தனியார் பல்கலை., திருத்த மசோதவிற்கு எதிர்ப்பு கருத்தரங்கில் கல்வியாளர்கள் சாடல்
2 Nov 2026, 12:45 am

தனியார் பல்கலை., திருத்த மசோதவிற்கு எதிர்ப்பு

கருத்தரங்கில் கல்வியாளர்கள் சாடல்

கோவை, நவ.1-மாணவர்கள் நலனை பெரிதும் பாதிக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என கோவையில் உயர்கல்வி பாதுகாப்புக் கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.

கோவையில் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், உயர்கல்வியை பாதுகாக்கவும் தனியார் பல்கலைக்கழகங்களின் ஆதிக்கத்தை கண்டித்தும் “உயர்கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம்” சனியன்று நடைபெற்றது. கோவை ஹோப் காலேஜில் கே. தங்கவேல் நினைவரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பெற்றோர் மாணவர் நல அமைப்புத் தலைவர் வி. தெய்வேந்திரன் தலைமை ஏற்றார். இந்தியமாணவர்சங்க மாவட்டச் செயலாளர் அகமது ஜுல்பிகர் வரவேற்றார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், துறைத் தலைவர், பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் முழுநேர முதல்வர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு முதல்வர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. அடிப்படை வசதிகள் குறைவு, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் காலிப்பணியிடங்கள் ஆகியவை மாணவர்களுக்கு பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன. மேலும், தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, 2026 மூலம் குறைந்த இடவசதி மற்றும் வைப்புத்தொகையுடன் தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்க வழிவகுப்பது, ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களையும் அரசு உதவிபெறும் கல்லூரிகளையும் மேலும் பலவீனப்படுத்தும்.

தனியார் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு மற்றும் அதனடிப்படையிலான கல்வி உதவித்தொகைகள் இல்லாத நிலையில், அதிக கல்விக்கட்டணங்கள் காரணமாக சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத சூழல் உருவாகும்.

ஒன்றிய அரசின் விக்சித் பாரத் சிக்ஷா ஆதிஷ்டான் மசோதா மாநில உரிமைகளைப் பறிப்பதுடன், தனியார் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை ஊக்குவித்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி சுதந்திரத்தை பாதிக்கும்.

எனவே, தமிழ்நாடு அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாவையும், ஒன்றிய அரசு விக்சித் பாரத் சிக்ஷா ஆதிஷ்டான் மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும். அரசு நிதியில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களை பாதுகாக்க அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்றிணைத்து கல்விப் பாதுகாப்பு இயக்கம்போராட்டங்களை முன்னெடுக்கும், என்றார்.

தொடர்ந்து மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். கனக

ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, பேராசிரியர் முனைவர் ரமணி, ஏயூடி மண்டலச் செயலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் பங்கேற்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ. உஷா நன்றி கூறினார்.