சென்னை விரைவு செய்திகள்
8 Jul 2026, 1:34 am

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரம், ஜூலை 7- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ (POCSO) நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நொச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (21), கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு முதல் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், மற்றொரு பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசாங்கத்தின் சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிக்கான இந்தத் தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய எஸ்.பி. அலுவலகம் கட்டுமானப் பணி தொடக்கம்!

கள்ளக்குறிச்சி, ஜூலை 7- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ரூ.12.13 கோடி மதிப்பீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கான புதிய நிரந்தரக் கட்டட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது முதல், தச்சூரில் உள்ள தனியார் கல்லூரி வாடகைக் கட்டடத்தில் எஸ்.பி. அலுவலகம் இயங்கி வந்தது. இது பொதுமக்களுக்கும், நிர்வாகத்திற்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நிலம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது கட்டுமான தளத்தில் பள்ளம் தோண்டி, அடித்தளம் (பேஸ் மட்டம்) அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய கட்டடம், மாவட்ட காவல் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோத மண் கடத்தல்: டிப்பர் லாரி மீது வழக்குப்பதிவு!

கிருஷ்ணகிரி, ஜூலை 7: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அனுமதியின்றி மண் கடத்திய டிப்பர் லாரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒப்பதவாடி பகுதியில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாகக் கனிம வளத்துறை உதவி இயக்குநர் அளித்த புகாரின் பேரில், பர்கூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனிம வளப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது தலை மறைவாக உள்ள லாரி உரி மையாளர் மற்றும் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வரு கின்றனர். கனிமக் கடத்தலைத் தடுக்க இப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயர்கல்வி வாய்ப்பு மலைக்கிராமங்களில் கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கிருஷ்ணகிரி, ஜூலை 7- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள அஞ்செட்டி மற்றும் தளி ஒன்றியங்களில் பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ய, கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர். முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், தக்கட்டி, மாவனட்டி, உரிகம், அஞ்செட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கள ஆய்வு செய்தனர். கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்காத 119 மாணவர்களின் வீடுகளுக்கு ஆறு தனித்தனி குழுக்களாகச் சென்று, கல்வி அதிகாரிகள் நேரடியாகப் பெற்றோர்களிடம் பேசினர். அப்போது உயர்கல்வியின் அவசியம், வேலைவாய்ப்புகள், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை மற்றும் அருகாமையில் உள்ள கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தனர். அதிகாரிகளின் இந்த முயற்சியால், தங்கள் பிள்ளைகளை உடனடியாகக் கல்லூரிகளில் சேர்க்கவும், நேரடி சேர்க்கைக்கும் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை உறுதி செய்ய அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

17 வயது சிறுமிக்குத் திருமணம்: மணமகன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

ஓசூர், ஜூலை 7- ஓசூர் அருகே 17 வயது சிறுமிக்குத் திருமணம் நடத்தி வைத்த சம்பவம் தொடர்பாக, மணமகன் உட்பட 5 பேர் மீது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கப்பகால் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கும், உறவினர்களின் உதவியுடன் கடந்த ஜூலை 6-ம் தேதி அதிகாலை ரகசியமாகத் திருமணம் நடைபெற்றது. இது குறித்த தகவல் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தை கள் நல அலுவலராகப் பணியாற்றும் கிருஷ்ண வேணிக்குக் கிடைத்தது. உடனடியாக இது குறித்து அவர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், மணமகன், அவரது பெற்றோர் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாகச் செயல்பட்ட மற்ற இருவர் என மொத்தம் 5 பேர் மீது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சமூகத்தில் இத்தகைய சட்டவிரோதச் செயல்க ளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்றும், குழந்தை திருமணங்களைத் தடுக்கத் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலை 14-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விழுப்புரம், ஜூலை 7- விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் ஜூலை 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. வருவாய் கோட்டாட்சியர் ஏகாம்பரம் தலைமை தாங்கி, விவசாயி களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுகிறார். விழுப்பு ரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.