தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்லாத்தின் பன்முகத்தன்மையும் வளைகுடா முரண்பாடுகளும்!- அ. அன்வர் உசேன்

12 Mar 2026, 4:20 pm
இஸ்லாத்தின் பன்முகத்தன்மையும் வளைகுடா முரண்பாடுகளும்!- அ. அன்வர் உசேன்

ஈரான் ஒரு இஸ்லாமிய தேசமாக இருந்தும் ஏன் ஏனைய இஸ்லாமிய தேசங்களைத் தாக்குகிறது எனும் கேள்வி இந்தப் போரில் முன்வந்துள்ளது. இதற்கான காரணத்தை அறிய இஸ்லாத்தின் தொடக்க கால வரலாற்றை, அதாவது நபிகள் நாயகம் மறைவிற்குப் பின்னர் இஸ்லாத்தில் உருவான முரண்பாடுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த முரண்பாடுகளுக்கும் அப்பால் வளைகுடா தேசங்கள் அமெரிக்கத் தளங்களைத் தமது மண்ணில் அனுமதித்ததும், அவற்றிலிருந்து உருவாகும் அபாயமுமே ஈரானின் தாக்குதலுக்கு இன்னொரு முக்கியக் காரணமாகும்.

சன்னி - ஷியா வேற்றுமைகள்  உலகின் பெரிய மதங்கள் எதுவும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இல்லை. காலத்திற்கும் மண்ணிற்கும் ஏற்றவாறு பன்மைத்தன்மை உருவாகிறது. இந்து மதத்தில் சைவம்-வைணவம்; கிறித்துவத்தில் கத்தோலிக்க-புராடேஸ்டண்ட் பிரிவு; பவுத்தத்தில் மஹாயானம்-ஹீனயானம்; இப்படி இஸ்லாத்திலும் சன்னி மற்றும் ஷியா என இரு பிரிவுகள் உள்ளன. இஸ்லாம் முன்வைக்கும் ஐம்பெரும் கடமைகளான அல்லாவின் மீது நம்பிக்கை, ஐந்து வேளை தொழுகை, ரமலான் மாதத்தில் நோன்பு, ஜக்காத் எனும் ஈகை, ஹஜ் யாத்திரை ஆகிய அனைத்தையும் இரு பிரிவுகளும் கடைபிடிக்கின்றன.  எனினும் இரு பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தொடங்கியது. இஸ்லாமிய உலகத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய தகுதி யாருக்கு என்பதே இந்த வேறுபாடுகளுக்கு அடிப்படை. ஒரு பிரிவினர் நபிகளாரின் குடும்பத்திலிருந்து ஒருவர்தான் தலைமை தாங்க வேண்டும் என்றனர். அவர்கள் ஷியா பிரிவினர். அதற்கு மாறாக நபிகளாரின் குடும்பத்திற்கு வெளியே ஒருவர் கருத்தொற்றுமை அடிப்படையில் தலைமை தாங்கலாம் என இன்னொரு பிரிவினர் கருதினர். இவர்கள் சன்னி பிரிவினர்.

நபிகள் நாயகத்தின் நெருங்கிய நண்பரும் நபியின் மனைவி ஆயிஷாவின் தந்தையுமான அபுபக்கரின் தலைமையைச் சன்னி பிரிவினர் ஏற்றுக்கொண்டனர். நபிகளாரின் இன்னொரு மனைவியான கதீஜாவின் மகள் பாத்திமாவின் கணவர் அலி-இபின்-அபி-தாலிப் அவர்களின் தலைமையைச் ஷியா பிரிவினர் ஏற்றுக்கொண்டனர். தலைமை பற்றித் தொடங்கிய முரண்பாடு காலப்போக்கில் இஸ்லாமியர்களின் வாழ்வு விதிகள், சட்டப்பிரச்சனைகள் என பல அம்சங்களில் வெளிப்பட்டது. உலகில் உள்ள இஸ்லாமியர்களில் 80% சன்னி பிரிவைச் சார்ந்தவர்கள். 12 முதல் 14% வரை ஷியா பிரிவினர் உள்ளனர். சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அரபு அமீரகம், எகிப்து, துருக்கி ஆகியவை சன்னி பிரிவைப் பின்பற்றும் தேசங்கள். இந்த தேசங்களில் 8 முதல் 12% வரை ஷியா பிரிவினர் உள்ளனர். ஷியா பிரிவைப் பின்பற்றும் அரசாங்கம் உள்ள ஒரே தேசம் ஈரான் மட்டுமே! எனினும் ஏமன், ஈராக் ஆகிய தேசங்களில் மிகக் கணிசமாக ஷியா பிரிவினர் உள்ளனர். பஹ்ரைனில் ஆட்சியாளர்கள் சன்னி பிரிவினர், ஆனால் மக்கள் தொகையில் 60% ஷியா பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.  அரசியல் முரண்பாடுகள்  மத அடிப்படையிலான முரண்பாடுகள் பின்னர் அரசியல் முரண்பாடுகளாகவும் பரிணமித்தன. 1979-ஆம் ஆண்டு ஈரானில் முதன்முதலாக ஒரு ஷியா அரசாங்கம் அமைந்த பின்னர் வளைகுடாவில் சன்னி-ஷியா போட்டி வேகம் எடுத்தது. இஸ்லாத்தின் எந்தப் பிரிவு மேலோங்கியிருக்க வேண்டும் என்பதில் ஷியா - சன்னி பிரிவுகளுக்கு இடையே உருவான போட்டி போர்கள் வரை சென்றது. இதன் கொடூர வெளிப்பாடுதான் ஈரான்-ஈராக் போர். சுமார் 8 ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் ஈரான் தரப்பில் 3 முதல் 5 லட்சம் பேரும், ஈராக் தரப்பில் 2 முதல் 3 லட்சம் பேரும் உயிரிழந்தனர் என மதிப்பிடப்படுகிறது. இந்தப் போரில் சதாம் உசேனுக்கு அனைத்துச் சன்னி பிரிவு தேசங்களும் நிதியும் ஆயுதங்களும் வழங்கின.  அமெரிக்கா ரசாயன ஆயுதங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களைச் சதாம் உசேனுக்குத் தந்தது. அதே சமயம் இஸ்ரேல் மூலமாக ஈரானுக்கும் ஓரளவு ஆயுதங்களைக் கொடுத்தது. இந்த போர் எவருக்கும் வெற்றி-தோல்வியின்றி முடிந்தது. இதே சதாம் உசேன் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பிய பொழுது ஈரான் அமெரிக்காவிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்தது. பின்னர் சதாம் உசேன் அமெரிக்காவால் எப்படி வேட்டையாடப்பட்டார் என்பது வரலாறு.

ஈரான்-ஈராக் போர் காரணமாகச் சன்னி-ஷியா முரண்பாடுகள் தீவிரமடைந்தன. 2011-12 காலகட்டத்தில் ஷியா பிரிவினர் கலகம் செய்தபொழுது பகரைன் அரசாங்கம் 40-க்கும் அதிகமான ஷியா பிரிவு மசூதிகளை அழித்தது. 2016-ஆம் ஆண்டு சவூதி அரேபியா ஷேக் நிமர் எனும் ஷியா தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. மீண்டும் 2019-ஆம் ஆண்டு 37 முக்கியமான ஷியா தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் எதிர்வினையாக ஈரானில் சவூதி தூதரகம் தாக்கப்பட்டது. ஈரானுக்கும் சவூதிக்கும் இடையே தூதரக உறவுகள் முறிந்தன. இரு தரப்பிலும் பயங்கரவாத குழுக்கள் தோன்றின. ஷியா பிரிவினரைத் தலிபான், அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய பயங்கரவாத குழுக்கள் கொல்வதும், ஷியா பிரிவினர் அதிகமாக வாழும் தேசங்களில் சன்னி பிரிவினர் தாக்கப்படுவதும் நடந்தது. அதே சமயத்தில் சன்னி மற்றும் ஷியா பிரிவு மக்கள் பெரும்பாலோர், குறிப்பாக வளைகுடாவுக்கு வெளியே உள்ள இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தை விரும்பவில்லை.  பாலஸ்தீனத்தைக் கைவிட்ட வளைகுடா நாடுகள்  சன்னி-ஷியா முரண்பாடை அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தப் பின்னணியில் பாலஸ்தீனத்தில் யாசர் அராஃபத் மறைவிற்குப் பின்னர் காசா பகுதியில் ஹமாஸ் வலுவடைந்தது. வளைகுடா நாடுகள் மேலும் மேலும் அமெரிக்கா பக்கம் சாயவும், இஸ்ரேலுடன் சமரசம் செய்யவும் முனைந்தன. பாலஸ்தீன மக்களில் மிகப்பெரும்பாலோர் சன்னி பிரிவினராக இருந்தாலும், சன்னி பிரிவு வளைகுடா நாடுகள் பாலஸ்தீன மக்களைப் புறக்கணிக்கத் துணிந்தன. அதே சமயத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை ஈரான் எடுத்தது. இதுதான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்த முக்கியக் காரணம். எனவேதான் ஈரானைச் சிதைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் முனைந்த பொழுது அதனை மறைமுகமாக வளைகுடா நாடுகள் வரவேற்றன.

தமது தேசங்களில் அமெரிக்காவின் தளங்களை நிறுவ முன்வந்தன. சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், அரபு அமீரகம், ஜோர்டான், எகிப்து, துருக்கி, குவைத் ஆகிய தேசங்களில் அமெரிக்காவின் 25-க்கும் அதிகமான தளங்கள் உள்ளன. இந்தத் தளங்கள் மீதுதான் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.  ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியும் தீர்வும்  தற்போதைய போர் நிலைநிறுத்தியுள்ள ஒரு உண்மை என்னவெனில் வளைகுடா நாடுகளைத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அமெரிக்காவால் முடியவில்லை என்பதுதான். இஸ்ரேலைப் பாதுகாக்கத் தென் கொரியாவிலிருந்து வான்பாதுகாப்பு ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு மடைமாற்றும் அமெரிக்கா, தங்களின் பாதுகாப்பு குறித்துக் கவலைகொள்ளவில்லை என்பதை வளைகுடா நாடுகள் உணர்ந்த தருணம் இது. சன்னி-ஷியா முரண்பாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்த அனுமதிப்பது வளைகுடா நாடுகளுக்குத்தான் தீங்கு விளைவிக்கும்.

சன்னி மற்றும் ஷியா இரு பிரிவு தேசங்களும் தம் நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சிகளைத் தடை செய்துள்ளன. எனினும் தமது தேசங்களை அமெரிக்கா தாக்கும் பொழுது கம்யூனிஸ்டு கட்சிகள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் பின்வாங்குவது இல்லை. ஆனால் சன்னி-ஷியா முரண்பாடு காரணமாக ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி குறித்து வளைகுடா நாடுகள் உணராமல் இருப்பது வேதனையானது. சன்னி-ஷியா ஒற்றுமை காலத்தின் தேவை. இதனை இரு பிரிவினரும் உணர்வது பாலஸ்தீன விடுதலைக்கும் வளைகுடாவில் அமைதிக்கும் வழிவகுக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.