தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் : தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

17 Jun 2026, 7:40 pm
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் : தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு மற்றும் சாதி, மத மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வலிமையான சிறப்பு சட்டத்தை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் உரையில் வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டுமே 5 சாதி ஆணவக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து சாதி மறுப்பு திருமணத் தம்பதிகள் ஆணவக் கொலைகளுக்கு ஆளாவது நடந்தேறி வருகின்றன. சாதி மத மறுப்பு திருமண தம்பதிகள், காதலர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், நிம்மதியாக தங்களின் வாழ்வை தொடர முடியாமல் துரத்தப்பட்டு ஒழிந்து வாழ்வதுமான நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற குற்றவியல் சட்டங்கள் இத்தகைய ஆணவக் கொலைகளை தடுக்க இயலவில்லை. காலாகாலமாக சமூகத்தில் நிலவி வரும் சாதிய உளவியலை, அக மண முறைமை பொதுப் புத்தியில் வேரூன்றி இருப்பதை, சாதிய அமைப்பு முறை இந்தியச் சமூகத்தில் சொத்துடமை, பொருளியல் ஆதிக்கத்துடன் கொண்டுள்ள தொடர்பை உள்வாங்கி ஓர் சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது.

இது இணையை தெரிவு செய்து கொள்ளும் தனி நபர் உரிமையைப் பாதுகாப்பது மட்டுமின்றி,

திருமண வயதை எட்டிய ஒவ்வொருவருக்கும் நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைசம்பந்தப்பட்டதும் ஆகும்.

2012 - இந்தியச் சட்ட ஆணைய அறிக்கை எண் 242 வாயிலாக “திருமண இணைத் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் தலையிடுவதை தடுப்பதற்கு பரிந்துரைக்கப்படும் சட்ட கட்டமைப்பு” என்கிற பரிந்துரை 14 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வரவில்லை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கி உள்ள பல தீர்ப்புகளும் இத்தகைய சிறப்பு சட்டத்திற்கான தேவையை நிலை நிறுத்தியுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் சட்ட வரைவுகளும் நிறைவேறாவிட்டாலும் சிறப்பு சட்டத்திற்கான தேவையை அழுத்தமாக வலியுறுத்தி உள்ளன.

சட்ட நிபுணர்களால், சமூக ஆய்வாளர்களால், பொதுவுடமை - அம்பேத்கரிய - பெரியாரிய - சமூக நீதி - முற்போக்கு அமைப்புகளால், சமூக செயற்பாட்டாளர்களால், பாதிக்கப்பட்டவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு இயக்கங்களை இக்கோரிக்கைக்கு ஆதரவாக நடத்தி வந்துள்ளது. 2018 இல் சேலம் முதல் சென்னை வரை 400 கிமீ நடை பயணம் ஒன்றையும் நடத்தியது.

சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் வேண்டும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு 2025 அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதற்கென்று ஓய்வு பெற்ற நீதிபதி கே. என் பாட்ஷா தலைமையில் ஆணையமும் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு தலித் அமைப்புகள் - சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள் கூடி விவாதித்து, ஒரு வலுவான சிறப்பு சட்டம் உருவாவதற்கான பரிந்துரைகளை நீதியரசர் (ஓய்வு) கே.என்.பாஷா ஆணையத்திற்கு வழங்கியிருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு நீதிபதி பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றி சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பையும், அமைதியான வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கும், வன்செயல்களுக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் இரையாகாமல் தடுக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.