தமிழ்நாட்டின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெறும் புள்ளி விபரங்களின் தொகுப்பா?
21 Jun 2026, 12:03 am

தமிழ்நாட்டின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெறும் புள்ளி விபரங்களின் தொகுப்பா?

பொருளாதார அறிஞர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா நேர்காணல்

தமிழ்நாடு அரசு அண்மையில் மாநிலத்தின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கை அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்திருப்பது, வருவாய் பற்றாக்குறை அபாயகரமாக வளர்ந்திருப்பது மற்றும் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சரிவைச் சந்தித்திருப்பது ஆகிய மூன்று முக்கியக் கோணங்களை இந்த அறிக்கை முதன்மைப்படுத்துகிறது.

அரசுத் தரப்பில் இது வெறும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு என்றும், அரசியல் நோக்கமற்றது என்றும் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள பொருளாதாரக் கோட்பாடுகள் மற்றும் ஒப்பீடுகள் குறித்து மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் இந்த நிதிநிலை வெள்ளை அறிக்கையை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? இது உண்மையிலேயே கவலைப்படத்தக்க ஒரு நிதி நெருக்கடியா அல்லது மக்கள் நலத்திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தாராளமயக் கதையாடலா? இவை குறித்து தனியார் இணைய இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் விரிவாக விளக்குகிறார் பிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

கேள்வி: தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மரிய வில்சன் அவர்கள் மாநிலத்தின் நிதிநிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளி யிட்டுள்ளார். 2021 இல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் இது போன்ற ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போதைய வெள்ளை அறிக்கையை நாம் எப்ப டிப் புரிந்துகொள்வது? அரசு மக்க ளுக்கு என்ன சொல்ல வருகிறது?

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா: இந்த அறிக்கை பிரதானமாக மூன்று விஷ யங்களைச் சொல்கிறது. முதலாவது, மாநிலத்தின் கடன் கூடிக்கொண்டே போகிறது. இரண்டாவது, வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) அதி கரித்துக் கொண்டே செல்வது மிகவும் அபாயகரமான விஷயம் என்று குறிப்பி டுகிறது. மூன்றாவதாக, மாநிலத்தின் சொந்த வரி வருமானம் என்பது ஒட்டு மொத்த மாநில உற்பத்தி மதிப்பின் (GSDP) சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளதை ‘Collapse of Own Tax Revenue’ என்று ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அவர்கள் தங்களின் கோணத்திலிருந்து சில முக்கியத் தரவுகளை முன்வைத்து, நிதிநிலையைப் புரிந்துகொள்ள இது உதவும் என்கிறார்கள். ஆனால், இந்த அறிக்கையில் உள்ள பிரதானப் பிரச்சனை என்னவென்றால், இது முழுக்க முழுக்க அரசின் செலவுகளை மட்டுமே மையப்படுத்தியிருக்கிறது. இந்தச் செலவுகளால் தமிழகம் அடை ந்த வளர்ச்சி, மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் மற்றும் தமிழகம் எப்படி ஒரு முன்னணி மாநிலமாக உள்ளது போன்றவற்றை இது பேசவில்லை.

கேள்வி: தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக இருப்பதற்கும், இந்தச் செலவுகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

பதில் : தமிழ்நாட்டில் கல்வி, ஆரோக்கி யம் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது ஏதோ அரசுகளின் கொடை அல்ல. உழைப்பாளி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் இடதுசாரிகளின் முன்னெ டுப்புகளால் அரசுகளுக்கு அளிக் கப்பட்ட நிர்பந்தத்தின் விளைவாகவே இவை கிடைத்தன. வரலாற்று ரீதியாகவே கல்வியையும் ஆரோக்கியத்தையும் வழங்குவது அரசின் கடமை என்ற பொதுக்கருத்து தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. நீதிக் கட்சியின் மதிய உணவுத் திட்டம், காம ராஜரின் கல்வித்திட்டங்கள்,எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டம் எனத் தொடர்ச்சி யாக மக்கள் நலன் சார்ந்த பணிகள் இங்கு நடந்துள்ளன. ஆனால், தாராளமயமாக்கல் கொள்கை கள் வந்த பிறகு, இதெல்லாம் அரசின் பொறுப்பல்ல என்ற கருத்தோட்டம் மேலோங்கி வருகிறது. தமிழகத்தை ஆண்ட கட்சிகளும் இதற்கு விதி விலக்கல்ல. எனினும், தமிழகப் பாரம் பரியத்தில் கல்வி, ஆரோக்கியத்தைப் புறக்கணிக்க முடியாது என்பதால் இவற்றில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.

கேள்வி: இந்த அறிக்கையில் 2021-22 இல் இருந்த 5 லட்சம் கோடி ரூபாய் டன், தற்போது 2025-26 இல் 10 லட்சம் கோடியாக, அதாவது இரட்டிப் பாக உயர்ந்துள்ளது என்றும், பொ துத்துறை நிறுவனங்களின் கடனை யும் சேர்த்தால் அது 13 லட்சம் கோடி என்றும் சொல்லப்படுகிறதே?

பதில் : கடன் வாங்குவது என்பது ஒரு பொதுவான பொருளாதார நடவடிக்கை. எல்லா முதலாளிகளும், கம்பெனிக ளும் கூடத்தான் கடன் வாங்குகிறார்கள். ஆனால், அந்தக் கடனை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் கேள்வி. தமிழக அரசு இந்தத் தொகையை வைத்துத் தொடர்ந்து கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்கிறது. உதார ணமாக, தமிழகத்தின் மின் தேவைக ளைப் பழைய நிலையிலேயே இருந்தால் பூர்த்தி செய்ய முடியுமா? அப்படியானால் மின்துறையில் முத லீடுகள் செய்ய வேண்டும் அல்லவா? வெறுமனே பணத்தை எடுத்து யாரும் குப்பையில் போடவில்லை. பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து முத லீடு செய்வதால்தான் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது. ஆனால், இவ்வளவு கடன் வாங்கிவிட்டார்கள் என்ற ஒரு அச்சமூட்டும் தோற்றத்தை இந்த வெள்ளை அறிக்கை காட்ட முனைகிறது.

கேள்வி: இந்த வெள்ளை அறிக்கை யில் தமிழ்நாட்டை குஜராத், மகா ராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநி லங்களோடு ஒப்பிட்டிருக்கிறார் களே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த அறிக்கையில் முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று குஜராத்துடனான ஒப்பீடு. எந்தத் தகுதி யின் அடிப்படையில் தமிழ்நாட்டை குஜ ராத்தோடு ஒப்பிட முடியும்? குஜ ராத்தின் கல்வி வளர்ச்சி என்ன? ஆரோக் கிய நிலை என்ன? ஊரக வளர்ச்சி எப்படி இருக்கிறது? அங்குள்ள கிராமப்புற -நகரப்புற வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் மிகத் துயரமானவை. ஒன்றிய அரசின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு மாநிலமாக, தனியார் துறையின் தயவில் மட்டுமே வளர்ந்த ஒரு ‘தனியார் பெரு நிறுவன மாடல்’ அது. அங்குள்ள உழைப் பாளி மக்களின் ஊதியமும் உரிமைக ளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அதேபோல் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தொழிற்சாலைகள் இருந்தாலும், விதர்பா போன்ற பகுதி களில் கடுமையான பஞ்சமும் வறட்சி யும் நிலவுகிறது. கர்நாடகாவில் பெங்களூ ரைத் தாண்டிப் பார்த்தால் வளர்ச்சி மிகக் குறைவு. ஆனால், தமிழ்நாடு விவசா யத்திலும் தொழிலிலும் பரவலான வளர்ச்சியைப் பெற்ற, மனித வள மேம் பாட்டில் சிறந்து விளங்கும் மாநிலம். இவற்றுடன் குஜராத்தை ஒப்பிடுவதே அபத்தமானது.

கேள்வி: வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) அதிகமாக இருக்கி றது என்பதை ஒரு ஆபத்தான விஷய மாக அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் காட்டிச் சொல்கிறார்களே?

பதில்: இதுதான் இந்த அறிக்கையின் தாராளமயச் சிந்தனை முறை (Nio- liberal mindset). அரசு ஊழியர்களுக் கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கப் படும் சம்பளம் வருவாய் செலவாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு ஆசிரி யர் செய்யும் பணி என்பது ஒரு புதிய கல்வி பெற்ற -திறன் பெற்ற உழைப் புப் படையை (Educated Labour Force) உருவாக்குகிறது. அது ஒரு முத லீடு. அவர்கள் வேலைக்குப் போய் மாநிலத்திற்கு வரி சேர்க்கி றார்கள், வெளிநாடுகளுக்குச் சென்று பணம் அனுப்புகிறார்கள். எனவே, கல்வி யும் சுகாதாரமும் சமூக முதலீடுகள். வட்டி, சம்பளம், பென்ஷன் ஆகிய மூன்றும் சேர்த்து கட்டாயச் செலவுகள் (Committed Expenditure)” 64%ஆக உயர்ந்துவிட்டது என்று கவலைப்படு கிறார்கள். ஆனால், இந்த காலகட்டத் தில் பொதுச் சேவைகள் எவ்வளவு விரிவ டைந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். கட்டடங்கள், பாலங்கள் உட்பட தேவை சார்ந்த கட்டமைப்பில் முதலீடு செய்வதை அங்கீகரிப்பவர்கள், மனித வளத்தில் செய்யும் முதலீட்டை ஏன் வெறும் செலவாக மட்டுமே பார்க்கி றார்கள்?

கேள்வி: 2021-22 இல் 46,000 கோடி யாக இருந்த வருவாய் பற்றாக் குறை, தற்போது 78,000 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறதே?

பதில்: இந்த எண்களைத் தனித்துப் பார்த்தால் பயங்கரமாகத் தெரியும். ஆனால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் (GSDP) சதவீத மாகப் பார்த்தால், 2021-22 இல் 2.25% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை, தற்போது 2.22% ஆகச் சற்றுக் குறைந் திருக்கிறது. அதேபோல், ஒட்டுமொத்த நிலுவைக் கடன் சதவீதம் (Outstanding Liabi lities) 28.7% இல் இருந்து 28.3% ஆகக் குறைந்திருக்கிறது. உண்மை நிலை இப்படி இருக்க, எண்களாக மட்டும் காட்டி, தமிழ்நாடு படுமோசமான நிதி நெருக்கடியில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது ஆரோக் கியமானது அல்ல. 2025-26 என்பது தேர்தல் ஆண்டு என்பதால் சில செல வுகள் முன்கூட்டியே செய்யப்பட் டுள்ளன, அதனால்தான் எண்கள் அதிகமாகக் காட்டுகின்றன.

கேள்வி: “கடந்த 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கிய கடன் அதி கம்” என்ற வாதம் வைக்கப்படுகிறதே?

பதில்: இந்த ஒப்பீடே முற்றிலும் அபத்த மானது. 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு சிறியதாக இருந்தது? அப்போது அரசு வெறும் பள்ளிக்கூடங்களை மட்டுமே நடத்தியது. அனைவரும் கல்லூரிக்குச் செல்லவில்லை. அதன் பிறகு படிப்படியாகக் கல்வி விரி வாக்கம், அனைவருக்கும் கல்வி, சமூக நீதி எனப் பல திட்டங்கள் வந்த போது மனித வள முதலீட்டிற்கான செலவுகள் அதிகரித்தன. பொருளாதாரம் வள ரும் போது கடனின் அளவும், வரவு செலவின் அளவும் பெரிய எண்களாக மாறுவது இயல்பு. இதைக் கொண்டு ‘ஒவ்வொரு குழந்தையும் கடனோடு பிறக்கிறது’ என்று சொல்வதெல்லாம் மக்களை திசைதிருப்பும் வாதங்கள்.

கேள்வி: ‘நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம்’ (FRBM Act) படி 3% என்ற வரம்பை மீறி நிதிப் பற்றாக்குறை 3.77% ஆக இருப்பதாக அறிக்கை சொல்கிறதே?

பதில்: எப்.ஆர்.பி.எம் (FRBM) சட்டமே நவீன தாராளமயப் பார்வையில் இருந்து உருவாக்கப்பட்டதுதான். 2003 இல் வாஜ்பாய் அரசால் கொண்டு வரப்பட்டு, 2004 இல் ப.சிதம்பரம் அவர்களால் கை யெழுத்திடப்பட்ட இந்தச் சட்டத்தை, கடந்த 22 ஆண்டுகளாக யாராலாவது முழுமையாக அமல்படுத்த முடிந்த தா? இல்லை. ஏனெனில் இது எதார்த்தத்திற்குப் புறம்பான சட்டம். ஒரு மாநிலத்தில் சுனாமி,வறட்சி, பூகம்பம் அல்லது கோவிட் போன்ற பேரிடர்கள் வரும் போது, அரசு இவ்வளவுதான் செல வழிக்க வேண்டும் என்று சட்டம் பேசி னால் மக்களைச் சாகவிட முடியுமா? ‘அரசு கடன் வாங்கக் கூடாது,பொதுத் துறை சொத்துக்களை விற்றுதான் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண் டும்’ என்ற தாராளமயக்கொள்கை யின் வடிவம்தான் இந்தச் சட்டம்.

கேள்வி: மின்துறை, போக்குவரத்துத் துறை போன்ற பொதுத்துறை நிறுவ னங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கு வதாக நிதி அமைச்சர் கவலை தெரிவித்துள்ளாரே?

பதில்: போக்குவரத்து, மின்சாரத் துறை களில் நஷ்டம் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம், மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள்.இந்த மானி யங்களை, அரசு நட்டக்கணக்கில் காட் டக்கூடாது. மேலும், ஒன்றிய அரசின் மின்கொள்கைகள் மாநிலங்களுக்குப் பெரும் கெடுபிடிகளை உண்டாக்கு கின்றன. அதிக விலை கொடுத்து தனி யார் துறையிடம் மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதேபோல், டீசல் விலையை உயர்த்தி யது யார்? ஒன்றிய அரசு. டீசல் விலை உயர்ந்தால் போக்குவரத்துக் கழகங்களு க்கு நஷ்டம் வராமல் என்ன செய்யும்? 2014 முதல் 2016 வரை சர்வதேசச் சந்தை யில் கச்சா எண்ணெய் விலை கடுமையா கக் குறைந்தபோதும் மோடி அரசு அதன் பலனை மக்களுக்குத் தராமல், தன் வசம் வைத்துக் கொண்டது. விவசாயிக ளுக்கான ஆதரவு விலையைக் குறைத் தும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கட்டுப்படுத்தியும்தான் அவர்கள் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதாகச் சாதனை பேசினார்கள்.

கேள்வி: மாநிலத்தின் நிதி நிலைமை யைச் சீரமைக்க வேறு என்ன வழிகள் உள்ளன?

பதில்: முன்னதாகப் பழனிவேல் தியா கராஜன் நிதி அமைச்சராக இருந்த போது சில சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசினார். கல் குவாரிகள் மற்றும் இயற்கை வளங்களை முறையாக ஏலம் விட்டால் நல்ல வருவாய் கிடைக்கும் என்றார். மதுவிலக்குக் கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவரப் பேசினார். மாநிலத்தின் சொந்த வருவாயை உயர்த்த வரி வசூலை ஒழுங்குபடுத்துவது அவசி யம். தமிழ்நாட்டில் பல சிறுகுறு தொழில் கள் வரி வரம்பிற்குள் வராமல் இருக்க லாம், அது நல்ல விஷயம்தான். அவர் களை நசுக்காமல், பெரிய நிறுவனங்க ளின் வரி ஏய்ப்புகளைத் தடுத்து, நிர்வா கத்தை திறம்பட நடத்தினால் வரு வாயைப் பெருக்க முடியும்.

கேள்வி: அப்படியானால், தற்போதைய நிதி அமைச்சர் இந்த வெள்ளை அறிக்கை யின் மூலம் என்ன அஜெண்டாவை செட் பண்ணுகிறார் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: எனக்குத் துல்லியமாகத் தெரிய வில்லை. ஆனால், இந்த அறிக்கையைத் தயாரித்த ஐஏஎஸ் அதிகாரிகள் போன்ற அதிகார வர்க்கத்தினர், முழுமையாக நவீன தாராளமயப் பொருளாதாரச் சிந்தனையில் ஊறியவர்கள். மாநிலத்தின் நிதிநிலை ஏதோ பயங்கர நெருக்கடியில் இருப்பது போன்ற ஒரு பரபரப்பான தோற்றத்தை உருவாக்கி, ‘நாங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றைத் தற்போது நிறைவேற்ற சாத்திய மில்லை, எனவே கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்’ என்று மக்க ளைத் தயார்படுத்துவதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையாகக் கூட இது இருக்கலாம்.

கேள்வி: ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு எந்த அள வுக்கு முக்கியமானது? நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு என்ன மாதிரியான பாதிப்புகள் உள்ளன?

பதில்: ஒன்றிய அரசு வசூலிக்கும் வரி களில் ஒரு பகுதி மாநிலங்களுக்குப் பகிரப்பட வேண்டும். ஆனால் நிதி ஆணையம் வைத்துள்ள ஃபார்முலா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற வளர்ந்த மாநிலங்களுக்குச் சாதக மாக இல்லை. நாம் மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தி, ஓரளவு வளர்ந்து விட்டோம் என்பதாலேயே நமக்குக் கிடைக்கும் நிதிப் பகிர்வு பங்கு குறைவாக உள்ளது.

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு தர வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. மேலும், வருமான வரி விதிக்கும் அதிகாரம், ஜிஎஸ்டி போன்ற மிக முக்கிய வரி அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கைகளி லேயே குவிந்து கிடக்கின்றன. மாநிலங்க ளின் நிதி உரிமைகளைப் பறித்துவிட்டு, நிதியையும் ஒழுங்காகக் கொடுக்காமல், மாநிலங்கள் மீது மட்டும் குற்றம் சாட்டு வது முறையல்ல. இந்த வெள்ளை அறிக் கையில் ஒன்றிய அரசின் கொள்கை களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிப் போதிய பகுப்பாய்வு இல்லை, வெறும் எண்கள் மட்டுமே உள்ளன.