தொடரும் மின்வெட்டு: சவால்களும் தீர்வுகளும்! - எஸ்.கண்ணன்
8 Jun 2026, 9:22 pm

தொடரும் மின்வெட்டு: சவால்களும் தீர்வுகளும்! - எஸ்.கண்ணன்

தமிழகம் முழுவதும் அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் தொடர்கின்றன. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் 10 மணி நேரம், 15 மணி நேரம் வரை நீடிக்கும் மின் வெட்டுகளால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பொது மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபடுவதும், மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. புதிய மின்துறை அமைச்சர் மற்றும் மின்வாரிய உயரதிகாரிகள் உடனடியாகக் களஆய்வு மேற்கொண்டு, தடையில்லா மின்சாரம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

எனினும், கடந்த 20 ஆண்டுகால நிர்வா கச் சீர்கேட்டால் மின்வாரியம் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளதாகவும், ஊழியர் பற்றாக்குறை மற்றும் சில தனிநபர்களின் தவறுகளால்தான் மின்வெட்டு ஏற்படுவ தாகவும் மின்துறை அமைச்சர் தெரிவித்துள் ளார். ஊழியர்களுக்கு எதிராகக் கூறப்படும் இத்தகைய பொதுவான விமர்சனங்களுக்குப் பின்னுள்ள எதார்த்த நிலைமைகளை விளக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தொழிற்சங்கங்களுக்கு உள்ளது.

தமிழகத்தின் மின் தேவையும் சவால்களும்

தமிழ்நாடு மின்சார வாரியம், விவசாய மின் இணைப்புகள் உட்படச் சுமார் 3.45 கோடி மின்நுகர்வோருக்குச் சேவை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் சராசரி மின் தேவை 16,000 மெகாவாட் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின் இணைப்புகள் மற்றும் மின் தேவையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோடைக் காலங்களில் மின்நுகர்வு உச்சமடைகிறது. கடந்த 02.05.2024 அன்று மின்தேவை 20,830 மெகாவாட்டை எட்டியது. 2025 ஏப்ரல் மற்றும் மே மாதங்க ளில் பெய்த மழையினால் உச்சபட்ச மின் தேவை 19,878 மெகாவாட்டாகக் குறைந்தி ருந்தாலும், கடந்த 21.04.2026 அன்று 21,060 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருவதால் மின்தேவை மேலும் கூடுகிறது.

தென்மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசும், அடுத்த 10 ஆண்டுகளில் (2026-27 முதல் 2036-37 வரை) தமிழ்நாட்டின் மின் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையமும் (CEA) எச்சரித்துள் ளன. எனவே, சுயசார்பு மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

மின்வெட்டுக்கான உண்மையான காரணங்கள்

கோடைக்காலத் தொடர் மின்வெட்டுக்கு அதீத மின் தேவையும், கடுமையான வெப்பத்தால் மின்மாற்றிகள் (Transformers) மற்றும் துணை மின்நிலையங்கள் மிக விரைவில் வெப்பமடைந்து அதிக அழுத்தத் தின் காரணமாக பழுதடைவதுமே காரணங்க ளாகும். மின்கம்பங்கள் மற்றும் மின்கட்ட ணங்கள் தங்களின் அதிகபட்சக் கொள்ள ளவைத் (Over Load) தாண்டும் போது, பாதுகாப்பு நடவடிக்கையாக மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படுகிறது (Tripping).

இவற்றுடன், மாதந்தோறும் செய்ய வேண்டிய மின்மாற்றிகள் பராமரிப்பு, மரக்கிளைகளை அகற்றுதல், புதைவட கம்பிகள் பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்யப் போதிய பணியாளர்கள் இல்லை. மின்சார வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட பணி யிடங்கள் 1,40,000 ஆகும். ஆனால், தற்போது 65,000 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். 75,000 பணியிடங்கள் காலி யாக உள்ளன. குறிப்பாக, மிக முக்கியமான களப்பிரிவிலேயே (Field Staff) 47,000 பணியிடங்கள் காலியாக உள்ளதால், தடையில்லா மின்சாரம் வழங்குவதில் பலவீனம் ஏற்பட்டு, ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தினந்தோறும் மோதல் உருவாகிறது.

தீர்வுகள் என்ன?

மின் விநியோகக் கட்டமைப்பை நவீ னப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி போன்ற பெருநகரங்களில் கூடுத லாகத் துணை மின் நிலையங்களை யும் மின்மாற்றிகளையும் அமைக்க வேண்டும். 40 ஆண்டுகளைக் கடந்து ஆயுட்காலம் முடிந்துவிட்ட பழைய கட்டமைப்புகளைக் கண்டறிந்து உடனடியாக மாற்ற வேண்டும். அனைத்துப் பிரிவு அலுவ லகங்களிலும் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசியத் தளவாடச் சாமான்கள் இல்லாமல் மின்நுகர்வோரிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளதை மாற்றி, தளவாடச் சாமான்கள் உபரியாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

களப்பிரிவில் மின்தடை நீக்கம், புதிய மின் இணைப்பு போன்ற பணிகளைச் செய்யக்கூடிய களஉதவியாளர், கம்பியாளர் பணியிடங்கள் 80 சதவீதம் காலியாக உள்ளன. இதனால் மின்வெட்டு ஏற்படும் இடங்களுக்குத் தனித்தனி குழுக்களாகச் சென்று பணிகளைச் சரிசெய்ய முடிவ தில்லை. பிரிவு அலுவலகங்களில் தொலை பேசி இயக்குநர் வேலையைக் கூட உதவி மின்பொறியாளர்களே செய்யும் அவல நிலை தொடர்கிறது. இதன் காரணமாகப் பல பொறியாளர்கள் கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு இறந்துள்ளனர்.

எனவே, மின்வெட்டுகளுக்கு ஊழியர்கள் காரணமல்ல, கொள்கைகளே காரணம் என்பதைப் புரிந்து கொண்டு, மின்துறை அமைச்சர் தொழிற்சங்கங்களை அழைத்து அவசரமாகப் பேச வேண்டும். களப்பிரிவின் 47,000 காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பினால் மட்டுமே தொடர் மின் வெட்டைச் சரிசெய்து, மக்களுக்குத் தரமான மின்சாரத்தை வழங்க முடியும்.