பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்குப் பின் கூடுதல் ஆதரவு தமிழ்நாடு அரசு முடிவு
2 Jan 2026, 3:33 pm
<p><strong>பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்குப் பின் கூடுதல் ஆதரவு தமிழ்நாடு அரசு முடிவு</strong></p>
<p>சென்னை, ஜன. 2- தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் நலப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யவும், அவர்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை தனது ஆதரவை விரிவுபடுத்த உள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதலில்,”தமிழகம் முழுவதும் உள்ள 28 அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் 1,800-க்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து பழங்குடி மாணவர்களுக்குப் பொருத்தமான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவது ஆகியவற்றுக்குத் துறைரீதியாக பழங்குடியினர் நலத்துறை வழிகாட்டும். கல்லூரியில் சேர்ந்த பிறகு, குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முக்கியப் பாடங்களில் (Core subjects) கூடுதல் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் (Mentoring) வழங்கப்படும். பள்ளியிலிருந்து கல்லூரிக்கு மாறும்போது ஏற்படும் பயிற்று மொழி மாற்றம் (தமிழ் வழி முதல் ஆங்கில வழி வரை) மற்றும் கடினமான பாடச் சூழலை மாணவர்கள் எதிர்கொள்ள உதவி செய்யப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில், பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் சிறந்த நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளனர். ஜேஇஇ (JEE), நீட் (NEET), கியூட் (CUET) மற்றும் கிளாட் (CLAT) போன்ற நுழைவுத் தேர்வுகளுக்காக மாண வர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு நிறுவனத்தை ஏற்கனவே துறை நியமித்துள்ள நிலையில், தற்போது இறுதி வரை சேர்க்கை ஆதரவு மற்றும் சேர்க்கைக்குப் பிந்தைய பழங்குடி மாணவர்களுக்கு ஆதரவை வழங்க மற்றொரு நிறுவனத்தை ஈடுபடுத்த முடிவு செய்துள் ளது. போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை அவர்களின் கல்வி செயல்திறன், ஆர்வங்களை பழங்குடியினர் நலத்துறை வகைப்படுத்தும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
