தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday

சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: 2016 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. விஜயபாஸ்கர் வரும் வெள்ளிக்கிழமையும், ரம்யா அடுத்த வாரமும் சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2024 மார்ச் 21 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் சோதனையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

தூத்துக்குடி: அதிமுக ஆட்சியில் (2001–06) வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார். அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தொடர்ந்த இந்த வழக்கில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அன்பில் மகேஷிடம் தீவிர விசாரணை!

சென்னை: தனியார் பள்ளிகளிடம் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை பகல் 1 மணி முதல் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் பெறப்பட்ட வாக்குமூலங்கள், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்ட விதம், கைமாறிய வழிகள், தொடர்புடையவர்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. பதில்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நீதிமன்றம் அளித்த மூன்று நாள் போலீஸ் காவல் இன்று (நவ. 4) மாலையுடன் முடிவடைகிறது.

சத்தியமங்கலத்தில் 87 ரிசார்ட்டுகளை மூட உத்தரவு

சென்னை: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் உரிய அனுமதியின்றி இயங்கும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூடி சீல் வைக்கவும், பின்னர் கட்டடங்களை இடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய வனவிலங்கு வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் எதுவும் பெறப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள நீதிமன்றம், நடவடிக்கை குறித்த அறிக்கையை நவம்பர் 27-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

400 டன் வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து!

சென்னை: இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ‘நாபெட்’ (NAFED) நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் வாங்குவதற்கான ஆணையைத் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ரத்து செய்துள்ளது.அக்டோபர் 31 அன்று கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற ஆய்வில், மாதிரி மூட்டைகளில் 20 முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த, பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் இருந்ததுடன், 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிடக் குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நாபெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.செப்டம்பர் 3 அன்று தொடங்கிய இந்தத் திட்டத்தில், கிலோ ரூ. 35 விலையில், மூன்று கட்டங்களாக இதுவரை 2,380.32 மெட்ரிக் டன் வெங்காயம் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுசென்னை: தீபாவளி நெருங்கும் நிலையில், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், அதைக் குறைக்கத் தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், நிர்வாகத் திறமையின்மையால் நலத்திட்டங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். இடைத்தேர்தல் வரவுள்ள தொகுதிகளுக்கு மட்டுமே முதல்வர் சென்றுநலத்திட்ட உதவிகளை வழங்குவதாகவும் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பட்டாசு வெடிக்கநேரக் கட்டுப்பாடு

புதுச்சேரி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, தீபாவளி அன்று காலை 7 மணி முதல் 8 மணி வரையும், இரவு7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், மருத்துவமனைகள் மற்றும் கோவில்களைச்சுற்றி 100 மீட்டர் தொலைவுக்குள் பட்டாசு வெடிக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பரிசீலிக்க உத்தரவு!

சென்னை: தருமபுரி மாவட்டம், சின்னம்பள்ளி கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உயிரிழந்தவரின் மகனுக்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தையின் நியமனம் விதிகளுக்கு முரணானது எனக் கூறி, அவரது மகன் மணிகண்டனின் விண்ணப்பத்தைத் துணைப்பதிவாளர் நிராகரித்திருந்தார். ஆனால், தந்தைக்குக் காலமுறை ஊதியம், படிகள், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியப் பங்களிப்பு ஆகியவை வழங்கப்பட்டதால், அவர் முறையான ஊழியராகவே நடத்தப்பட்டார் எனக் கூறிய நீதிபதி சி. குமரப்பன், நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்தார். மணிகண்டனின் மனுவை 8 வாரங்களுக்குள் மீண்டும் பரிசீலிக்கவும் உத்தரவிட்டார்.