டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் “எச்சரிக்கை”; 4 பேர் பணியிடை நீக்கம், 960 பேருக்கு நோட்டீஸ் “அவசர கதியில் பணிச்சுமை திணிப்பே போராட்டத்துக்குக் காரணம்”–சிஐடியு சம்மேளனம்
2 Nov 2026, 10:45 pm

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் “எச்சரிக்கை”; 4 பேர் பணியிடை நீக்கம், 960 பேருக்கு நோட்டீஸ் “அவசர கதியில் பணிச்சுமை திணிப்பே போராட்டத்துக்குக் காரணம்”–சிஐடியு சம்மேளனம்

கோவை / சென்னை, நவ. 2 – காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தின் புதிய பணிகளை அவசரகதியில் திணித்ததை எதிர்த்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழயர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ்“எச்சரித்துள்ளார்”. இதற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தனியார்மயம்?

கோவையில் செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர், “கடைகளைப் பூட்ட வற்புறுத்திய 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; பணிக்கு வராத 960 பேருக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு கடைகள் இயக்கப்படும். போராட்டத்தின் பின்னணியில் ஒரு பெரிய குழு ஊழியர்களைத் தூண்டுகிறது” என்றார்.காலி பாட்டில் சேகரிப்பில் பெரும் ‘லாபி’ இயங்குவதாகவும், கடந்த ஆட்சியில் 99.9 சதவீத பாட்டில்கள் திரும்பியதாக நீதிமன்றத்தில் கணக்குக் காட்டப்பட்ட நிலையில் தற்போது 50 சதவீதமே திரும்புவதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ரூ.10 கூடுதல் தொகை இனி எம்.ஆர்.பி. விலையிலேயே சேர்க்கப்படும்; 4,800 கடைகளிலும் பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படும்; பாட்டில்களைக் கையாள கடைகளுக்குச் சிறப்புநிதி வழங்கப்படுகிறது; ஊழியர் ஊதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.33 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், டாஸ்மாக் கடைகளைத் தனியாருக்கு வழங்கும்யோசனையையும் அரசு பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

இதுகுறித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் க.திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் உயர்நீதிமன்றஉத்தரவின்படி 2022 மே 15 முதல் மலைப் பகுதிகளில் தொடங்கி, படிப்படியாக 31 மாவட்டங்களில் அமலில் உள்ளது. இடவசதியின்மை, ஊழியர் பற்றாக்குறை, சில்லறைத் தட்டுப்பாடு, சுகாதாரக் கேடு, ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் கூடுதல் வேலை, பாட்டில்கள் உடைதல்,ஒப்பந்ததாரர் பாட்டில்களைத் தினமும் எடுக்காதது, கிருமிநாசினி–கையுறை வழங்கப்படாதது போன்ற பிரச்சினைகளைப் பலமுறை எடுத்துரைத்தும் தீர்வில்லை. இதை எதிர்த்து சிஐடியு சம்மேளனம் உயர்நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மேலாண்மை இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட 10 பேர் குழுவிடம் குறைகளை முன்வைத்தும் பலனில்லை.

2026 பிப்ரவரி 17, 18 தேதிகளில் அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், இத்திட்டம் வெளிமுகமை (அவுட்சோர்சிங்) அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என எழுத்துப்பூர்வ உறுதி அளிக்கப்பட்டது. மே 8 அன்று தவெக ஆட்சி அமைந்த பின் பொறுப்பேற்ற அமைச்சர் விக்னேஷ் ஒரு மாத அவகாசம் கேட்டார்; ஆனால் தீர்வு வரவில்லை.

இரண்டு நாள் அவகாசத்தில் திணிப்பு

இந்நிலையில், ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல செஸ்’ என்ற பெயரில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வசூலித்து, விற்பனையின்போதும் திரும்பப் பெறும்போதும் ஸ்கேன் செய்ய வேண்டும் என அக்டோபர் 29 அன்று சுற்றறிக்கை வெளியானது. அக்டோபர் 30 அன்று மாவட்ட மேலாளர்கள் ஊழியர் கூட்டங்களை நடத்தி இதைத் தெரிவித்தனர். இரண்டே நாள் அவகாசத்தில், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி நவம்பர் 1முதல் அமலாக்கியதே போராட்டத்துக்குக் காரணம்.

அதே ஒப்பந்ததாரர் ஏன்?

பாட்டில் சேகரிப்பு முறைகேடு குறித்து சம்மேளனம் பலமுறை புகார் அளித்துள்ளது. விற்பனையான, திரும்பிய பாட்டில்களின் எண்ணிக்கை, ஒப்பந்ததாரர் சேகரித்த பாட்டில்களை எங்கு விற்றார் என்பதை ஆய்வு செய்தால் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும். முந்தைய ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறும் அதே ஒப்பந்த நிறுவனம், தவெக ஆட்சியிலும் தொடர்வது விந்தையாக உள்ளது. நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைச்சர் முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.