மருத்துவக் கல்வி யாருக்காக? நிகர்நிலைப் பல்கலைக்கழக அனுமதிகள் விடுக்கும் சவால்! - திருநாவுக்கரசு தர்மலிங்கம்
yesterday

மருத்துவக் கல்வி யாருக்காக? நிகர்நிலைப் பல்கலைக்கழக அனுமதிகள் விடுக்கும் சவால்! - திருநாவுக்கரசு தர்மலிங்கம்

இந்தியாவி லேயே மருத்துவத் துறையிலும் மருத்துவக் கல்வியிலும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன், மாநி லம் முழுவதும் மொத்தம் சுமார் 12,000 எம்பிபிஎஸ் இடங்களைக்கொண்டு நாட்டிலேயே முன்னணியில் நிற்கிறது நம் மாநி லம். மாநிலத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மிகக் குறைந்த கட்டணம் ஆகியவை இணைந்து, எளிய குடும்பத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளி யில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரிகளும் ‘மருத்துவர்’ ஆகும் நிலையைச் சாத்தியமாக்கின. இதன் பலனாகக் குழந்தை இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம் ஆகியவற்றில் தேசிய சரா சரியை விடத் தமிழ்நாடு கணிசமாக முன்னேறி நிற்பதோடு, பொது சுகாதாரத்தின் முதுகெலும்பாக அரசு மருத்துவர்களே விளங்குகிறார்கள். ஆனால், இந்தப் பெருமைமிகு கட்டமைப்பு இன்று படிப்படியாகக் குலைக்கப்பட்டு, மருத்துவக் கல்வி அதிக வசூல் தரும் வணிகத் துறையாக மாற்றப்பட்டு வருகிறது.

நிகர்நிலை அந்தஸ்து — யாருக்கு லாபம்?

சமீபத்தில் மாநில அரசின் அனுமதியோ கருத்தோ இன்றி, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் (செயின்ட் பீட்டர்ஸ், தனலட்சுமி சீனிவாசன், சீனிவாசன்) நிகர்நிலைப் பல்கலைக் கழக (Deemed University) அந்தஸ்து பெற்று விட்டன. இதன் நேரடி விளைவு: இந்தக் கல்லூரி களில் இதுவரை மாநில அரசு ஒதுக்கீட்டில் இருந்த சுமார் 350 எம்பிபிஎஸ் இடங்கள் — அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் வந்த சுமார் 25 இடங்கள் உட்பட — மாநிலத் தேர்வுக் குழுவின் கலந்தாய்விலிருந்து வெளியேறுகின்றன. மதுராந்தகம் கற்பக விநாயகா உள்ளிட்ட மேலும் மூன்று கல்லூரிகள் இதே பாதையில் உள்ளன; அவையும் மாறினால் மொத்த இழப்பு 700 இடங்களைத் தாண்டும். இந்த இடங்களுக்கு இனி அகில இந்திய அளவி லான எம்சிசி (MCC) கலந்தாய்வில்தான் சேர வேண்டும்; கட்டணம் ஆண்டுக்கு சுமார் ரூ.20 லட்சம் அல்லது அதற்கும் மேல். அரசு ஒதுக்கீட்டில் ரூ.4.35–5.40 லட்சம் கட்டணத்தில் படிக்க வாய்ப்புள்ள ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு இது எட்டாக் கனி. நிகர்நிலை அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் மாநில இடஒதுக்கீட்டுக் கொள்கையையும் பின்பற்றத் தேவையில்லை. நிகர்நிலை அந்தஸ்து என்ற மாற்றங்களால் மொத்தம் 461 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் இழக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், நிகர்நிலை அந்தஸ்து என்பது சமூக நீதிக் கடமைகள் எதுவுமின்றி கட்டணத்தைத் தாராள மாக, தாறுமாறாக நிர்ணயிக்கும் தனியார் உரி மத்திற்கான அரசு அங்கீகாரமாகவே மாறியுள்ளது. சட்ட ஓட்டைகளும், நிர்வாக மௌனமும் யுஜிசி விதிகளின்படி, ஒரு கல்வி நிறுவனத்தின் நிகர்நிலை அந்தஸ்து விண்ணப்பத்திற்கு மாநிலப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் பதிலளிக்கவில்லை என்றால், ஒப்புதல் தானாகக் கிடைத்ததாகக் கருதப்படும். கற்பக விநாயகா கல்லூரி 2023 ஜூன் மாதத்தில் அனுமதி கோரிய போது, குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அனுப்பப் படாததால் இந்த ஓட்டை வழியாக ஒப்புதல் கிடைத்தது. செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி வழக்கிலும், மறுப்புக் கடிதம் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப் பட்டும் ஆறு நாட்கள் தாமதமாக அனுப்பப் பட்டதால் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தோற்றது. அதாவது, விண்ணப்பங்களை உரிய நேரத்தில் நிராகரிக்காமல் தாமதித்ததன் மூலமும், சட்ட வழிமுறைகளை உரிய நேரத்தில் கையாளாததன் மூலமும், முந்தைய அரசின் நிர்வாகம் இந்த மாற்றத்திற்குக் கதவைத் திறந்துவிட்டது. இது கவனக்குறைவா, வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒத்தாசையா என்ற கேள்வி எழுகிறது. இதே காலகட்டத்தில், தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை ‘பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்களாக’ மாற்ற வழிவகுக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை 2025 அக்டோபரில் முந்தைய அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. ‘இதனால் கல்வியின் தரம் உயரும்’ என்று அவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா பின்னர் திரும்பப் பெறப்பட்டது. மக்கள் எழுச்சிக்கு முன் தவறான கொள்கைகள் பின்வாங்கும் என்பதற்கு இது சான்று — ஆனால் அதே நோக்கம் “நிகர்நிலை அந்தஸ்து” என்ற புறவழியில் இன்று நிறை வேறிக்கொண்டிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்வியின் நலிவும் சிறுநீரக மோசடியும்

ஒரு பக்கம் தனியார் நிறுவனங்கள் வளர்க்கப் பட்டபோது, மறுபக்கம் அரசு மருத்துவக் கல்வி பலவீனப்படுத்தப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன; ஆனால் அதன் பின் வந்த முந்தைய ஆட்சியில் ஒரு புதிய கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. மொத்தமுள்ள 36 கல்லூ ரிகளிலும் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாததால், சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் நிலை வரை சென்றது. இன்றும் காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரியே இல்லை. மருத்துவம் வணிகமாகும்போது என்ன நடக்கும் என்பதற்கு நாமக்கல் சிறுநீரக மோசடி ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு. விசைத்தறி, சாயப்பட்டறை ஏழைப் பெண்களுக்கு ரூ. 5–10 லட்சம் ஆசை காட்டப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரகங்களை விற்கத் தூண்டப்பட்டனர். சிறுநீரகம் பொருந்தாத நிலையில், சில பாதிக்கப்பட்டவர்கள் கல்லீரலின் ஒரு பகுதியை விற்கக் கட்டாயப்படுத்தப்பட்டதும் விசாரணையில் வெளிவந்தது. மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994-இன் கீழ், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி சேதார் மருத்துவமனையின் உரிமங்கள் இடை நீக்கம் செய்யப்பட்டன. இதில் தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனை, அப்போதைய ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்திற்குச் சொந்தமானது. மோசடி வெளிச்சத்திற்கு வந்தும் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதியப்படாததற்காக மதுரை உயர்நீதிமன்றக் கிளையே அரசைக் கண்டித்தது. இப்படிப்பட்ட நிறுவனங்களே இன்று நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துடன் — மாநிலக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் — செயல்படுகின்றன என்பதுதான் மிகப்பெரிய கவலை.

‘சரக் சபதம்’ — ஓர் எச்சரிக்கை அடையாளம்

தேசிய கல்விக் கொள்கையின் பின்னணி யில், நோயாளிகளை பாரபட்சமின்றி அணுகும் ஹிப்போகிரட்டீஸ் உறுதிமொழிக்குப் பதிலாக ‘மகரிஷி சரக் சபதம்’ என்ற சமஸ்கிருத உறுதி மொழியை தேசிய மருத்துவ ஆணையம் பரிந்து ரைத்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு சர்ச்சையானது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மாநில அரசு இதைக் கண்டித்து, ஹிப்போகிரட்டீஸ் உறுதிமொழியையே பின்பற்ற உத்தரவிட்டது. ஆயினும், அறிவியல் அடிப்படையிலான மருத்துவக் கல்வியில் பிற்போக்கு அடையாளங்களைப் புகுத்தும் முயற்சிகள் கல்வியின் உள்ளடக்கத்தையே மாற்றும் பரந்த போக்கின் அறிகுறிகள்.

இனி என்ன செய்ய வேண்டும்?

தற்போதைய தமிழ்நாடு அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை தெளிவாக உள்ளன:

• நிகர்நிலை அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை உறுதியாக வழக்காட வேண்டும். • நிலுவையில் உள்ள மூன்று கல்லூரிகளின் விண்ணப்பங்களுக்கு 60-நாள் காலக் கெடுவுக்குள் உரிய சட்டப்பூர்வ பதில்களை உறுதி செய்ய வேண்டும்.

• இழந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஈடுசெய்ய, அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்.

• 100 இடங்கள் மட்டுமே உள்ள அரசுக் கல்லூரி களில் இடங்களை உயர்த்த வேண்டும்; காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.

• நீண்டகாலத் தீர்வாக, கல்வியும் சுகாதாரமும் மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும்; அதற்காக மாநில அரசு வலுவாக குரல் எழுப்ப வேண்டும். உயர்கல்வியை — அதிலும் உயிர்காக்கும் மருத்துவக் கல்வியை — உச்சபட்ச வசூல் துறை யாக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழையின் பிள்ளையும் மருத்துவ ராகும் தமிழ்நாட்டின் மரபைக் காக்க, மக்கள் மாபெரும் எழுச்சி கொள்ள வேண்டிய தருணம் இது.

உயர்கல்வியை — அதிலும் உயிர்காக்கும் மருத்துவக் கல்வியை — உச்சபட்ச வசூல் துறை யாக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழையின் பிள்ளையும் மருத்துவ ராகும் தமிழ்நாட்டின் மரபைக் காக்க, மக்கள் மாபெரும் எழுச்சி கொள்ள வேண்டிய தருணம் இது.