சென்னை விரைவு செய்திகள்
1 hour before

கடலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை 2,070 பேர் கைது!

கடலூர், ஜூலை 29– கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராகக் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் கஞ்சா வழக்கில் 185 பேர், புகையிலைப் பொருள் வழக்கில் 146 பேர், சாராய வழக்கில் 1,739 பேர் என மொத்தம் 2,070 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 98 கிலோ கஞ்சா, 3,178 கிலோ புகையிலைப் பொருட்கள், 42,567 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் தொடரும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.

தீபாவளி சேமிப்புத் திட்டப் பெயரில் பண மோசடி: தம்பதி கைது!

திருவண்ணாமலை, ஜூலை 29– திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் தீபாவளி சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த இந்திரா என்பவர், சக்திவேல் மற்றும் அவரது மனைவி சத்யா நடத்தி வந்த தீபாவளி சேமிப்புத் திட்டத்தில் இணைந்து, தனக்குத் தெரிந்த 76 பேரையும் சேர்த்துள்ளார். மாதம் ரூ.1,200 வீதம் வசூலித்த தொகையைச் சக்திவேலிடம் அவர் வழங்கியுள்ளார். மேலும், தொழில் முதலீட்டிற்காக ரூ.10 லட்சத்தையும் கடனாக அளித்துள்ளார். தங்க நாணயம், வெள்ளி நாணயம் மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், காலம் முடிந்தும் பொருட்கள் வழங்கப்படவில்லை. பணத்தைக் கேட்டபோது தம்பதியினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலரிடம் மோசடி செய்தது உறுதியானதையடுத்து, சக்திவேல் மற்றும் சத்யாவைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

பேங்க் ஆஃப் இந்தியா லாபம் 81 விழுக்காடு உயர்வு!

சென்னை, ஜூலை 29- பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் 80.51 சதவீதம் அதிகரித்து 3,302.58 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தனிப்பட்ட முறையில் வங்கியின் லாபம் 36.23 சதவீதம் அதிகரித்து 3,067.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், வங்கியின் முக்கிய வருமானமான நிகர வட்டி வருமானம் 12.61 சதவீதம் உயர்ந்து 6,833 கோடி ரூபாயாக எட்டியுள்ளது. வங்கியின் உலகளாவிய மொத்த வணிகம் 2025 ஜூனில் இருந்த ரூ.15,06,142கோடியிலிருந்து 16.57விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியடைந்து ஜூன் 2026-ல் ரூ.17,55,699கோடியாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய வைப்புத்தொகைகள் 2025 ஜூனில் இருந்த ரூ.8,33,698கோடியிலிருந்து 14.90விழுக்காடு ஆண்டுக்காண்டு உயர்ந்து 2026-ல் ரூ.9,57,924கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில்வழங்கப்பட்ட கடன்கள்ஜூன் 2025-இல் இருந்த ரூ.6,72,444கோடியிலிருந்து 18.64 விழுக்காடு அதிகரித்து 2026 ஜூனில் ரூ.7,97,775கோடியாக உயர்ந்துள்ளது. 2026 ஜூன் நிலவரப்படி, வெளிநாடுகளிலிருந்துகிடைக்கப் பெற்ற வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.73%அதிகரித்து ₹1,32,961கோடியாகவும், வெளிநாடுகளுக்கான கடன்கள்15.67%உயர்ந்து ரூ.1,23,942கோடியாகவும் உள்ளன வங்கியின் வட்டி அல்லாத இதர வருமானங்கள் அதிகரித்ததே இந்த லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். இவற்றுடன், வெளிநாட்டு நாணய வைப்பு நிதி திட்டம் மூலம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. இதனை வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜினிஷ் கர்நாடக் தெரிவித்தார்.

நீட், ஜெஇஇ வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை, ஜூலை 29- புதுதில்லியில் ஆகாஷ் கல்வி நிறுவனம் சார்பில் ‘சாம்பியன்ஸ் ஆப் ஆகாஷ்’ பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீட் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுகளில் வெற்றி பெற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்டனர். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 1-வது இடம் (ஆர்யன் குப்தா) உட்பட முதல் 10 இடங்களில் 4 இடங்களை ஆகாஷ் மாணவர்கள் பிடித்துள்ளனர். ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் 4-வது இடம் (மோஹித் சேகர் சுக்லா) உட்பட முதல் 100 இடங்களில் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ‘ஆகாஷ் தேசிய திறனறித் தேர்வு’ தொடங்கப்பட்டு புதிய லோகோ வெளியிடப்பட்டது. மாணவர்களின் அர்ப்பணிப்பும், நிறுவனத்தின் தொலைநோக்கு கொள்கையே இந்த வெற்றிக்குக் காரணம் என நிர்வாக இயக்குநர் சந்திர சேகர் கரிசா ரெட்டி கூறினார். மேலும், ஏழை மாணவர்களுக்காக ரூ.100 கோடிக்கும் மேல் உதவித்தொகையும், ரூ.700 கோடி வட்டி இல்லா கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடலூர்: டவுன்ஹால் வாடகை உயர்வை திரும்ப பெறக் கோரி ஆக. 8-ல் மறியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

கடலூர், ஜூலை 28- கடலூர் டவுன்ஹால் கூட்ட அரங்கின் வாடகை கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வாடகை உயர்வை திரும்ப பெறக்கோரி ஆகஸ்ட் 8-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: நெய்வேலி சமூக மேம்பாட்டு திட்ட நிதியில் குளிர்சாதன வசதியுடன் மேம்படுத்தப்பட்ட டவுன்ஹாலுக்கு, உணவுக்கூடத்துடன் ஒரு நாள் வாடகை ரூ. 90 ஆயிரமும், உணவுக்கூடம் இல்லாமல் ரூ. 60 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதீத கட்டண உயர்வால் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகள் போன்ற சிறு அமைப்புகளால் கூட்டங்களை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பழைய வாடகை கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். இல்லையெனில், வாடகை உயர்வை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கடலூரில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதற்குள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 29– காப்பீடு திட்ட குளறு படிகளை சரி செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட பிரிமீயம் தொகையை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி செவ்வாயன்று (ஜூலை29) தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத்தினர் ஆர்ப்பா ட்டம் நடத்தினர். தாம்பரம் வட்டக் கிளை தலைவர் பெ.பாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி கள் ந.மீனாட்சி, பெ.சுப்ர மணியன், வி.தேவன், எம்.தங்கராஜ், ஆ.பால சுப்ரமணியன், எம்.காதர், ஆனந்.அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.

இந்தியா மார்க்கெட் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அதிகரிப்பு

சென்னை, ஜூலை 29- 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா மார்க்கெட் இன்டர் மெஷ் நிறுவனம் 11% வளர்ச்சியுடன் ரூ. 414 கோடியை ஒருங்கிணைந்த வருவாயாகப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களிட மிருந்து பெறப்பட்ட கட்டண வசூல் 8விழுக்காடு உயர்ந்து ரூ. 463 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 172 கோடியாகவும் பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் தவணைத் தொகை கழிப்ப தற்கு முந்தைய வருவாய் ரூ. 149 கோடியை எட்டி யுள்ளது நிறுவனத்தின் ரொக்கம் மற்றும் முதலீடு கள் ரூ. 3,553 கோடியாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தளத்தின் நம்ப கத்தன்மையே இந்த தொடர் வளர்ச்சிக்குக் கார ணம் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

போலி மாணவர் கணக்கு: பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியருக்கு 4 ஆண்டுகள் சிறை!

ராணிப்பேட்டை, ஜூலை 29- ராணிப்பேட்டையில் உள்ள வி.ஆர்.வி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போலி மாணவர் கணக்கு காட்டி அரசுக்கு ரூ. 4,69,883 நிதி இழப்பு ஏற்படுத்திய வழக்கில், பள்ளியின் தாளாளர் கருணாகர சஞ்ஜிவி தாஸ் மற்றும் தலைமை ஆசிரியர் ஆலிஸ் தபிதா விஜயகுமாரி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி வி. தேன்மொழி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய ஆய்வில், உண்மையான மாணவர் எண்ணிக்கையை மறைத்து 187 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்த்து மொத்தம் 259 பேர் பயில்வது போல் போலிப் பதிவுகள் உருவாக்கப்பட்டு 6 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வழக்கில், தாளாளர் கருணாகர சஞ்ஜிவி தாஸுக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ. 35,000 அபராதமும், தலைமை ஆசிரியர் ஆலிஸ் தபிதா விஜயகுமாரிக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வாலாஜா வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை விடுவிக்கப்பட்டார். அரசின் சார்பாக வழக்கறிஞர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதிட்டார்.

சொத்து வரி செலுத்தாவிட்டால் சீல்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை, ஜூலை 29- பெருநகர சென்னை மாநகராட்சியில் நிலுவைச் சொத்து வரியை வசூலிக்க ஜூலை 3 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இக்காலத்தில் ₹157.39 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சொத்து வரி நிலுவை மற்றும் தொழில் உரிமம் புதுப்பிக்காததால் எழும்பூரில் உள்ள 'சவுத் இந்தியா ஹோட்டல்ஸ்' நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தி.நகர் 'வேலவன் ஸ்டோர்ஸ்' நிறுவனம் ₹15.91 லட்சம் நிலுவை வரியைச் செலுத்தியதை அடுத்து அதன் சீல் அகற்றப்பட்டது. இச்சிறப்பு முகாம் ஜூலை 31-டன் நிறைவடைகிறது. அதற்குள் பொதுமக்கள் நிலுவை வரியைச் செலுத்தி, அபராத வட்டி மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.