இலவச மின்சார யூனிட் உயர்வு அறிவிப்பு இல்லை! விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்
2 Sept 2026, 10:43 pm

இலவச மின்சார யூனிட் உயர்வு அறிவிப்பு இல்லை! விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்

ஈரோடு, செப்.2-இலவச மின்சார யூனிட் உயர்வு மற்றும் கூலி உயர்வு அறிவிப்பு இல்லாததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 5 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 லட்சம்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இத்தொழிலாகும். இந்நிலையில், செவ்வாயன்று சட்டமன்றத்தில் துறை சார்ந்தமானியக்கோரிக்கை விவாதிக்கப்பட்டது. இதில், டேரிப் 3ஏ2 பிரிவின் கீழ் இயங்கும் விசைத்தறிக்கூடங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 1000 யூனிட் இலவச மின்சாரத்தை 1500 யூனிட்டாக உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என விசைத்தறியாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால், எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், இலவச வேட்டி - சேலை திட்டத்தில், புதிய வடிவத்தில் உற்பத்தி செய்வதற்கு ஒரு விசைத்தறிக்கு 5000 ரூபாய் வரை கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதனுடன், வேட்டி உற்பத்தியின் அளவு 3.75 மீட்டரிலிருந்து 2 மீட்டராக குறைக்கப்பட்டதால், அடிக்கடி குறிகட்ட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் உற்பத்திகுறைவதுடன், தொழிலாளர்களுக்கான கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜரிகை பார்டருடன் கூடிய சேலை உற்பத்தி செய்யப்படுவதால் வேஷ்டி மற்றும் சேலைக்கான உற்பத்திக் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.

இதனிடையே, சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையில் கூலி உயர்வு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழிலையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற போராடி வரும் நெசவாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரமும் தொழிலும் கேள்விக்குறியாகும் அச்சம் உருவாகியுள்ளது. எனவே, விசைத்தறியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1000 யூனிட் இலவச மின்சாரத்தை 1500 யூனிட்டாக உயர்த்தி வழங்குவோம் என அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலி உயர்வை உடனடியாக அறிவித்து நெசவாளர்களின் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு விசைத்தறிசங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.(ந.நி)