சென்னை விரைவு செய்திகள்
28 May 2026, 12:06 am

உலகு’ குறளுக்கு முழு மதிப்பெண்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, மே 27- 2026ஆம் ஆண்டு நடந்த 10ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வில் பகுதி 2 கேள்வி எண் 21இல் “உலகு” என்று முடியும் குறளை கட்டாயமாக எழுதுக என்று அரசு தேர்வுகள் இயக்கம் கேள்வி கேட்டு இருந்தனர். அதில் மாணவ மாணவிகள் சிலர் பாட பிரிவில் இடம் பெறாத “உலகு” என்னும் குறளை எழுதி இருந்தனர். ஆனால் பாட பிரிவில் இடம் பெற்றுள்ள “குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு” இந்த குறள்தான் உள்ளது. பாடபிரிவில் இடம் பெற்றுள்ள “உலகு” என்னும் குறளினை எழுதுக என்று கேள்வி கேட்க வில்லை. “உலகு” என்று முடியும் 14 குறள்கள் உள்ளது. எந்த குறள் எழுதினாலும் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தவசிமணி, வழக்கறிஞர் கே.கோபி ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சில தகவலை கேட்டிருந்தனர். அதில் ஆசிரியர் குழு அமைத்து பரிசீலனை செய்ததில் உலகு என்று முடியும் எந்த குறள் எழுதினாலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்தது. தமிழக மாணவ, மாணவிகளுக்கு 2 மதிப்பெண்கள் பெற்று தந்த வழக்கறிஞர் கே.கோபிக்கும், சமூக ஆர்வலர் தவசிமணிக்கும் சிபிஎம் ஆர்.கே. நகர் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் வாழ்த்து கூறி பாராட்டினார். பல்வேறு தரப்பினரும் இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டி வந்தால் பறிமுதல்

சென்னை, மே 27- பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதன்படி, மாணவர்கள் பைக் ஓட்டி வந்தால் அந்த வாகனம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, பெற்றோரை நேரில் வரவழைத்து அறிவுரை கூறிய பிறகே ஒப்படைக்கப்படும். பள்ளிக்கு வெளியேயும் மாணவர்கள் பைக் ஓட்டுவதைத் தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமையில் ‘சாலை பாதுகாப்பு மன்றம்’ அமைக்கப்பட உள்ளதுடன், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்களுக்குப் போக்குவரத்துப் பயிற்சி அளித்து போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

40 கிலோ பிளாஸ்டிக் பைகள் வேலூரில் பறிமுதல்

வேலூர், மே 27- வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 2, கிருபானந்த வாரியார் சாலை லாங்பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில், மேற்பார்வையாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, விதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 40 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்தச் சோதனையில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.