மினி பேருந்துகளை உரிய வழித்தடங்களில் இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
16 Jun 2026, 11:15 pm
<p><strong>மினி பேருந்துகளை உரிய வழித்தடங்களில் இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு</strong></p><p>தஞ்சாவூர், ஜுன் 16- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மினி பேருந்துகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படாமல், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரி வழித்தடங்களில் முறையற்ற விதத்தில் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகள் புறப்படும் அதே நேரத்தில் மினி பேருந்துகளும் இயக்கப்படுவதால், பேருந்து நிலையத்தில் அடிக்கடி ஊழியர்கள் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. மேலும், மினி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும், முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, மினி பேருந்துகளை உரிய நேரத்தில் மற்றும் ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கவும், பேருந்து நிலையத்தில் வரிசைப்படி முறையாக இயக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பழைய பேருந்து நிலையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையைப் போக்க, அருகில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை அகற்றி, அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும்’’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
