தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏகாதிபத்தியத்தின் ‘குண்டர் காலக்கட்டம்’ - பேரா.பிரபாத் பட்நாயக்

13 Jan 2026, 3:17 pm
ஏகாதிபத்தியத்தின் ‘குண்டர் காலக்கட்டம்’ -  பேரா.பிரபாத் பட்நாயக்

ஏகாதிபத்தியத்தின் ‘குண்டர் காலக்கட்டம்’

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிந்தைய உலகத்தைப் பற்றி தாராளவாத முதலாளித்துவ எழுத்தாளர்கள் ஒரு மாயையான சித்திரத்தை முன்வைத்தனர். ‘சோசலிச சவால்’ முடிவுக்கு வந்ததால், இனி உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்கும் என்றும், அமைதியும் பொருளாதார நிலைத்தன்மையும் நிலவும் என்றும் அவர்கள் பிரகடனம் செய்தனர். ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் முதலாளித்துவ நாடுகள் வழங்கிய நலத்திட்டங்களும், காலனி நாடுகளுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமும் ஏகாதிபத்தியத்தின் கருணையால் வந்தவை அல்ல. மாறாக, சோசலிச முகாமின் வலுவான சவாலை எதிர்கொள்ள முடியாமல், தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஏகாதிபத்தியம் செய்துகொண்ட தற்காலிக ‘விட்டுக்கொடுப்புகள்’ மட்டுமே அவை. இன்று அந்தச் சோசலிச சோவியத் ஒன்றியத்தின் சவால் இல்லாத நிலையில், ஏகாதிபத்தியம் தனது இயல்பான வேட்டைக்கார மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனை ஏகாதிபத்தியத்தின் ஒரு “குண்டர் காலக்கட்டம்” (Gangster Phase) என்று அழைக்கலாம்.

சர்வதேச சட்ட மீறல்களும் இறையாண்மையின் வீழ்ச்சியும் இந்தக் ‘குண்டர் காலக்கட்டத்தின்’ மிகத் துணிகரமான அத்துமீறலாக வெனிசுலாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதைச் சொல்லலாம். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஒரு நாட்டின் தலைவரையும் அவர் மனைவியையும் கடத்தி, விலங்கிட்டு, எவ்வித ஆதாரமுமின்றி போலி வழக்குகளைச் சுமத்தி அமெரிக்காவிற்கு இழுத்துச் சென்றிருப்பது அனைத்துச் சர்வதேச சட்ட விதிகளையும் மீறும் கொடிய செயலாகும். வெனிசுலாவை நேரடியாக ஒரு காலனியாக மாற்றி, அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவும் நோக்கம் இதில் தெளிவாகத் தெரிகிறது. இது ஏதோ ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல. இராக்கின் சதாம் உசேனை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து அகற்றித் தூக்கிலிட்டது, லிபியாவின் மும்மர் கடாபியின் கொடூரக் கொலை, சிரியா மீதான ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என இது ஒரு நீண்ட சங்கிலித் தொடர். தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்க்கும் பாலஸ்தீன மக்களின் உரிமையைக் கூட மதிக்காமல், காசாவை ஒரு அமெரிக்கப் பிரதிநிதியின் கீழ் இயங்கும் காலனியாக மாற்றத் துடிப்பது ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட அராஜகமாகும். டொனால்டு டிரம்ப் நியமிக்கும் ஒரு ‘வைஸ்ராய்’ மூலம் காசாவை ஒரு ரியல் எஸ்டேட் வணிகப்  பொருளாக மாற்றத் துடிப்பது, நவீன ஏகாதிபத்தியம் எவ்வளவு தரம் தாழ்ந்தது என்பதற்குச் சான்றாகும்.

தாராளவாத முகமூடியும் டிரம்ப்பின் வெளிப்படைத்தன்மையும் தாராளவாதச் சிந்தனையாளர்கள் டொனால்டு டிரம்ப்பை ஒரு விசித்திரமான நபராகச் சித்தரித்து, அனைத்துப் பழிகளையும் அவர் மீது சுமத்த முயல்கின்றனர். ஆனால், மேற்கூறிய பெரும்பாலான ஆக்கிரமிப்புச் சம்பவங்கள் டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பே தொடங்கிவிட்டவை. முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் குண்டர் நடவடிக்கைகளை “நாகரிகமான” சொற்களுக்குப் பின்னால் மறைத்துச் செய்தனர்; டிரம்ப் அத்தகைய வேடங்கள் இன்றி நேரடியாகச் செய்கிறார், அவ்வளவுதான். இதில் மிக மோசமான அம்சம் என்னவென்றால், மனித உரிமை பேசும் ஐரோப்பிய நாடுகளும், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவும் கூட இந்த ஏகாதிபத்திய அத்துமீறல்களைக் கண்டிக்காமல் மௌனமாக ஆதரிக்கின்றன. மதுரோ ஒரு ‘சர்வாதிகாரி’ என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடவும் அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டவும் அமெரிக்காவிற்கு யார்  அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விக்கு விடை தருவதில்லை. மதுரோ ஜனாதிபதியாக நீடிப்பதற்கு அரசியல் சட்டப்பூர்வத் தன்மை இல்லை எனக் கூறுபவர்கள், அமெரிக்கா முன்மொழியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் எங்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

பொருளாதாரச் சுரண்டல்: எண்ணெய் வளக் கொள்ளை வெனிசுலாவின் உள்நாட்டுப் பூசல்களைப் பயன்படுத்துவதாகக் கூறினாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் பொருளாதார லாபமே. இதனை டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். “நாங்கள் மண்ணிலிருந்து பெரும் செல்வத்தை எடுக்கப்போகிறோம்” என்ற அவரது கூற்று, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதையே குறிக்கிறது. உலகின் 17 சதவீத எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள வெனிசுலா, தனது வளங்களைத் தேசியமயமாக்கியதே ஏகாதிபத்தியத்தின் ஆத்திரத்திற்குக் காரணம். ஜனாதிபதியைக் கடத்தியாவது அல்லது ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியாவது அந்த வளங்களை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவே இந்தக் ‘குண்டர் அரசியல்’ முன்னெடுக்கப்படுகிறது. இத்தகைய கொள்ளை என்பது ஏகாதிபத்தியத்தின் மையமான பண்பாகும். கடந்த காலங்களில் குவாதமாலாவின் அர்பென்ஸ், ஈரானின் மொசாடெக் அல்லது சிலியின் சால்வடார் அலண்டே போன்றவர்களுக்கு எதிராகச் சதி செய்தபோது, அமெரிக்கா ஒரு திரைக்குப் பின்னால் இருந்து வேலை செய்தது. ஆனால் இப்போது அத்தகைய எந்தத் தார்மீகத் திரையும் கூட இன்றி நேரடியாகத் தாக்குதல் நடத்துகிறது. இது கனிம வளம் கொண்ட நாடுகளுக்கு மட்டுமான ஆபத்து அல்ல; ஏகாதிபத்திய  எதிர்ப்பு உறுதி கொண்ட கியூபா, மெக்சிகோ போன்ற நாடுகளையும் குறிவைக்கும் ‘மன்றோ கோட்பாட்டை’ (Monroe Doctrine) மீண்டும் நிலைநாட்ட அமெரிக்கா துடிக்கிறது.

சித்தாந்த ரீதியான தடுப்பரணின் தேவை கியூபா ஏவுகணை நெருக்கடியின் போதோ அல்லது சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட போதோ சோவியத் யூனியன் ஒரு வலுவான தடுப்பரணாக நின்றது. அன்று ஏகாதிபத்தியம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்று அந்தச் சமநிலை இல்லாதது உலக நாடுகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகும். இருப்பினும், ஏகாதிபத்தியத்தின் இந்த இறுதிக்கட்ட ஆதிக்கம் நீண்ட காலம் நீடிக்காது. மதுரோ கடத்தப்பட்ட பிறகு பொறுப்பேற்ற டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்க மிரட்டல்களுக்குப் பணியாமல் அதனை எதிர்ப்பது ஒரு முக்கியத் திருப்பமாகும். அமெரிக்கா இடும் கட்டளைக்கு வெனிசுலா அடிபணியும் என்ற டிரம்ப்பின் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. மூன்றாம் உலக நாடுகளின் மக்களும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் மீண்டும் ஒரு காலனிய அடிமைத்தனத்திற்குள் செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஏகாதிபத்தியத்தின் இந்தக் குண்டர் காலக்கட்டம் அதன் வீழ்ச்சிக்கான விதையையும் தன்னுள் கொண்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி : ஜனவரி 11, 2026 /  தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.