மண் பரிசோதனையின்படி இரசாயன உரங்களை பயன்படுத்துக! விவசாயிகளுக்கு தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்
3 Nov 2026, 10:13 pm

மண் பரிசோதனையின்படி இரசாயன உரங்களை பயன்படுத்துக! விவசாயிகளுக்கு தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்காசி, நவ.03- தென்காசி மாவட்டத்தில் நெல், உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களும், பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அதன் பரிந்துரைகளின்படி இரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.

மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகம் மற்றும் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், போரான் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் பயிர்களுக்குத் தேவையான உரங்களை சரியான அளவிலும், உரிய காலத்திலும் பயன்படுத்துவதால் தேவையற்ற உரச் செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறலாம்.

மண் மாதிரி எடுக்கும்போது வயலில் உள்ள இலை, சருகு, புல் போன்றவற்றை அகற்றிவிட்டு, பயிரின் தன்மைக்கு ஏற்ப 15 முதல் 22.5 செ.மீ. ஆழம் வரை மண் மாதிரி சேகரிக்க வேண்டும். பழத்தோட்டம் மற்றும் தென்னை போன்ற மரப்பயிர்களுக்கு 3 அடி ஆழம் வரை தோண்டி மூன்று அடுக்குகளிலிருந்து தனித்தனியாக மண் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். வயலின் பல்வேறு இடங்களில் சேகரித்த மண்ணை நன்கு கலந்து, பகுத்தல் முறையில் சுமார் அரை கிலோ அளவிற்கு எடுத்து துணிப்பையில் வைத்து மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.

மண் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, சர்வே எண், கிராமம், சாகுபடி செய்யப்படும் பயிர், பயிர் இரகம், பாசன முறை மற்றும் மண்ணில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதன் விவரங்களையும் இணைக்க வேண்டும். எரு குவித்து வைத்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரங்களின் நிழல் பகுதிகள் மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களில் மண் மாதிரி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், சமச்சீர் உர நிர்வாகத்தை கடைப்பிடிக்க இரசாயன உரங்களுடன் இயற்கை உரங்கள், பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களையும் பயன்படுத்த வேண்டும். பயிர் மற்றும் கால்நடைக் கழிவுகளை மட்க வைத்து உரமாகப் பயன்படுத்தலாம். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தையும், பயிர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதுடன் இரசாயன உரத் தேவையையும் குறைக்கலாம்.

மண் பரிசோதனை அடிப்படையில் நுண்ணூட்டச் சத்து உரங்களையும் பயன்படுத்த வேண்டும். உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவை உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் பரிசோதனை செய்து உரிய பரிந்துரைகளின்படி உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.