தீக்கதிர் முக்கிய செய்திகள்
17 May 2026, 8:45 pm

சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகளைத் தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

சென்னை, மே 17- நெதர்லாந்தின் லெய்டன் நகரில் வைக்கப்பட்டிருந்த 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்பேடுகள்’ இந்தியப் பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதைச் சமூக வலைதளப் பதிவின் மூலம் வரவேற்றுள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக விளங்கும் இந்த செப்பேடுகளைத் தாயகம் கொண்டு வர முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த வரலாற்று ஆவணங்களின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண் என்பதால், ஒன்றிய அரசு இவற்றை நேரடியாகத் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தத் தேவையான தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தைக் குறைக்கக் காவல்துறை உத்தரவு

சென்னை, மே 17- புதிய அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் மதுவிலக்குக் கொள்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குக் கடுமையான நேரக் கட்டுப்பாடுகளை விதித்துச் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையின்படி, FL1 வகை மற்றும் எலிட் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும். அதேபோல FL2 கடைகள் இரவு 10 மணிக்கும், FL3 கடைகள் நள்ளிரவு 12 மணிக்கும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து அதிகாரிகள் இந்த விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணித்துப் புகைப்பட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், லூஸ் செல்லிங் முறையிலான விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய அறிவிப்பு: வெள்ளி இறக்குமதிக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை, மே 17- விலைமதிப்புள்ள உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை அண்மையில் உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது வெள்ளி இறக்குமதிக்கும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த மே 13 அன்று தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கலந்த வெள்ளி உள்ளிட்ட அனைத்து வகையான வெள்ளி இறக்குமதிக்கும் இனி மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் (DGFT) அறிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை தடையற்ற பிரிவில் (Free Category) இருந்த வெள்ளி இறக்குமதிக் கொள்கை, உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு (Restricted Category) மாற்றப்பட்டுள்ளது.

சென்னை – கோவை சதாப்தி எக்ஸ்பிரஸில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு

சென்னை, மே 17- சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலையும் தேவையையும் கருத்தில் கொண்டு தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 12243/12244 சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் சந்திப்பு – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட பெட்டி (AC Chair Car) கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிகக் கூடுதல் வசதி வருகிற ஜூலை 6-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தென்னக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை, மே 17- வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் மே 23-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 18 முதல் 21 வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்றாலும், சில இடங்களில் இயல்பான வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னை மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் மே 18 அன்று வானம் மேகமூட்டத்து டன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை மே 18 முதல் 21வரை தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்ப தால், குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக் கும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண் டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே இரு இளைஞர்கள் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை

சென்னை, மே 17 - காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள அமரம்பாக்கம் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதராஜபுரம் பகுதி யைச் சேர்ந்த பரத் (25) மற்றும் சீனு (24) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள லோ கேஷ் என்பவரது வீட்டில் தங்கியிருந்து, இசைக் கச் சேரிகளில் கானா பாடல்கள் பாடி வந்துள்ளனர். இந்நிலை யில், அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் இருவரையும் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியோடியது. இக்கொலைச் சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, முன்விரோதம் அல் லது தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளி களைத் தேடி வருகின்றனர்.