நரியும் திராட்சையும்
10 Jan 2026, 12:25 pm
<p><strong>நரியும் திராட்சையும்</strong></p>
<p>நிலா பாப்பாவுக்கு பள்ளிக்கூடம் விடுமுறை. விளையாட யாருமே இல்லை. பொழுதே போகவில்லை. அம்மாவிடம் போய் ஒரு கதை சொல்லும்படி கூறினாள். உடனே அம்மா அவளைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஒரு கதை சொன்னாள். “ ஒரு ஊரில் ஒரு நரி இருந்துச்சு.அந்த நரி ரொம்ப பசியோட இருந்தது. ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று தேடிப் பார்த்ததுக் கொண்டே நடந்து சென்றது. அப்போது ஒரு தோட்டத்தில் திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டது. அதைப் பார்த்தவுடன் மிகவும் ஆசையாக திராட்சைக் கொடிக்கு அடியில் நின்று திராட்சை பழங்களை பறித்துச் சாப்பிடலாம் என்று நினைத்தது. பழங்கள் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததால் குதித்துக் குதித்துப் பழங்களை பறிக்க முயற்சி செய்தது.ஆனால் நரியால் திராட்சை பழங்களைப் பறிக்கவே முடியவில்லை. “ என்று அம்மா சொன்னவுடன், நிலா பாப்பா “ அம்மா நீங்கள் திராட்சை ப்பழம் கிடைக்காததால ‘சீச்சீ’ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லிக்கொண்டே நரி ஏமாந்து ஓடியது என்றுதானே சொல்லப் போறீங்க.” என்று கேட்டாள். அம்மா ஆச்சரரியத்தோடு “ஓ! உனக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரியுமா? “என்று கேட்டார்கள்.” ஆமாம் மீதிக் கதையை நான் இப்ப சொல்றேன்” என்று நிலா பாப்பா சொன்னாள். “சரி நீயே கதையைச் சொல் பார்க்கலாம் “என்று அம்மா சொன்னாள். “அம்மா அந்த நரி ஏமாந்து ஓடிப் போகவில்லை. வேறு ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என தேடிப் பார்க்கத் தான் போனது, நரி பழங்கள் தவிர இறந்து போன சிறிய மிருகங்கள்,பறவைகள், மீன் என எல்லாத்தையும் சாப்பிடும். நரி போகிற வழியில் ஒரு மரத்திலிருந்து செத்துப்போன பறவை ‘டமால் ‘என்று கீழே வந்து விழுந்தது. நரி அதை எடுக்க வேகமாக ஓடியது. அதுக்குள்ள ஒரு நாய், நரியை முந்திக்கொண்டு செத்த பறவையை கவ்விக் கொண்டு போயிடுச்சு. அடடா. இதுவும் கிடைக்கலையே. என்ன செய்யலாம்? ரொம்பப் பசிக்குதே என நரி யோசித்தது. சரி பரவாயில்லை! இவ்வளவு பெரிய இடத்தில் ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சாப்பாட்டைத் தேடி அலைந்தது. அலைந்து திரிந்து கடைசியில் ஒரு திராட்சைத் தோட்டத்தைக் கண்டுபிடித்து விட்டது. அந்த திராட்சைத் தோட்டத்தில் நிறைய திராட்சைப் பழங்கள் பழுத்து தொங்கிக் கொண்டிருந்தன.அவை நரி குதித்துப் பறிக்கும் உயரத்தில் தான் இருந்தன. எனவே நரி வயிறு நிறைய திராட்சைப் பழங்களைச் சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாக தனது வீட்டை நோக்கி ஓடியது” என்ற நிலா பாப்பா அம்மாவுக்கு கதை சொன்னாள். அம்மா பெருமையாக நிலா பாப்பாவை பார்த்துப் பார்த்து சிரித்தாள்.</p>
<p> </p>
