தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர் காப்பீடு அடங்கல் வழங்கக் கோரி சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை: போராட்டம் வாபஸ்

19 Jul 2026, 10:22 pm
பயிர் காப்பீடு அடங்கல் வழங்கக் கோரி சாலை மறியல்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை: போராட்டம் வாபஸ்
<p><strong>பயிர் காப்பீடு அடங்கல் வழங்கக் கோரி சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை: போராட்டம் வாபஸ்</strong></p><p>தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கு அடங்கல் பெறுவதில் நிலவும் தாமதத்தைக் கண்டித்து, பூதலூர் நான்கு சாலையில் விவசாயிகள் சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. பயிர் காப்பீடு செய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அடங்கல் சான்றிதழ் பெறுவதில் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சனிக்கிழமை காலை 10 மணியளவில் பூதலூர் நான்கு சாலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் சி.பாஸ்கர், தஞ்சை கோவிந்தராஜ், சுந்தரவடிவேல், ஆலக்குடி கோவிந்தராஜ், முருகானந்தம், ராஜு உள்ளிட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ப. நித்யா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருவையாறு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு, பூதலூர் வட்டாட்சியர் விவேகானந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர்கள், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்யத் தேவையான அடங்கல் சான்றிதழ்களை எவ்விதத் தடையுமின்றி விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து, வருவாய் கோட்டாட்சியர், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசித்தார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தின் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அடங்கல் சான்றிதழ் வழங்க வழிசெய்யும் வகையில், வரும் திங்கட்கிழமைக்குள் உரிய சுற்றறிக்கை அனுப்பப்படும்’’ என வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்தார். அதிகாரிகளின் இந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், சாலை மறியல் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.