மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்துக! தமிழக அரசுக்குச் சங்கம் அவசரக் கோரிக்கை
24 May 2026, 9:57 pm

மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்துக! தமிழக அரசுக்குச் சங்கம் அவசரக் கோரிக்கை

சென்னை, மே 22 - தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்பு நிலை பெண்களுக்கு எதிராக அண்மைக் காலமாக அரங்கேறி வரும் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு உடனடியாகத் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள கொடூரச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டித் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

மாவட்டங்களில் தொடரும் கொடூரம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் கடந்த மே 17 அன்று அரிசி ஆலைத் தொழிலாளியான, செவித்திறன் பாதித்த 37 வயது மாற்றுத்திறனாளிப் பெண் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு உரிய நிவாரணமும், அரசுப் பணியும் வழங்கிட வேண்டும் எனச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்தில் தற்காலிகத் தரவுப் பதிவாளராக (Data Entry) பணியாற்றி வரும் விதவைப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017-இல் சாலை விபத்தில் மரணமடைந்த காவலரான தனது கணவரின் மறைவுக்குப் பின், கருணை அடிப்படையில் கிடைத்த மிகக் குறைந்த ஊதியத்தில், பார்வை மாற்றுத்திறனாளியான தனது தாயாரையும் இரு குழந்தைகளையும் இப்பெண் பராமரித்து வருகிறார்.

இவர் கடந்த மே 17 அன்று புகாரளித்தும், அடையாளம் காணப்பட்ட குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை.

எனவே, குற்றவாளியை உடனடியாகக் கைது செய்வதோடு, தற்காலிகப் பணியில் உள்ள இப்பெண்ணை பணி நிரந்தரம் செய்து, அவருக்குப் பாதுகாப்பான குடியிருப்பு வசதியையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

தலைநகரிலும் அதிர்ச்சி மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த மே 13 அன்று காணாமல் போய், மே 19 அன்று மீட்கப்பட்ட நிலையில், அவர் சென்னை மெரினா கடற்கரையிலும், அரக்கோணத்திலும் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்துத் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதுடன், இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் இத்தகைய வழக்குகளில் தனி கவனம் செலுத்தி, குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.