திருக்கனூர் வாக்குச்சாவடியில் பதற்றம்: காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதல் தடியடி நடத்திப் போலீஸார் கலைப்பு
10 Apr 2026, 5:30 am

திருக்கனூர் வாக்குச்சாவடியில் பதற்றம்: காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதல் தடியடி நடத்திப் போலீஸார் கலைப்பு

புதுச்சேரி, ஏப்.9- புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட திருக்கனூர் வாக்குச்சாவடியில், காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்பாளர்கள் மோதல் மண்ணாடிப்பட்டு தொகுதியில் மாநில உள்துறை அமைச்சர் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் போட்டியிடுகிறார். முக்கியத் தலைவர்கள் மோதுவதால் இத்தொகுதியில் தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்துள்ளது.

மோதலுக்கான காரணம் திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாஜகவினர் அதிக அளவில் திரண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், "வாக்காளர்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும், மற்றவர்கள் ஏன் கூட்டமாக நிற்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ் தடியடி இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். நிலைமை மோசமடைவதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த திருக்கனூர் போலீஸார், உடனடியாகத் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் நிலவிய பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது.