“டைமண்ட்” வேட்பாளரும், பாஜகவின் “வாஷிங்மெஷின்” அரசியலும்!
24 Mar 2026, 3:23 pm
<p><strong>“டைமண்ட்” வேட்பாளரும், பாஜகவின் “வாஷிங்மெஷின்” அரசியலும்!</strong></p>
<p>ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்தை மீட்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றும் பா.ஜ.க-வின் புதுச்சேரி என்.டி.ஏ கூட்டணியில் இப்போது ஒரு “நவரத்தின” வேட்பாளர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, லாட்டரி அதிபர் மார்ட்டினின் புதல்வர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். காமராஜர் நகர் மற்றும் நெல்லித்தோப்பில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவைப் பார்த்தால், தேர்தல் ஆணையமே சற்று தலைசுற்றித்தான் போயிருக்கும்.</p>
<p>சொத்து விவரமா? சொர்க்கத்தின் பட்டியலா? ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் சொத்து விவரங்களைப் படித்தால், நமக்கு வருவது வியப்பல்ல, மயக்கம்! தங்கம்: 17 கிலோ (தங்கத்திலேயே நீச்சல் அடிக்கலாம் போல!). வைரம்: 1950 கேரட் (இதில் ஒரு சிறு கல் கிடைத்தால் கூட சாமானியனின் ஏழு தலைமுறைக்குச் செட்டில் ஆகிவிடலாம்). வாட்சுகள்: ரூ.38.53 கோடி (நேரம் இவருக்கு அவ்வளவு ‘விலை உயர்ந்ததாக’ இருக்கிறது போலும்!). அசையா சொத்துகள்: நூற்றுக்கணக்கான கோடிகள். சுமார் 328 கோடி ரூபாய் அசையும் சொத்து களையும், பல நூறு கோடி ரூபாய் பெறுமான அசையா சொத்துகளையும் வைத்துக்கொண்டு, ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற பெயரில் அவர் வலம் வருவதுதான் காலத்தின் ஆகச்சிறந்த நையாண்டி. இத்தனைக்கும் அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ நீதிமன்றங்களில் “பணமோசடி” மற்றும் “லாட்டரி முறைகேடு” வழக்குகள் ‘சைடு டிஷ்’ போல நிலுவையில் உள்ளன. ஊழல் ஒழிப்பா? வசூல் வேட்டையா? கடந்த மக்களவைத் தேர்தலின் போது 1,200 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் வழியாகப் பா.ஜ.க-வுக்கு அள்ளி வழங்கிய ‘நன்கொடை வள்ளல்’ தான் இந்த மார்ட்டின் குடும்பம். இப்போது வழக்குகளில் இருந்து தப்பிக்க, மகனைப் பா.ஜ.க கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தி யிருப்பது அப்பட்டமான “அரசியல் டீலிங்”. எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பார்கள்? தமிழகத்தில் ஆளுங்கட்சியை ஊழல் கட்சி என்று விமர்சிக்கும் அண்ணாமலையும், பா.ஜ.க தலைமையும், புதுச்சேரியில் அதே ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களோடு கைகோர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தமிழகத்தில் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை இவர்கள் கூட்டணி வழங்குமாம்! பா.ஜ.க-வின் “வாஷிங் மெஷினில்” மார்ட்டின் குடும்பம் புதுவரவு. ஒரு பக்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இளைஞர்கள் தவிக்க, மறுபக்கம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு வாட்ச் கட்டியிருக்கும் ஒரு முத லாளியை ‘மக்களின் பிரதிநிதி’ என்று ரங்கசாமி யும், பா.ஜ.க-வும் முன்னிறுத்துவது உழைக்கும் மக்களை எள்ளி நகையாடும் செயலாகும். லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் தேடும் ஏழை மக்களைப் போல, பா.ஜ.க இப்போது மார்ட்டின் குடும்பத்தின் ‘வைர’ பலத்தில் புதுச்சேரியில் அதிர்ஷ்டம் தேடுகிறது. “ஊழலை ஒழிக்கப் போகிறோம்” என்று இவர்கள் மேடையில் பேசும் போது, பின்னாடி இருக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் 38 கோடி ரூபாய் வாட்ச் “டிக் டிக்” என்று சிரிக்கும் சத்தம் மக்களுக்குத் தெளிவாகவே கேட்கிறது. கறுப்புப் பணத்தை மீட்போம் என்று சொன்னவர்கள், இப்போது கறுப்புப் பண வழக்கில் சிக்கியவர்களையே ‘காவல் தெய்வங்களாக’ ஏற்றுக் கொண்டிருப்பதுதான் 2026-ன் மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை! - விஜி</p>
