பணி நிரந்தரம் கோரி செப். 30-இல் உண்ணாவிரதப் போராட்டம்! தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் அறிவிப்பு
23 Sept 2026, 11:05 pm

பணி நிரந்தரம் கோரி செப். 30-இல் உண்ணாவிரதப் போராட்டம்! தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் அறிவிப்பு

சென்னை, செப். 23 -அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்களைத் தற்காலிக ஒப்பந்த முறையில் நிரப்பும் முடிவைக் கைவிடக் கோரி செப்டம்பர் 30 அன்று சென்னையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகத் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. பொதுச்செயலாளர் சுபின் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

அரசு மருத்துவமனைகள் மற்றும் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 6 செவிலியர் கல்லூரிகளில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் தற்காலிக ஒப்பந்த முறையில் நிரப்பும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மருத்துவத் துறையில் பணிபுரியும் அனைத்துத் தரப்பு தற்காலிக ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், செவிலியர்களைப் பிற மருத்துவமனைகளுக்குப் பணிநிரவல் செய்யும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பிரச்சார இயக்கம் நடத்தப்படும். அன்றைய நாட்களில் செவிலியர்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணிபுரிவதுடன், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கமும் நடைபெறும்.அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 30 அன்று மாநிலத் தலைநகரான சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதற்கு பிறகும் அரசு செவிசாய்க்காத பட்சத்தில், மாநிலச் செயற்குழுவைக் கூட்டி அடுத்தகட்ட தீவிர போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.