மேற்கு ஆசியாவில் வெடித்த ராணுவ மோதலும் காலம் தவறிய மோடியின் பயணமும் - ச.வீரமணி
8 Mar 2026, 3:42 pm

மேற்கு ஆசியாவில் வெடித்த ராணுவ மோதலும் காலம் தவறிய மோடியின் பயணமும்

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் மிகவும் தவறானது என்பதும், முறையற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டது என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது. இது வெறும் தார்மீகக் கேள்வி மட்டுமல்ல; புவிசார் அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எல்லைக்குள்ளும் செல்கிறது. காசா இனப்படுகொலையின் கொடூரம், பாலஸ்தீன மக்களையும் காசா பகுதியையும் தாக்கிய இடிபாடுகளுக்கு இடையே இன்னும் முழுமையாக தீரவில்லை. மேலும், மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அதிவேகத்தில் விரிவாக்கப்படுவது, ‘இரு நாடுகள் தீர்வின்’ (two-state solution) சாத்தியத்தையே தகர்த்திருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், படுகொலைகள் தொடர்ந்து ஆபத்தான வேகத்தில் தொடர்கின்றன என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது.

டொனால்டு டிரம்ப் தலைமை யிலான ‘அமைதி வாரியத்தால்’ (Board of Peace) இயல்புநிலையை மீட்டெடுக்க முடியவில்லை; உண்மையில் அது அதன் நோக்கமும் அல்ல. ஐ.நா. அமைப்பின் வேர்களையே சிதைக்கும் ஒரு ஏற்பாட்டை உருவாக்குவதற்காகவே அது வடிவமைக்கப் பட்டுள்ளது. டொனால்டு டிரம்பின் தலைமையைத் தவிர, இந்தச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் திசைகாட்டியாக இருப்பவர், இராக் படையெடுப்பு காலத்தின் மிகவும் வெறுக்கப்பட்ட கதாபாத்திரமான டோனி பிளேர் ஆவார். இந்தியாவின் நலன்கள் தார்மீகப் பண்புகளுக்கு அப்பால், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நலன்கள் மேற்கு ஆசியாவில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

வளைகுடா நாடுகள் மற்றும் ஈரானுடனான இந்தியாவின் வர லாற்று ரீதியான நாகரிகத் தொடர்புகள் காலத்தால் அழியாதவை. நவீன காலத்தில், இப்பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவின் பல மாநிலங்களின் பொருளாதாரம் மேற்கு ஆசியாவிலிருந்து வரும் அந்நியச் செலாவணியையே நம்பியுள்ளது. மேலும், நமது எரிபொருள் விநியோகத்தின் பெரும்பகுதி ‘ஹோர்முஸ் ஜலசந்தி’ வழியாகவே நடைபெறுகிறது. காசா இனப்படுகொலை தொடங்கியது முதல், சியோனிச யூத இனவெறி இஸ்ரேலின் நடவடிக்கை கள் அரபு நாடுகளின் வீதிகளில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தின. இஸ்ரேலுக்கு எதிரான இந்த எதிர்ப்பு, வளைகுடா நாடுகளையும் மேற்கு ஆசிய அரசாங்கங்களையும் எவ்வளவு பாதித்தது என்றால், ‘ஆபிரகாம் உடன்படிக்கைகள்’ (Abraham Accords) முற்றிலுமாக ஸ்தம்பித்தன.

ஈரான் இஸ்லாமியக் குடி யரசுதான் இந்த எதிர்ப்பை முன்னின்று நடத்தியது என்பதில் ஐயமில்லை. மோடி அரசின் மிகப்பெரும் துரோகம் இந்தப் பின்னணியில்தான், மோடிக்கும் நேதன்யா குவுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவு மிக மோசமான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மவுனம் காத்த மோடி, ‘ஹோலோகாஸ்ட்’ (Holocaust) பலிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தியது பல செய்திகளைச் சொல்கிறது. காசா இனப்படு கொலை குறித்த இந்தியாவின் முந்தைய எதிர்ப்பை பிரதமர் மோடி இதன் மூலம் கிட்டத்தட்ட மாற்றியமைத்துள்ளார். உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இஸ்ரேலுக் குள்ளேயே தனது நம்பகத்தன்மையை இழந்து போராடும் நேதன்யாகு ஆட்சிக்கு வழங்கப் பட்ட இந்த ஆதரவு, இராஜதந்திரத்தின் அடிப்படை களுக்கே எதிரானது. இது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபு மற்றும் அணிசேராக் கொள்கைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும். இஸ்ரேலிய நாடாளுமன்றமான ‘நெசெட்’ (Knesset)-இல் மோடி உரையாற்றியபோது, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் அதைப் புறக்கணித்த திலேயே இது வெளிப்பட்டது.

அமெரிக்கா மற்றும் இந்தி யாவுடன் ஒரு ‘அறுகோணக் கூட்டணியை’ (Hexagonal Alliance) உருவாக்கப்போவதாக நேதன்யாகு அறி வித்தது மற்றுமொரு அபாயச் சங்காகும். இந்தியா வின் பாதுகாப்பு மற்றும் இராணுவத் தளவாட விநியோகம் இஸ்ரேல் வழியாகவே மாற்றியமைக்கப் படும் என்பதை இது உணர்த்துகிறது. இந்தியாவின் சுயாட்சி மற்றும் தேசிய நலனுக்கும் இந்தப் பயணத்திற்கும் மிகக் குறைந்த தொடர்பே உள்ளது; மாறாக, இது அமெரிக்காவின் புவிசார் அரசியல் திட்டத்திற்கு இந்தியா அடிபணிந்துவிட்டதையே காட்டுகிறது. ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தயாராகி வருவதை இந்திய அரசியல் மற்றும் உளவுத்துறை அறியாமல் இருந்தது வெறும் அப்பாவித்தனம். காசாவில் இஸ்ரேலின் அடாவடிப் போக்குக்கு எதிரான பிராந்தியப் போராட்டத்தை முன்னெடுத்தது, சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டியது போன்ற காரணங்களால் ஈரான் ஒரு முக்கிய இலக்காக மாற்றப்பட்டது.

ரஷ்ய, சீன செல்வாக்கு தான் பிரச்சனை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் போலித் தனம் இப்போது அம்பலமாகியுள்ளது. “லெனின் இறந்துவிட்டார்” என்று முதலாளித்துவவாதிகள் கூச்சலிடலாம்; ஆனால், “ஏகாதிபத்தியமும் போரும் சியாமி இரட்டையர்கள்” என்ற அவரது கூற்று இன்றும் உண்மையாகவே இருக்கிறது. சியோனிச ‘பெரிய இஸ்ரேல்’ திட்டத்திற்கு ஈரானின் எதிர்ப்பை ஒடுக்க இஸ்ரேல் தூண்டிய நிலையில், டிரம்ப் நிர்வாகம் ஈரானில் ‘ஆட்சி மாற்றத்தை’ (Regime Change) ஏற்படுத்தத் துடிக்கிறது. இதன் மூலம் இப்பிராந்தியத்தில் ரஷ்ய மற்றும் சீன செல்வாக்கை அகற்றித் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயல்கிறது. டிரம்ப் ஒரு ‘அமைதி ஜனாதிபதி’ என்பது அப்பட்ட மான பொய். ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த புகார்கள் ஆரம்பத்திலிருந்தே உள்நோக்கம் கொண்டவை. இஸ்ரேல் ரகசியமாக அணு ஆயுதத் திறனைக் கொண்டுள்ளது என்பது ஊரறிந்த உண்மை.

ஆனால், தான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க வில்லை என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்ததோடு, ஆய்வாளர்களுக்கும் அனுமதி அளித்தது. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஒரு அரசியல் உள்நோ க்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டபோதுதான் இந்தப் பேச்சுவார்த்தைகள் முறிந்தன. 2025-இல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் அறிவித்ததும், ஓமன் மூலமாக நடந்த பேச்சுவார்த்தைகளும் வெறும் கண்துடைப்பே ஆகும்.

உண்மையில் வளைகுடாவில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் சக்தியைத் திரட்டவே அந்த நேரம் பயன்படுத்தப்பட்டது. இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தியுள்ள தாக்குதல், மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை நிரூபிக்கிறது. தடம் புரளும் அமெரிக்காவின் கணக்கு மோடி இந்தியா திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடந்துள்ள ‘காலவரிசை’, இந்தியாவை இந்த இராணுவத் தாக்குதலின் ஒரு கூட்டாளியாகவே காட்டுகிறது. ஆனால், அமெரிக்காவின் கணக்கீடுகள் தடம் புரண்டுவிட்டன. ஈரான், அமெரிக்கத் தளங்கள் உள்ள மேற்கு ஆசியா முழுவதும் பதிலடி கொடுத்துள்ளது.

டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களில் ஈரானிய ஏவுகணைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளன. அலி காமேனி உள்ளிட்ட தனது நாட்டின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகு, ஈரான் உயிர்வாழ்வதற்காகவே இந்தப் போரைத் தொடங்கி யுள்ளது. இது கோழைத்தனம் அல்ல; தற்காப்பு. ஈரான் தனது பரவலாக்கப்பட்ட தலைமைத்துவக் கட்டமைப்பின் மூலம் இந்த மோதலை பிராந்திய மயமாக்கியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், இந்தியாவின் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு எண்ணெய் விலைகள் விண்ணைத் தொடும். இந்திய வெளியுறவுக் கொள்கையின் இந்தத் தோல்வியின் சுமையை இந்திய மக்களே சுமக்க வேண்டியிருக்கும்.

உடனே நிறுத்துங்கள்! இது, தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையையே வெட்டும் அறிவற்றச் செயலுக்கு ஒப்பானது. இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவின் போர்த் திட்டங்களுக்கு அடிபணியச் செய்ததன் மூலம், ‘தெற்கின் தலைவர்’ (Leader of the South) என்ற இந்தியாவின் பிம்பம் சிதறிப்போயுள்ளது. உடனடி யாக இராணுவ விரோதப் போக்கு நிறுத்தப்பட்டு, அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மார்ச் 08, 2026 தமிழில் சுருக்கம் : ச.வீரமணி