தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெப்ப அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துக!
16 Jul 2026, 9:15 pm

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெப்ப அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துக!

மதுரை, ஜூலை 16 - தமிழ்நாட்டில், வெப்ப அலை பாதிப்பிலிருந்து மக்களைப் பாது காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்து மாறு, தமிழக அரசுக்கு மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் வலியுறுத்தி யுள்ளார்.இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றில் கூறியிருப்ப தாவது:

இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவு

மதுரை விமான நிலையத்தில் ஜூலை 14 அன்று அதிகபட்ச வெப்ப நிலை 42.5 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.5 டிகிரி செல்சியஸ் அதிகம் மற்றும் இந்தியாவில் ஜூலை 14 அன்று பதிவானது அதிகபட்ச வெப்ப நிலை எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. ஜூலை 13 அன்றும் மதுரையில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது. கரூர், திண்டுக்கல், நீலகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஜூலை 13 அன்று வெப்பநிலை இயல்பைவிட 5.1 டிகிரி செல்சிய ஸூக்கும் அதிகமாகப் பதிவாகியது.

உதகையிலேயே 7.4 டிகிரி செல்சியஸ் அதிகம்

திருத்தணி, வேலூர், மதுரை விமான நிலையம் மற்றும் நகரம், பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கொடைக்கானல் மற்றும் உதகை ஆகிய இடங்களில் ஜூலை 14 அன்று வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக பதிவா கியது. உச்சமாக உதகையில் இயல்பை விட 7.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு நாட் களாக பல மாவட்டங்களில் வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. ஆனால், போதுமான முன்னெச்சரிக் கையை சென்னை மண்டல வானி லை ஆய்வு மையம் வழங்க வில்லை. 13-07-2026 முதல் 16-07-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக பட்ச வெப்பநிலை ஓரிரு இடங் களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது.

தாமதமாக வந்த சிறப்பு எச்சரிக்கை

உள் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூலை 14 மற்றும் ஜூலை 15 தேதிகளில் வெப்ப அலை நிலவும் என்கிற சிறப்பு எச்சரிக்கை யையே ஜூலை 14 மாலை 3 மணிக்குத்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கியது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும் போதுமான முன்னெச்சரிக்கைகளை வழங்க வில்லை. சமூக வலைதளங்களில் கூட (குறிப்பாக X தளம்) ஜனவரி மாதத்துக்குப் பிறகு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு பதிவைக் கூட இடவில்லை.

தமிழக அரசு ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்

பெருமழை நிகழ்வுகளுக்கு நிகராக வெப்ப அலை எச்சரிக்கை வழங்குவதிலும் கூடுதல் கவ னத்தோடு அரசுகள் செயல்பட வேண்டும். வானிலையில் பாதக மான தாக்கங்களை ஏற்படுத்தும் ‘எல் நினோ’ காலத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் ஒன்றிய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை வழங்குவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். பல நீர்நிலைகள், ஆறுகள் வறண்டுள்ள நிலையில் வேளாண்மை மற்றும் குடிநீர் விநியோகத்திற்கான நீர் கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரி களை ஒருங்கிணைத்து மாநில அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.