தமிழ்நாடு நிதிநிலை வெள்ளை அறிக்கை: ஓர் ஆய்வு
17 Jun 2026, 8:53 pm

தமிழ்நாடு நிதிநிலை வெள்ளை அறிக்கை: ஓர் ஆய்வு

தமிழ்நாட்டின் பொதுநிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தவெக அரசின் நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டுள்ளார். முந்தைய ஐந்தாண்டு திமுக ஆட்சிக்கால நிதி மேலாண்மையை புள்ளிவிவரங்களுடன் சாட முயலும் இந்த ஆவணம், மாநிலத்தின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடியாக இரட்டிப்பாகி இருப்பதையும், வருவாய்ப் பற்றாக்குறை வரலாற்று உச்சத்தைத் தொட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. எனினும், இக்கடன் நெருக்கடிக்கு முந்தைய மாநில அரசின் நிர்வாகக் குறைபாடுகள் மட்டுமே காரணமா அல்லது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிதிப் பகிர்வுக் குறைப்பு, செஸ் மற்றும் சர்சார்ஜ் சுரண்டல், ஜிஎஸ்டி தன்னாட்சி பறிப்பு போன்ற உள்கட்டமைப்பு அநீதிகள் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது. நிதிப் பொறுப்புச் சட்ட வரம்புகளுக்குள் இருக்கும் கடன் எதார்த்தம், இரு கட்சிகளின் தேர்தல் கால இலவச நலத்திட்டப் போட்டிகள் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால மக்கள்தொகை மூப்படைதல் சவால்கள் உள்ளிட்ட பன்முகப்பார்வைகளின் அடிப்படையில், மாநிலத்தின் நிதிச் சித்திரத்தை, வெள்ளை அறிக்கை தரும் புள்ளி விபரங்களுடன் மேலும் சில விபரங்களை இணைத்து இச்செய்தித் தொகுப்பில் ஆராய்வோம்:

1“சாதாரண வருவாயில் தினசரிச் செலவுகூட நடத்த முடியாது” — தவெக அரசின் வெள்ளை அறிக்கை சொல்லும் நிதி யதார்த்தம்

தமிழ்நாட்டின் பொதுநிதி நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை 2026 ஜூன் 16 அன்று நிதியமைச்சர் என். மரிய வில்சன் சட்டமன்றச் செயலகத்தில் வெளியிட்டார். இப்புதிய தவெக அரசு, 2020-21ஆம் நிதியாண்டை அடித்தளமாகக் கொண்டு, அதற்குப் பிந்தைய 2021-22 முதல் 2025-26 வரையிலான முந்தைய திமுக ஆட்சிக்குட்பட்ட ஐந்தாண்டுகளின் நிதி நிர்வாகத்தை இந்த அறிக்கையில் விரிவாக ஆராய்ந்துள்ளது. வெள்ளை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “மாநிலத்தின் சாதாரண வருவாயைக் கொண்டு அரசால் தினசரிச் செலவுகளைக்கூடச் சந்திக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். வெள்ளை அறிக்கையின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டின் நேரடிக் கடன் கடந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி ரூ.5.13 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GSDP) 28.3 சதவீதமாகும். பொதுத்துறை நிறுவனங்களின் கடன்கள் மற்றும் அரசின் இதர பொறுப்புகளையும் சேர்த்தால், மாநிலத்தின் மொத்த நிதிப் பொறுப்புகள் ரூ.13.18 லட்சம் கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும், மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை வரலாற்று அளவாக ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளதுடன், தமிழ்நாட்டின் தனிநபர் கடன் சுமை ரூ.1,28,934 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டு களில் மட்டும் சேர்க்கப்பட்ட கடன், அதற்கு முந்தைய ஆறு பத்தாண்டுகளின் மொத்தக் கடனை விட அதிகம் என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆய்வா? விமர்சனமா?

இந்த வெள்ளை அறிக்கை பொருளாதார ஆவணம் மட்டுமல்லாது, ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற அன்றே நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு முன்னதாகவே எதிர்வினை ஆற்றியிருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாநிலத்தின் கருவூலம் காலியாக இல்லை; பணம் இருக்கிறது. கடன் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்தான் உள்ளது” எனக் கூறியிருந்தார். எனினும், நிதியமைச்சர் மரிய வில்சன் தன் உரையில், “இது முந்தைய அரசு மீதான அரசியல் விமர்சனமல்ல; மாறாக நிதிநிலையைச் சீரமைப்பதற்கான நேர்மையான ஆய்வு” எனக் குறிப்பிட்டார். மேலும், “வரவு குறைவாயினும் செலவு வரம்பு மீறாவிட்டால் கேடில்லை” என்ற திருக்குறளையும் அவர் மேற்கோள் காட்டினார். அதேநேரம், மாநிலத்தின் இந்த நிதி நெருக்கடிக்கு ஒன்றிய அரசின் வரிப் பகிர்வுக் குறைப்பும் ஒரு முக்கியக் காரணம் என்பதை இந்த வெள்ளை அறிக்கையே ஓரிடத்தில் ஒப்புக்கொண்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

2 ஆண்டுக்கு 14.3% வேகத்தில் வளர்ந்த கடன் சுமை

கடந்த ஐந்தாண்டுகளில் முந்தைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் வளர்ச்சி எத்தகைய வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதை நிதிநிலை வெள்ளை அறிக்கை காட்டியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தின்படி, கடந்த அறுபது ஆண்டுகாலமாகத் தமிழ்நாடு கொண்டிருந்த மொத்தக் கடனைவிட, கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட கடனின் அளவு அதிகமாகும். 2021 ஏப்ரல் 1 அன்று ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் நேரடிக் கடன், 2026 மார்ச் 31 அன்று கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதன் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 14.3 சதவீதமாகும்.

ம்படுத்துவதற்கான மூலதனச் செலவோ வெறும் 8.3 சதவீத வேகத்திலேயே வளர்ந்துள்ளது. அதாவது, புதிய சொத்துக்களை உருவாக்குவதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது. “மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதனச் செலவுக்கும், முந்தைய அரசு 2.26 ரூபாய் கடன் வாங்கியுள்ளது” என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் கடன்- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) விகிதம் 28.3 சதவீதமாக உள்ளது. இது கர்நாடகா (23.4%), மகாராஷ்டிரா (19.7%), குஜராத் (17.6%) ஆகிய மாநிலங்களை விட அதிகம் என அறிக்கை கவலை தெரிவிக்கிறது.

மத்திய நிதிக் குழுவின் அநீதி

இருப்பினும், முந்தைய திமுக அரசின் பொருளாதார நிபுணர்கள் இக்குற்றச்சாட்டிற்கு வேறு வாதங்களை முன்வைக்கின்றனர். கடனை வெறும் தொகையாகப் பார்க்காமல் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன்(GSDP) ஒப்பிட்டே பார்க்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் கடன் அளவு 15ஆவது நிதிக் குழு அனுமதித்த வரம்பிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், மத்திய நிதிக் குழுக்களின் ஒட்டுமொத்த வரிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளது. 10ஆவது நிதிக் குழுவில் 6.64 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, தற்போது 16ஆவது நிதிக் குழுவில் 4.097 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒன்றிய அரசின் நிதி நெருக்கடிகளே மாநிலத்தைக் கூடுதல் கடன் வாங்கத் தள்ளியது என்ற வாதமும் நிலவுகிறது. அதேவேளையில், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அமைப்பின் ஆய்வாளர் கே.ஆர். சண்முகத்தின் ஆய்வறிக்கை (Working Paper 226, 2022), “தமிழ்நாட்டின் தற்போதைய கடன் நிலை நிலைத்தன்மையற்றது; மாநிலத்தின் கடன் நிலைத்தன்மை வரம்பு என்பது சுமார் 18.5 சதவீதம் மட்டுமே” என எச்சரித்திருந்ததையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

3 ரூ.67,050 கோடி வட்டிச் சுமையால் திணறும் தமிழகம்

தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்களுக்காகச் செலுத்தும் வட்டித் தொகையானது, மாநிலத்தின் புதிய சொத்து உருவாக்கத்திற்கான மூலதனச் செலவைவிடப் பெரும் பங்குகளாக உயர்ந்து நிற்பதாக வெள்ளை அறிக்கை கவலை தெரிவிக்கிறது. கடந்த 2025-26 நிதியாண்டின் தற்காலிகக் கணக்குகளின்படி, மாநிலத்தின் வட்டிச் செலவு ரூ.67,050 கோடியை எட்டியுள்ளது. ஆனால், அதே நிதியாண்டில் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்காகச் செய்யப்பட்ட மூலதனச் செலவோ வெறும் ரூ.50,911 கோடி மட்டுமே. இதன் மூலம், வட்டி மற்றும் மூலதனச் செலவு விகிதம் 1.32:1 என்ற அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.41,564 கோடியாக இருந்த வட்டிச் சுமை, 2025-26இல் ரூ.67,050 கோடியாக, அதாவது 61 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வட்டித் தொகையானது மாநிலத்தின் மொத்த வருவாய் வரவில் 22.8 சதவீதத்தையும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் (SOTR) 34.8 சதவீதத்திற்கும் மேல் விழுங்கு கிறது. எளிமையாகச் சொன்னால், தமிழக அரசு சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாயிலும் சுமார் 22.8 பைசா முந்தைய கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்கே வீணாகிறது. இத்தகைய வட்டிச் சுமை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களைவிட இரண்டு மடங்கு அதிகம் என வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒன்றிய அரசின் பாராமுகமும் மாநிலத்தின் மீதான அழுத்தமும்

வட்டிச் சுமை அதிகரிப்புக்கு மாநில அரசின் கடன் குவிப்பு ஒருபுறமிருந்தாலும், ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதும், வரிப் பகிர்வைக் குறைப்பதும் இச்சுமையை மேலும் தீவிரமாக்குகிறது என்று பொருளாதார அறிஞர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னரே குறிப்பிட்டது போல, “ ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் திரும்பக் கிடைப்பது வெறும் 29 பைசா மட்டுமே. ஆனால் பாஜக ஆளும் வடமாநிலங்களுக்குக் கூடுதல் நிதி அள்ளி வழங்கப்படுகிறது.” கூட்டாட்சித் தத்து வத்திற்கு எதிரான இத்தகைய நிதிப் பகிர்மானக் கொள்கை களால், உள்கட்டமைப்புச் செலவுகளுக்குத் தமிழ்நாடு தொடர்ந்து கடன்களை நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, வட்டிச் சுழலில் சிக்கியுள்ளது தெளிவாகிறது.

4 .2013 முதல் ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை

மாநிலத்தின் அன்றாட நிர்வாகச் செலவுகளுக்கே (சம்பளம், ஓய்வூதியம், வட்டி போன்றவை) போதிய வருவாய் இல்லாமல், அதற்கும் தனியாகக் கடன் வாங்கும் நிலையே ‘வருவாய்ப் பற்றாக்குறை’ எனப்படுகிறது. தவெக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கையின்படி, கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை வரலாற்று உச்சமாக ரூ.78,324 கோடியை (GSDP-இல் 2.22%) எட்டியுள்ளது. இது கொரோனா பெருந்தொற்று தாக்கிய 2020-21ஆம் நிதி யாண்டின் வருவாய்ப் பற்றாக்குறையைவிடவும் அதிக மாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இத்தொகை ரூ.46,538 கோடியிலிருந்து இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

பொருளாதாரக் கணக்குகளின்படி, கடந்த 2013-14ஆம் நிதியாண்டு முதல் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழ்நாடு வருவாய்ப் பற்றாக்குறை மாநிலமாகவே நீடித்து வருகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா (0.8%), மகாராஷ்டிரா (0.7%) ஆகியவற்றின் வருவாய்ப் பற்றாக்குறை விகிதத்தைவிடத் தமிழ்நாட்டின் பற்றாக்குறை 2.5 மடங்கு அதிகமாகும். குஜராத் மாநிலமோ 0.8 சதவீத வருவாய் உபரியைக் கொண்டுள்ளது. 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நிதிப் பொறுப்புச் சட்டம் (FRBM), வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்க முதலில் 2007-08ஆம் ஆண்டை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அது தொடர்ந்து தள்ளிப்போய், தற்போது 2026-27 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கொள்கைகளால் அதிகரித்த சுமை

மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்ததற்குத் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை மட்டுமல்லாது, ஒன்றிய அரசின் சில கட்டமைப்பு மாற்றங்களும் முக்கியக் காரணங்களாகும். கடந்த 2022 ஜூனில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு உத்தரவாதக் காலம் முடிவுக்கு வந்ததும், 16ஆவது நிதிக் குழு மாநிலங்களுக்கான வருவாய்ப் பற்றாக்குறை மானியங்களை முற்றிலுமாக நீக்கியதும் தமிழ்நாட்டின் வருவாய் வரவைக் கடுமையாகப் பாதித்தன. இத்தகைய தன்னிச்சையான ஒன்றிய அரசின் முடிவுகள், உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்குப் பெரும் வருவாய் முடக்கத்தை ஏற்படுத்தி, பற்றாக்கு றையைத் தீவிரப்படுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது.

5 ரூ.51,000 கோடி இழப்புக்குக் காரணம் நிர்வாகக் கசிவா?

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் திரட்டும் திறன் முந்தைய ஆட்சியில் பெருமளவு சரிந்துள்ளதாக வெள்ளை அறிக்கை குற்றம்சாட்டுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாய் வரவு, கடந்த 2021-22இல் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில்(GSDP) சுமார் 10 சதவீதமாக இருந்தது, 2025-26இல் 8.32 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) மற்றும் ஜிஎஸ்டிபி விகிதமானது 5.93 சதவீதத்திலிருந்து 5.45 சதவீதமாக — மாநில வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவுக்கு — வீழ்ச்சி யடைந்துள்ளது. கடந்த 2022-23இல் எட்டப்பட்ட 6.33 சதவீத உச்சவரம்போடு ஒப்பிடுகையில், இச்சரிவினால் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள தோராய வருவாய் இழப்பு ரூ.51,000 கோடியாகும். ஜிஎஸ்டி, பெட்ரோலியப் பொருட்களின் மீதான வாட் வரி, மாநில கலால் வரி, முத்திரைத் தீர்வை, வாகன வரி என அனைத்து முதன்மைத் துறைகளிலும் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வெள்ளை அறிக்கை இச்சரிவை பொருளாதார மந்தநிலையாகப் பார்க்காமல், முந்தைய அரசின் கொள்கை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள், வருவாய்க் கசிவுகள் மற்றும் அமைப்புசார் ஊழல்களால்தான் இது நிகழ்ந்தது என்று நேரடியாகக் குற்றம்சாட்டுகிறது.

ஜிஎஸ்டி அநீதியும் பொருளாதார எதார்த்தமும்

மறுபுறம், சொந்த வரி வருவாய் சரிவுக்குப் பின்னால் உள்ள கூட்டாட்சித் தத்துவச் சிக்கல்களைப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோதி சிவஞானம் போன்ற அறிஞர்களின் கூற்றுப்படி, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு மாநிலங்களின் வரி விதிப்பு உரிமைகள் பெருமளவு சுருக்கப்பட்டுவிட்டன. மேலும், ஒன்றிய அரசு தன் பங்கிற்கு மானியங்களை ஜிஎஸ்டிபியில் 1.7 சதவீதத்திலிருந்து 0.7 சதவீதமாகவும், வரிப் பகிர்வை 1.8 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாகவும் குறைத்துள்ளது. எனவே, நிர்வாகக் கசிவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும், மாநில வரி வருவாய் வீழ்ச்சிக்கு ஒன்றிய அரசின் வரிச் சுரண்டலே அடிப்படைக் காரணம் என்பதை மறுக்க இயலாது.

6 .பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பே 87% வருவாய் காலி

மாநில அரசின் வருவாயில் பெரும் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படாமல், அன்றாடக் கடமைகளுக்கே முடக்கப்படுவதை வெள்ளை அறிக்கை புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், மற்றும் முந்தைய கடனுக்கான வட்டி ஆகிய மூன்று ‘உறுதியான செலவுகள்’ மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் வரவில் இச்செலவுகளின் பங்கு 60 சதவீதத்திலிருந்து 64.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் கணிசமானது கடன் வட்டி என்பதை பகுதி 2 இல் பார்த்தோம். அண்டை மாநிலங்களில் இத்தகைய செலவுகள் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இதர சட்டப்பூர்வக் கடமைகளையும் சேர்த்தால், ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே மாநிலத்தின் வருவாயில் 87 விழுக்காடு முன்பதிவாகி (Pre-committed) விடுகிறது.

இதன் நேரடிப் பாதிப்பு மாநிலத்தின் மூலதனச் செலவில் (Capital Expenditure) எதிரொலித்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்தச் செலவினத்தில் மூலதனச் செலவு வெறும் 11.8 விழுக்காடு (GSDP-இல் 1.44%) மட்டுமே ஆகும். இது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான ஒதுக்கீடாகும். கடந்த 2021-22இல் இருந்த 1.79 சதவீத மூலதனச் செலவு விகிதத்தையாவது முந்தைய அரசு தக்கவைத்திருந்தால், கடந்த மூன்றாண்டுகளில் கூடுதலாக ரூ.28,217 கோடியைக் கட்டமைப்பு வசதிகளுக்குச் செலவிட்டி ருக்க முடியும். இத்தொகையைக் கொண்டு சுமார் 1,000 கிலோமீட்டர் விரைவுச்சாலைகள், 30 பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனைகள் அல்லது 2,000 புதிய பள்ளிக் கட்டிடங்களைக் கட்டியிருக்கலாம் என வெள்ளை அறிக்கை கணக்கிட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டும் மக்கள் நலச் செலவுகளும்

இருப்பினும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் மூலதனச் செலவு ரூ.51,443 கோடியிலிருந்து ரூ.59,561 கோடியாக (சுமார் 16%) உயர்த்தப்பட்டிருந்தது. கடன்களையும் உள்ளடக்கிய மொத்த மூலதன ஒதுக்கீடு ரூ.73,270 கோடியாகக் காட்டப்பட்டிருந்தது. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற நலத்திட்டங்களுக்காக அரசு செய்யும் செலவுகளை வெறும் “வருவாய்ச் செலவு” என்று சுருக்கிவிட முடியாது; அவை மனிதவள மேம்பாட்டிற்கான “கட்டமைப்புச் செலவுகள்” என்றே கருதப்பட வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

7 .மூன்று மடங்காகிய அரசு உத்தரவாதங்கள், ரூ.2.47 லட்சம் கோடி மின்துறைக் கடனால் நிதி நெருக்கடி

மாநில அரசின் நேரடிக் கடன் தவிர, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்காக அரசு அளித்துள்ள ‘மறைமுகக் கடன்கள்’ மற்றும் ‘உத்தரவாதங்கள்’ (Guarantees) தமிழ்நாட்டின் நிதி நிலையைத் திவாலாகும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக வெள்ளை அறிக்கை எச்சரிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.65,659 கோடியாக இருந்த அரசு வழங்கிய உத்தரவாதங்கள், 2026 மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்து ரூ.1,79,782 கோடியை எட்டியுள்ளது. இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.7 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.3.18 லட்சம் கோடியாக உள்ள நிலையில், மின்துறை (TANGEDCO) மட்டுமே தனியாக ரூ.2.47 லட்சம் கோடி கடனையும், ரூ.1.82 லட்சம் கோடி திரண்ட நட்டத்தையும் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் சேர்த்தே மாநிலத்தின் மொத்த நிதிப் பொறுப்புகள் ரூ.13.18 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலையும் மோசமாக உள்ளது; எட்டுக் கழகங்களின் மொத்த நட்டம் ரூ.72,667 கோடியாகும். இக்கழகங்களுக்கு ஒரு கிலோமீட்டரை இயக்குவதற்கு ரூ.78.81 செலவாகும் நிலையில், வருவாயோ வெறும் ரூ.25.97 மட்டுமே கிடைக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பும் மின்வாரிய அழுத்தமும்

மின்துறையின் இந்த நிதிச் சுமைக்கு மிக முக்கியப் பின்னணி ஒன்று வெளி ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. கடந்த 2025 செப்டம்பரில் தில்லி டிஸ்காம் (Discom) வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒழுங்குமுறைச் சொத்துக்களை” (Regulatory Assets) மின்வாரியங்களின் ஆண்டு வருவாய்த் தேவையில் 3 சதவீதத்திற்குள் வரம்பிட வேண்டும் என்றும், ஏற்கெனவே நிலுவையில் உள்ளவற்றை 2024 ஏப்ரல் 1 முதல் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்குள் தீர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாடு அரசு வரும் 2026-27 முதல் 2030-31 வரை ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.11,800 கோடியை மின்வாரியத்திற்காக ஒதுக்க வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 2021-26 காலகட்டத்திலேயே மின்துறைக்கு அரசு வழங்கிய நிதி உதவி மட்டும் ரூ.1.45 லட்சம் கோடியாகும் (2025-26இல் மட்டும் ரூ.33,478 கோடி என்பது குறிப்பிடத்தக்கது).

8. 3% வரம்பைத் தாண்டிய நிதிப் பற்றாக்குறை

மாநிலங்களின் நிதி ஒழுங்கைக் கட்டுப்படுத்து வதற்காகக் கொண்டுவரப்பட்ட 2003ஆம் ஆண்டின் ‘தமிழ்நாடு நிதிப் பொறுப்புச் சட்டம்’ (FRBM), நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GSDP) 3 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஆனால், தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின்படி, கடந்த ஐந்தாண்டு ஆய்வுக் காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் இந்த 3 சதவீத வரம்பு தொடர்ந்து மீறப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025-26 நிதியாண்டின் தற்காலிகக் கணக்குகளின்படி (Provisional Actuals), மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.1,33,208 கோடியாக, அதாவது ஜிஎஸ்டிபியில் 3.77 சதவீதமாக — வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவுக்கு — பதிவாகியுள்ளது. இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் (சிஏஜி) தனது தணிக்கை அறிக்கைகளில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் பட்ஜெட் மதிப்பீடு (BE), திருத்திய மதிப்பீடு (RE), மற்றும் இறுதித் தணிக்கைக் கணக்குகளுக்கு இடையே உள்ள பெரிய இடைவெளியையே இவ்விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

கணக்கு முறை முரண்பாடு இங்கு ஒரு முக்கியப் பொருளாதார முரண்பாட்டை விளக்கலாம். முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த 2026-27 இடைக்கால பட்ஜெட்டில், 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 3.48 விழுக்காடு (திருத்திய மதிப்பீட்டின்படி) எனக் காட்டப்பட்டிருந்ததுடன், 2026-27இல் இது 3 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய வெள்ளை அறிக்கையோ தற்காலிகக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு அது 3.77 சதவீதம் என்கிறது. இது எண்களில் உள்ள முறைகேடு அல்ல; மாறாக பட்ஜெட் மதிப்பீடுகளுக்கும் தற்காலிகக் கணக்குகளுக்குமான ‘முறையியல் வேறுபாடே’ (Methodological Difference) ஆகும். இதை முறையியல் வேறுபாடு எனக் கொள்ளலாம்.

9. தவெக-வின் வாக்குறுதிகளுக்குக் காத்திருக்கும் நிதிச் சோதனை

முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த 2026-27 இடைக்கால பட்ஜெட்டின் மதிப்பீடுகள் யதார்த்தத்திற்குப் புறம்பானவை என்றும், மிகை மதிப்பீடு செய்யப்பட்டவை என்றும் வெள்ளை அறிக்கை சாடியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 19 சதவீத வளர்ச்சியுடன் ரூ.2,29,579 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய எதார்த்தமான 8 சதவீத வரி வளர்ச்சியைக் கணக்கிட்டால், மாநிலத்திற்கு ரூ.2,08,000 கோடியே கிடைக்கும்; அதாவது பட்ஜெட்டில் சுமார் ரூ.14,000 கோடி மிகையாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும், மின்துறை இழப்பீட்டிற்கான ரூ.16,000 கோடி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒழுங்குமுறைச் சொத்துக்களுக்காக ஒதுக்க வேண்டிய ரூ.11,800 கோடி என மொத்தம் சுமார் ரூ.27,800 கோடி மதிப்பிலான முக்கியச் செலவுகள் பட்ஜெட்டில் முறையாகக் காட்டப்படாமல் விடுபட்டுள்ளன. இதனால், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,696 கோடியாகக் காட்டப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, இச்செலவுகளை இணைக்கும்போது உண்மையில் சுமார் ரூ.90,500 கோடியாக உயரக்கூடும். அதேபோல, நிதிப் பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.64 லட்சம் கோடியை நெருங்கக்கூடும் என வெள்ளை அறிக்கை எச்சரிக்கிறது (இவை வெள்ளை அறிக்கையின் கணிப்புகள் மட்டுமே, இறுதி செய்யப்பட்ட கணக்குகள் அல்ல). ஒன்றிய அரசின் நிகர கடன் உச்சவரம்பு நிபந்தனைகளின்படி, தமிழ்நாடு அதிகபட்சமாக ரூ.1.52 லட்சம் கோடி மட்டுமே கடன் வாங்க முடியும் என்பதால், இப்போதைய நிலுவையில் உள்ள உறுதிமொழிக் கடமைகளைச் சந்திப்பதே புதிய அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

தேர்தல் வாக்குறுதிகளும் நிதி எதார்த்தமும்

இங்குதான் புதிய தவெக அரசு தனக்குத்தானே ஒரு முரண்பாட்டை உருவாக்கிக் கொள்கிறது. முந்தைய அரசின் நிதிச் சீர்கேட்டைப் பட்டியலிடும் தவெகவின் சொந்தத் தேர்தல் வாக்குறுதிகளும் பெரும் நிதிச் சுமை கொண்டவை ஆகும். பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, வேலையற்ற பட்டதாரிகளுக்கு ரூ.4,000, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.75,000 வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி, மற்றும் ரூ.25 லட்சம் வரையிலான குடும்ப மருத்துவக் காப்பீடு ஆகிய தவெக வின் வாக்குறுதிகளைச் செயல்படுத்தினால், அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை இன்னும் பல மடங்கு உயரும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கி ன்றனர். வெள்ளை அறிக்கை காட்டும் நிதி எதார்த்தம், தவெக அரசு தனது சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் பெரும் சோதனையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

10 .“செழிப்படைவதற்கு முன்பே மூப்படையும் தமிழ்நாடு”

தமிழ்நாட்டின் எதிர்காலப் பொதுநிதி நிலையை அச்சுறுத்தப் போகும் மிக ஆழமான சமூக-பொருளாதாரக் காரணியாக “மக்கள்தொகை மூப்படைதல்” (Demographic Ageing) இருக்கும் என வெள்ளை அறிக்கை தொலைநோக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டின் முதியோர் மக்கள்தொகை 2011இல் 10.6 சதவீதமாக இருந்தது, வரும் 2031ஆம் ஆண்டில் 18.2 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 71.7 சதவீத வளர்ச்சியாகும் என்பதுடன், கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்கள் மற்றும் தேசிய சராசரியை விடப் பன்மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில், வரி செலுத்தும் திறன் கொண்ட வேலை வயதுடைய மக்கள்தொகை (Working-age population) கடந்த 2021இல் 66.4 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டுவிட்டு, தற்போது குறையத் தொடங்கியுள்ளது; இது 2036இல் 63.6 சதவீதமாகச் சுருங்கும்.

இதன் விளைவாக, முதியோர் சார்பு விகிதமானது (Old-age dependency ratio) 2021இல் இருந்த 20.6 சதவீதத்திலிருந்து 2036இல் 32.7 சதவீதமாகக் கிடுகிடுவென உயரும். இது ஒரு ஆபத்தான ‘கத்தரிக்கோல் விளைவை’ (Scissors Effect) ஏற்படுத்தும் — அதாவது, ஒருபுறம் முதியோர்களுக்கான ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, முதியோர் சுகாதாரம் போன்ற சமூகப் பாதுகாப்புச் செலவுகள் எகிறும்; மறுபுறம் உழைத்து வரி செலுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். இதனால், மாநிலம் பொருளாதார ரீதியாகப் போதிய அளவு “செழிப்படைவதற்கு முன்பே மூப்படையும்” (Growing old before growing rich) அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை எச்சரிக்கிறது.

மத்திய நிதிக் குழுவின் இரட்டை அநீதி ரிசர்வ் வங்கியின் அண்மைக்கால ‘State Finances: A Study of Budgets’ அறிக்கையின்படி, அகில இந்திய அளவில் முதியோர் சார்பு விகிதம் 2036இல் 23 சதவீதமாக இருக்கும்போது, கேரளா (38.3%), தமிழ்நாடு (32.7%) ஆகிய தென்மாநிலங்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்திக்கும். இது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் விளைவே ஆகும். மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டைப் பாராட்ட வேண்டிய ஒன்றிய அரசோ, 16ஆவது நிதிக் குழுவின் மூலம் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான நிதி ஊக்கத்தொகைகளைப் படிப்படியாகக் குறைத்து வருகிறது. இதனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, மத்திய வரிப் பகிர்விலும் தனது பங்கை இழந்து, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையிலும் பின்தங்கும் வரலாற்றுத் துரோகத்தை எதிர்கொண்டு வருகிறது.

தவெக அரசின் வெள்ளை அறிக்கை தமிழ்நாட்டின் எதிர்கால பொருளாதார திசை வழிக்கு என்ன மாற்றுக் கொள்கை தேவை என்பதை விவாதிப்பதற்கான ஒரு ஆவணமாக பயன்படுத்தப்படலாம்; மாறாக பரஸ்பரம் அரசியல் மோதலுக்கான கருவியாக அல்ல!

தொகுப்பு: எஸ்.பி.ராஜேந்திரன் ஆதாரங்கள்: தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை 2026, தமிழ்நாடு வரவு செலவு திட்ட ஆவணங்கள் (இடைக்கால பட்ஜெட் 2026-27), தமிழ், ஆங்கில செய்திகள், ஆவணங்களின் குறிப்புகள்