தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தம் மறைந்திருக்கும் அசாதாரணங்கள்
24 Dec 2025, 3:39 pm

தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தம் மறைந்திருக்கும் அசாதாரணங்கள்

தமிழகத்தில் டிசம்பர் மாதம் நிறைவடைந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மாநில அரசியலில் பல கேள்வி களை எழுப்பியுள்ளது. 97.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட இந்த மாபெரும் செயல்முறையில், சில வாக்குச்சாவடிகளில் வெளிப்பட்டுள்ள அசாதா ரண போக்குகள் தீவிர ஆய்வுக்கு உரியவை. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் தரவுப் பகுப்பாய்வுக் குழு 75,018 வாக்குச்சாவடிகளில் இருந்து சேகரித்த தகவல்களை பகுப்பாய்வு செய்து, எட்டு வகையான குறிப்பிடத்தக்க முறைகேடு வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளது.

இளம் வயது மரணங்களின் புதிர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படு வோரில் மரணம் காரணமாக நீக்கப்படுவது இயல்பான நிகழ்வு. சாதாரண மக்கள்தொகையி யல் விதிப்படி, மரணங்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நிகழும். 50 வயதுக்கு உட்பட்டோரின் மரணங்கள் வழக்கமாக 20-25 சதவீதத்துக்குள் இருக்கும். ஆனால் 14 வாக்குச்சாவடிகளில் இந்த விகிதம் 50 சத வீதத்தையும் தாண்டியுள்ளது. இது தமிழகத்தின் பொதுவான மக்கள்தொகையியல் முறையை முற்றிலும் மீறுவதாகும். திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பதிவான 58 மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் பல கடலோர வாக்குச்சாவடிகளிலும் இதே போக்கு காணப்படுகிறது. திருச்செந்தூர் தொகுதி சாள்ஸ் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தொகுதி பஞ்சாயத்து யூனியன் பள்ளி வாக்குச்சாவடிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் தொகுதி பஞ்சாயத்து யூனியன் பள்ளி வாக்குச்சாவடியிலும் 110 முதல் 66 வரையிலான மரணங்களில் பெரும்பான்மையோர் இளம் வயதினர். இதற்கு கோவிட்-19 தொற்றுநோய் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற வாதம் உள்ளது.

2020-21 காலகட்டத்தில் தமிழகத்தில் இரண்டு பெரிய தொற்று அலைகள் ஏற்பட்டன. அதிகாரப்பூர்வமாக 38,000 மரணங்கள் பதிவானாலும், உண்மையான எண்ணிக்கை இதை விட மிக அதிகமாக இருக்கலாம் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் கோவிட் தொற்று இளைஞர்களை விட முதியோரை அதிகம் பாதித்தது என்பது மருத்துவ உண்மை. எனவே இந்த இளம் வயது மரண முறை வேறு காரணங்களை சுட்டிக்காட்டுகிறது. தொழில்துறை விபத்துகள், கடல் விபத்துகள், போக்குவரத்து விபத்துகள், போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வாக்குச்சா வடியில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இளம் வயது மரணங்கள் ஏற்படுவது இயல்பானதல்ல. மேலும் கவலைக்குரிய விஷயம், இந்த சாவடிகளில் பதிவான மரணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வழிமுறைகள் போதுமானதாக உள்ளதா என்பதுதான். பாலின வேறுபாட்டின் அபாயகரமான புள்ளிவிவரங்கள் 35 வாக்குச்சாவடிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் குறைந்தபட்சம் 50 பெண்கள் இருந்தும், மொத்த நீக்கங்களில் பெண்கள் 75 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். திருமணம் தொடர்பான இடப்பெயர்வு காரணமாக பெண்கள் அதிகம் நீக்கப்படுவது இயல்பானது என்றாலும், இந்த விகிதம் மிகையானது. சாதாரண இடப்பெயர்வு முறையில் கூட 55-60 சதவீதம் பெண்கள் இருக்கலாம். ஆனால் 75-82 சதவீதம் என்பது சாதாரண விளக்கத்தை மீறுகிறது.

திருச்செந்தூர் தொகுதி ஓ.ஓ. மேல்நிலைப் பள்ளி, மானங்குடி வாக்குச்சாவடியில் 74 மொத்த நீக்கங்களில் 61 பெண்கள் (82.4 சதவீதம்). மயிலாடுதுறை தொகுதி பூம்புகார் பஞ்சாயத்து யூனியன் முதன்மைப் பள்ளி வாக்குச்சாவடியில் 66 நீக்கங்களில் 54 பேர் பெண்கள் (81.8 சதவீதம்). திருவாரூர் தொகுதி ஸ்ரீ விவேகானந்தா உதவி நிறுவன வாக்குச்சாவடியில் 73 நீக்கங் களில் 59 பெண்கள் (80.8 சதவீதம்). தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி உரத்தி யூனியன் முதன்மைப் பள்ளி வாக்குச்சாவடியில் 62 நீக்கங்களில் 51 பெண்கள் (82.3 சதவீதம்). இந்த சாவடிகள் பெரும்பாலும் கிராமப்புறங் களில் உள்ளன. பொருளாதார பின்னடைவு கொண்ட பகுதிகள். இங்கு பெண் குழந்தைகளை வளர்ப்பது பெரும் பொருளாதார சுமையாக பார்க்கப்படுகிறது. வரதட்சணை அழுத்தம், திரு மணச் செலவு காரணமாக பெண் குழந்தைகளை விரைவில் திருமணம் செய்வித்து ‘அனுப்பி’ விடுவது வழக்கம். ஆனால் இதுவும் 80 சதவீத நீக்கத்திற்கு பொருந்தாது. இந்த சாவடிகளில் பெண் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. மிகையான மரண அறிவிப்புகளின் சந்தேகங்கள் 727 வாக்குச்சாவடிகளில் 100க்கும் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒரு வாக்குச்சாவடி யில் சராசரியாக 1,000-1,500 வாக்காளர்கள் இருப்பர்.

இவர்களில் 100 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இறந்திருப்பது சாதாரண மக்கள்தொகையியல் விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம். இன்னும் கவலைக்குரிய விஷயம், 495 சாவடிகளில் 100 சதவீதம் நீக்கங்கள் மரணம் காரணமாக மட்டுமே. இடப்பெயர்வு, நகல் பதிவுகள், வேறு காரணங்கள் என எதுவும் இல்லை. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி பஞ்சாயத்து யூனியன் முதன்மைப் பள்ளி வாக்குச் சாவடியில் 216 மரணங்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி ஓ.ஓ. மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 207 மரணங்கள். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 205 மரணங்கள். சென்னை மாவட்டம் அண்ணா நகர் தொகுதி ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா வாக்குச்சாவடியில் 835 மொத்த நீக்கங்களில் பெரும்பான்மை மரணங்கள். சென்னை மாவட்டம் அண்ணா நகர் தொகுதி துவா ரகாதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் காலேஜ் வாக்குச்சாவடியில் 783 மரண அறிவிப்புகள். திருப்பூர் மாவட்டத்தில் இவ்வளவு அதிக மரணங்கள் ஏன்? நெசவுத் தொழில் பகுதியான இங்கு வேலைக்காக வரும் தொழிலாளர்கள் அதிகம். ஆனால் அவர்கள் பெரும்பாலும் தற்கா லிகமாக இருப்பதால், அவர்களின் மரணம் இங்கு பதிவாகுமா? சென்னை மாவட்டம் அண்ணா நகர் தொகுதியின் இரண்டு கல்வி நிறுவன வாக்குச்சாவடி களில் ஏன் இவ்வளவு மரணங்கள்? இவை கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் அல்லது அருகில் வசிப்போரின் வாக்குச்சாவடிகள்.

இங்கு 700-800 மரணங்கள் என்பது பொருந்தவில்லை. மரண சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டதா? போலி மரண சான்றிதழ்கள் மூலம் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்களா? இது கட்சி அரசியலுக்கான ஒரு உத்தியா? குறிப்பிட்ட சமூகங்கள், குறிப்பிட்ட பகுதிகளின் வாக்காளர்களை குறிவைத்து நீக்குவதற்கான வழியா? இந்தக் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வேண்டும். ‘குடியிருப்பில் இல்லை’ என்ற வகைப்பாட்டின் துஷ்பிரயோகம் 6,139 வாக்குச்சாவடிகளில் சராசரியை விட 7 சதவீத புள்ளிகள் அதிகமாக ‘குடியிருப்பில் இல்லை’ என வகைப்படுத்தப்பட்டோர் உள்ளனர். இந்த வகைப்பாடு மிகவும் நெகிழ்வானது. வீட்டுக்கு சென்று சரிபார்க்கும் அதிகாரி, குறிப்பிட்ட வாக்காளர் இல்லை என்றால், ‘குடியிருப்பில் இல்லை’ என குறிப்பிடலாம். ஆனால் அந்த நபர் அந்நேரத்தில் மட்டும் வெளியில் சென்றிருக்கலாம். வேலைக்கு, பயணத்திற்கு, உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம். இந்த வகைப் பாட்டை துஷ்பிரயோகப்படுத்தி வாக்காளர்களை நீக்க முடியும். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி இளவரசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 549 வாக்காளர்கள் குடியிருப்பில் இல்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி என்.எஸ்.என். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 505. திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 503. செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சன்பீம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 478. காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 450. இந்த சாவடிகள் அனைத்தும் சென்னை மாநகர விரிவாக்கப் பகுதிகளில் உள்ளன. ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள். இங்கு தற்காலிகமாக வசிப்போர் அதிகம். ஆனால் ஒரே சாவடியில் 500 பேர் குடியிருப்பில் இல்லை என்பது நம்பமுடியாதது. இந்த வாக்காளர்களுக்கு எந்த அறிவிப்பும் அனுப்பப்பட்டதா? அவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டதா? இல்லையெனில், இது அவர்களின் வாக்குரிமையை பறிப்பதாகும். ‘நிரந்தர இடப்பெயர்வு’ கோட்பாட்டின் முரண்பாடுகள் 172 வாக்குச்சாவடிகளில் ‘நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்’ பட்டியலில் பெண்கள் 75 சதவீதத்திற்கும் அதிகம். திருமணம் காரணமாக பெண்கள் இடம்பெயர்வது இயல்பானது. ஆனால் சில சாவடிகளில் இது 80-90 சதவீதம் வரை செல்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தொகுதி வாக்கர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 218 இடப்பெயர்வில் 172 பெண்கள் (78.9 சதவீதம்). செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி யூனியன் முதன்மைப் பள்ளி வாக்குச்சாவடியில் 192 இடப்பெயர்வில் 151 பெண்கள் (78.6 சதவீதம்).

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் தொகுதி பஞ்சாயத்து யூனியன் முதன்மைப் பள்ளி வாக்குச்சாவடியில் 172 இடப்பெயர்வில் 131 பெண்கள் (76.2 சதவீதம்). இந்த சாவடிகளில் என்ன நடக்கிறது? பெண் குழந்தைகள் பிறந்தவுடன் ‘விரைவில் திருமணம் செய்து அனுப்ப வேண்டும்’ என்ற எண்ணம் இருக்கிறதா? அல்லது இந்த பகுதிகளில் இருந்து பெண்களை வெளியேற்றுவது சமூக விதியா? இன்னும் கவலைக்குரிய விஷயம், இந்த ‘நிரந்தர இடப்பெயர்வு’ உண்மையில் நிரந்தரமா என்பது. ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் இருக்கும் ஊருக்கு செல்கிறார். ஆனால் அவர் பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி வருகிறார். அவருக்கு அங்கு வாக்களிக்க உரிமை இல்லையா? சட்டப்படி, அவர் புதிய இடத்தில் வாக்காளராக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பலர் இதை செய்வதில்லை. இவர்கள் இருபுறமும் வாக்காளராக இல்லாமல் போகிறார்கள். பகுதி - 2: நாளை