தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்
7 May 2026, 12:20 am

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்

தஞ்சாவூர், மே 6- தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதார பயிரான தென்னை சாகுபடியில், தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக தஞ்சை மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 15,500 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து பேராவூரணி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வள்ளியம்மாள் விளக்கமளித்துள்ளார்.

பாதிப்பின் அறிகுறிகள் 2016 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த ஈக்கள், தற்போது அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளன.

இவை தென்னை மட்டுமின்றி மா, கொய்யா, பப்பாளி, சம்பங்கி போன்ற பயிர்களையும் தாக்கும் தன்மை கொண்டவை.

இலைகளின் அடிப்பகுதியில் மெழுகு போன்ற பூச்சுடன் கூடிய அரைவட்ட வடிவ மஞ்சள் நிற முட்டைகள் காணப்படும்.

இளம்குஞ்சுகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் மரத்தின் வீரியம் குறைகிறது. ஈக்கள் வெளியேற்றும் தேன் போன்ற ஒட்டும் திரவத்தால் இலைகளின் மேல் கரும்பூஞ்சாணம் படர்கிறது.

இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள்: ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில், 3 அடி நீளம் மற்றும் 1.5 அடி அகலம் கொண்ட மஞ்சள் நிற அட்டைகளில் ஒட்டும் பசையைத் தடவி, மரங்களுக்கு இடையிலோ அல்லது மரத்தைச் சுற்றியோ 5-6 அடி உயரத்தில் கட்ட வேண்டும். தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை விசைத் தெளிப்பான் மூலம் பீய்ச்சி அடிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட பச்சைக் கண்ணாடி இறக்கை பூச்சிகளை (கிரைஸோபெர்லா) ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் தென்னந்தோப்புகளில் விடுவதன் மூலம் இயற்கை முறையில் ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

‘ஐசாரியா ஃபியுமோசோரோசியா’ எனும் இயற்கை பூஞ்சாணக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம்.

விவசாயிகள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்பட்டு, வெள்ளை ஈக்களின் பரவல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.