திருச்சி விரைவு செய்திகள்
9 May 2026, 12:47 am

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.24 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 8- தஞ்சை மாவட்டத்தில், நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை, 111 தேர்வு மையங்களில், 105 அரசுப் பள்ளிகளும், 40 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 84 தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12,151 மாணவர்கள், 13,793 மாணவிகள் உட்பட மொத்தம் 25,944 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 11,670, மாணவிகள் 13,545 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.04, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.60 ஆகும். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 97.24 ஆகும். 81 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் ஏழாம் இடம் பிடித்துள்ளது.

பெரம்பலூரில் மே 11 முதல் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், மே 8- தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் மே 11 முதல் திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூர், மே 8- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளப்பட்ட 5 பொக்லைன்கள், 2 லாரிகள் என 7 வாகனங்களை வருவாய்த் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பூதலூர் அருகே, மருதக்குடி கிராமத்தில் செம்மண் கிராவல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமம் 4 நாள்களுக்கு முன்பு முடிவடைந்தது. என்றாலும், தொடர்புடைய நிலத்தில் தொடர்ந்து அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு புகார்கள் சென்றன. இதன் பேரில், தஞ்சாவூர் கோட்டாட்சியர் ப. நித்யா, தஞ்சாவூர் வட்டாட்சியர் ஜி. சிவகுமார் உள்ளிட்டோர் நிகழ்விடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, செம்மண் கிராவல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொக்லைன் இயந்திரங்கள், 2 லாரிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு

நாகர்கோவில், மே 8- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. 2026-27 ஆம் ஆண்டிற் கான மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரிக்கெட்டை தவிர மற்ற போட்டிகள் அனைத்தும் மாணவ, மாணவிகள் இரு தரப்பிலும் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இந்ததேர்வு போட்டிகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு தலைமையில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் தொடங்கி வைத்தார். இந்த தேர்வில் அனைத்து பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இது குறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மே 11 முதல் குறைதீர் கூட்டம்: விருதுநகர் ஆட்சியர் தகவல்

விருதுநகர், மே 8- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் மே 11 ஆம் தேதி முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் சட்ட மன்றத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, வரும் மே 11 திங்களன்று வழக்கம் போல் குறைதீர் கூட்டம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி பணி துவக்கம்

நாகர்கோவில், மே 8- குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என நெல் சாகுபடி பணி நடந்து வருகிறது. கும்பப்பூ அறுவடை பணி கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தற்போது மழையும் இல்லாமலும், அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், ஆற்றுப்பாசனத்தை பயன்படுத்தி விளைநிலங்களில் சாகுபடி பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். குளத்துப் பாசன வசதி பெரும் பகுதியில் சாகுபடி பணி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம் பகுதியில் உள்ள பெரிய குளங்க ளில் போதிய தண்ணீர் இருப்பதால், ஏப்ரல் 15ம் தேதி நாற்றங்கால் தயாரிக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது நாற்றங்கால் தயாரித்து 24 நாட் கள் ஆவதை தொடர்ந்து நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை தனியாக எடுத்து நடவு பணியை மேற்கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆற்றுப்பாசன வயல்களில் தற்போது நேரடி நெல்வி தைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசில விவசாயிகள் வயல்களை உழுதுபோட்டுள்ளனர். மழையோ அல்லது அணையிலிருந்து நீர் திறக்கும்போது நாற்றங்கால் தயாரிக்க விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர்.