தமிழை தள்ளி வைப்பதா?
21 May 2026, 9:26 pm

தமிழை தள்ளி வைப்பதா?

தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விரி வாக்க நிகழ்விலும், தமிழ்த்தாய் வாழ்த்தான “நீராருங் கடலுடுத்த” என்ற பாடல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்குவதும், தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெறுவதும் நடைமுறையாகவும், மரபாகவும் இருந்து வந்தது.

கீதத்தைத்தான் முதலில் பாட வேண்டும்.அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்று கூறி வந்தார். முந்தைய அரசி னால் இது ஏற்கப்படாததால் சட்டப் பேரவையி லிருந்து அவர் வெளிநடப்பு செய்த நிகழ்வுகளும் நடந்தன.

இந்த நிலையில் கேரள ஆளுநர் தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வரும் நிலையில், ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வில் முதலில் வந்தே மாதரம் பாடலும், அதைத் தொடர்ந்து தேசியகீதம் இரண்டாவதாகவும் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தநிலையில் இனி மேல் இதுபோல் நிகழாமல் பார்த்துக் கொள்ளப் படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மழுப்பினார்.

ஆனால் தற்காலிக சபாநாயகர் பதவி யேற்பு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவ தாகவே பாடப்பட்டது. இந்த நிலையில், அமைச்ச ரவை விரிவாக்க விழாவிலும், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்பட்டு, தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து அடுத்தடுத்த நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த விழா ஆளுநர் மாளிகையால் ஏற்பாடு செய்யப்படுவதால் இது தவிர்க்கப்பட முடியா தது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. தேசிய கீதம் ஏற்கெனவே உள்ள நிலையில், தேசியப் பாடல் என்ற பெயரில் வந்தே மாதரம் பாடல் தேவை தானா என்கிற கேள்வி ஏற்கெனவே உள்ளது.

அரசியல் நிர்ணய சபை வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு பத்திகளை தேசிய பாடலாக ஏற்றுக் கொண்டாலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதை பாட வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் மோடி அரசு அதை கட்டாயமாக்கியுள்ளதோடு முழு பாடலையும் பாட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது. உச்சநீதி மன்றம் இப்பாடலைப்பாடுவது கட்டாயமல்ல என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள அமைச்சரவை பதவியேற்பிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது சர்ச்சை யாகியுள்ளது. மேற்குவங்க பாஜக அரசு மதரசாக்க ளிலும் வந்தே மாதரம் பாடப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் செயல் திட்டத்தை செயலாக்கும் நியமன ஆளுநருக்கு தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரி விக்க வேண்டியது அவசியமாகும்.