திருச்சி விரைவு செய்திகள்
13 Jan 2026, 3:17 pm

ரத்த தான முகாம்

அறந்தாங்கி, ஜன.13- புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாம், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்டச் செயலாளர் வெட்டிவயல் மீரான் தலைமை வகித்தனர். கிளைத் தலைவர் தாரிக் இப்ராஹிம், து.தலைவர் தாஜ்தீன் மற்றும் செயலாளர் ஜமீன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் பி. சரவணன் கலந்து கொண்டார். மருத்துவ தகுதி அடிப்படையில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ரத்தம் வழங்கிய அனைவருக்கும், மருத்துவர் ஹேமலதா சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லா நன்றி கூறினார்.

கால்நடை தீவனம் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்கூடம் பயன்பாட்டுக்கு திறப்பு முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

தஞ்சாவூர், ஜன.13- தஞ்சாவூர் அருகே, புதுக்குடியில் ரூ.50 கோடியில் நாளொன்றுக்கு 300 டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யக்கூடிய, நவீன தொழிற்கூடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதையடுத்து நாளொன்றுக்கு 300 டன் தீவனம் உற்பத்தி தொடங்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீவனம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 6 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க முடியும். புதுக்குடியில் நடைபெற்ற விழாவில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், தஞ்சாவூர் ஆவின் பொது மேலாளர் சரவணகுமார், பால்வளம் துணைப் பதிவாளர்கள் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு விழா

அறந்தாங்கி, ஜன.13- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுத்தொகையையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சி. மேனகா, முனைவர் க.செல்வி, ரா.ராஜலட்சுமி, முனைவர் மு.முரளி, ந.வனிதா, மு.மோகனா, த.சுபா ஆகியோர் செய்திருந்தனர். பேரா.மு. பழனித்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக தமிழ்த் துறை தலைவரும் திருக்குறள் போட்டி ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் கா.காளிதாஸ் வரவேற்று பேசினார். தமிழ்த் துறை பேரா. முனைவர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

திருநங்கையர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.13- முன்மாதிரியாகத் திகழும் திருநங்கையரை சிறப்பிக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான திருநங்கையர் விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், “திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 அன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்ப விவரங்கள் இணையதளத்தில் ஜன.31-க்குள் பதிவேற்றம் செய்து, உரிய ஆவணங்களுடன் அதற்கான கருத்துருவினை, கையேடாக தயார் செய்து புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்.3-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதிகள்:- அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவிபுரிந்த திருநங்கைகள். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.