மறந்து போன மாருதி கனவு - க.சுவாமிநாதன்
15 Dec 2025, 2:48 pm
<p><strong>மறந்து போன மாருதி கனவு</strong></p>
<p>குஜராத் சுசூகி மோட்டார் லிமிடெட் என்கிற துணை நிறுவனம் தன்னைக் கரைத்துக் கொண்டு மாருதி சுசூகி நிறுவனத்துடன் இணைந்து விட்டதென்பது செய்தி. இந்த செய்தியில் பரபரப்புக்கு ஏதுமில்லை. காரணம் 1981 இல் அரசு நிறுவனமாக துவக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு பரபரப்பு எல்லாம் 2007 லிலேயே முடிந்து விட்டது. 1981 இல் மாருதி உத்யோக் நிறுவனம் உருவாக்கப்பட்ட போது அது சுயசார்பிற்கு அடையாளமாக, இந்தியாவின் பொருளாதார பலமாக, சாமானியர்களின் கார் கனவை ஈடேற்றும் நல்வாய்ப்பாக பேசப்பட்டது. 1982 இல் ஜப்பானின் சுசூகி உடன் இணை வினைக்கு சென்றது. 1983 இல் முதல் கார் மாருதி 800 வெளியே வந்ததும் பரபரப்பு உச்சத்தை தொட்டது. பிறகு 1989 வரை ஆம்னி, ஜிப்சி, சேடன் என விரிவடைந்தது. உலகமயத்தின் மேகங்கள் கவ்வத் துவங்கிய 1990 களின் துவக்கத்தில் மாருதியில் அரசின் பங்கு 50%, சுசூகி பங்கு 50% என்று ஆனது. ஒட்டகம் கூடாரத்துக்குள் மூக்கு, கை, கால் எல்லாவற்றையும் நுழைத்துக் கொண்டது. 2007இல் அரசு தனது பங்குகளை முழுக்க சுசூகிக்கு விற்று விட்டு ஒதுங்கிக் கொண்டது. மாருதி உத்யோக் என்ற பெயர் மாருதி சுசூகி என்று மாற்றப்பட்டது. மாருதி என்ற பெயர் மட்டும் நிறுவனப் பெயரின் பாதியாக ஒட்டிக் கொண்டு இந்திய அடையாளமாக நீடித்தது. காரணம் இந்தியச் சந்தை அல்லவா! இப்போது குஜராத் சுசூகி மோட்டார் தனது தாய் நிறுவனத்துடன் டிசம்பர் 1, 2025 அன்று இணைந்து விட்டது. பங்குச் சந்தையில் மாருதி சுசூகி பங்குகளின் விலைகள் டிசம்பர் 1 அன்று உயர்ந்திருக்கிறது. 15000 கோடி கூடுதல் மூலதனம் உள்ளே வரக் கூடும் என்கிறார்கள். விரிவாக்கம் மேலும் மேலும் நடந்தேறுகிறது. மாருதி சஞ்சீவி மலை போல சாமானிய மக்களுக்கு கார்களை சுமந்து வருவார் என்ற 1981 கனவு 2025 இல் அடியோடு மக்களுக்கு மறந்து போய் விட்டது. ஒரு கனவா ரெண்டு கனவா நினைவில் வைத்திருப்பதற்கு. - க.சுவாமிநாதன்</p>
