திருச்சி விரைவு செய்திகள்
1 Jun 2026, 10:26 pm

பினராயி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் போராட்டம்

விருதுநகர், ஜூன் 1- கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில், ஒன்றிய அரசின் ஏவலாளியாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி னர். இதனைக் கண்டித்து தலைநகர் தில்லியில் அறவழி யில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த தோழர் பிருந்தாகாரத் உள்ளிட்ட தலைவர்களை அமித்ஷாவின் காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்தது. இத னைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.ஆர். நகரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு குமார் தலைமையில் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி கண்டன உரையாற்றினார். ஒன்றியகுழு உறுப்பினர்கள் கே.ஆரோக்கியராஜ், சேதுராமசாமி, பாலகிருஷ்ணன், முத்துமுனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அய்யனார் அருவி செல்லும் வழியில் ‘அக்ரி டூரிசம்’ வனத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து அமைக்க கோரிக்கை

விருதுநகர், ஜூன் 1- விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் கூடுதல் மலையேற்ற பகுதிகள், அய்யனார் அருவி செல்லும் வழியில் வனத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து ‘அக்ரி டூரிசம்’ அமைக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களாக நீண்ட காலமாக இருந்து வருபவை திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் கோவில், பிளவக்கல் அணை, இராஜபாளையம் சாஸ்தா கோவில் அணை, அய்யனார் அருவி ஆகியவையாகும். இவற்றை மேம்படுத்திடவும் அடுத்த கட்ட வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு மலையேற்றப் பகுதி மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே கூடுதல் மலையேற்ற பகுதிகளை கண்டறிந்து ‘டிரெக் தமிழ்நாடு’ இணையத்தில் மலைவாழ் மக்கள் உதவியுடன் செல்லும் வகையில் இணைப்பதற்கான நட வடிக்கைகள் எடுக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை வாகனங்கள் மூலம் செண்ப கத்தோப்பு வனப்பகுதியை சுற்றி காண்பிக்கலாம். அப்போது, வனவிலங்குகளை பார்வையிட, அவை நீர் அருந்துவதை பார்க்கும் வகையில் வனவிலங்கு களுக்கான குடிநீர் தொட்டிகளை அதிகரிக்கலாம். பறவை கள், மரங்களை பற்றிய விளக்கங்களை கூறி வனப்பகுதி யில் அழைத்து சென்று வர பைனாகுலர், வழிகாட்டிகள் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் அனுமதிக்கலாம். இதன் மூலம் பொது மக்களுக்கு வனம், பசுமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும். மேலும், சுற்றுச்சூழல் அங்காடிகளை செண்ப கத்தோப்பு, அத்திக்கோவில் பகுதிகளில் ஏற்படுத்து வதன் மூலம் பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்படும். அய்யனார் அருவி செல்லும் வழியில் ‘அக்ரி டூரிசம்’, ‘வாட்டர் டவர்’ அமைத்தல் போன்றவை மாவட்டத்தில் மலையடிவார சுற்றுலாவை மேம்படுத்தும். இதற்கான பணிகளை சுற்றுலாத்துறை, வனத்துறையினர் இணைந்து செய்திட வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் புகார் எதிரொலி: இன்ஸ்பெக்டர் திலீபன் சஸ்பெண்ட்

ஆறுமுகநேரி, ஜூன் 1: பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் எதிரொலியாக, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திலீபனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், அங்குப் பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்துத் தட்டிக்கேட்க வந்த அந்தப் பெண் காவலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஆய்வாளர் திலீபன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “என் மீதான செய்தி கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. தவறு செய்யும் போது காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கண்டித்துள்ளேனே தவிர, எவ்விதமான பாலியல் அச்சுறுத்தலும் தரவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், இப்புகார் தொடர்பாகத் தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

மெய்ஞானபுரம், ஜூன் 1- தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள நங்கைமொழி கிராமத்தைச் சேர்ந்த முத்து (70), ஆடுகளை வளர்த்துத் தொழில் செய்து வந்தார். இவர் நங்கைமொழியிலிருந்து மெஞ்ஞானபுரத்திற்குத் தனது சைக்கிளில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அவர் பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாகச் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டுச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்த னர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக் காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த முத்து, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை

குரும்பூர், ஜூன் 1- தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த முருகன் (38), பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்குச் சந்தனமாரி (30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செவிலியராகப் பணிபுரியும் மனைவிக்கும் முருகனுக்கும் இடையே குடும்ப விவகாரங்கள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலையும் தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனைவி வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த முருகன், மது போதையில் அங்கிருந்த ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்துள்ளார். அவ்வழியாகச் சென்ற அவரது நண்பர் அளித்த தகவலின் பேரில், முருகனின் உறவினர்கள் விரைந்து வந்து ஆற்றில் கிடந்த அவரை மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

தூத்துக்குடி, ஜூன் 1: தூத்துக்குடியில் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக முன்னாள் தர்மகர்த்தாவை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மூவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முத்தையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் (70), அப்பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் தர்மகர்த்தாவாகப் பொறுப்பு வகித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு சங்கர் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியிலிருந்து விலகியுள்ளார். இருப்பினும் இருதரப்பிற்கும் இடையே தீவிர முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், வரவிருக்கும் ஆவணி மாத கொடை விழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஞாயிறு இரவு முத்தையாபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு கணேசன் நின்றுகொண்டிருந்தபோது, பிரபு சங்கரின் ஆதரவாளர்களான பொன்ராஜ் (25), இசக்கி (22) உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கணேசனைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. பலத்த காயமடைந்த கணேசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்தையாபுரம் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தப்பியோடிய முதன்மை குற்றவாளிகளான பொன்ராஜ் மற்றும் இசக்கி ஆகிய இருவரையும் அடுத்த 10 நிமிடங்களிலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.