அன்பாகச் சொல்வதற்கும் உள்ள வேறுபாடுதான் சொல் விருந்தோம்பல்! மனைவியின் வாழ்நாள் முழுவதுமான விருந்தோம்பல் பண்புக்கு உங்களால் ஒருபோதும் ஈடுகொடுக்க முடியாது; அதற்குப் பதிலுக்குச் சொல் விருந்தோம்பல் கூடத் தேவையில்லை. “அப்படிப் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை; என் உணர்வு, என் நாக்கு, என் இஷ்டப்படிதான் பேசுவேன்” என்றால், அதன் பின்விளைவுகளுக்குப் பிறகு யாரும் பொறுப்பேற்க முடியாது. சொல் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் குடும்பத்திலும் சமூகத்திலும் செயல்படுவது, தேவையற்ற மனப் பிரச்சினைகளைக் குறைக்கப் பெரிதும் வழிவகுக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.