தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகங்கள் இடப்பற்றாக்குறையைத் தீர்த்திடுக
8 May 2026, 12:34 am

தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகங்கள் இடப்பற்றாக்குறையைத் தீர்த்திடுக

சென்னை, மே 7- ஜிஎஸ்டி சாலையோரம் அமைந்துள்ள தாம்பரம் தொழுநோய் மறுவாழ்வு மையம் மற்றும் பழைய குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல அரசுத் துறைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் நிலையில், இவ்வளவு பெரிய பொதுச் சொத்துக்கள் வீணாவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தாம்பரம் மெப்ஸ் அருகே உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

சுமார் 15 நோயாளிகளுக்காக மூன்று மாடி கட்டிடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர் சந்தானம், “நோயாளிகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வேறு மையத்திற்கு மாற்றிவிட்டு, இந்த இடத்தை அவசர கால மருத்துவச் சேவைகளுக்கோ அல்லது மற்ற அரசுத் தேவைகளுக்கோ பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய கட்டிடத்திற்குச் சேவைகள் மாற்றப்பட்ட பிறகு, குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் அருகிலுள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகமும் பெரும்பாலும் காலியாகவே உள்ளது.

தற்போது அங்கு ஒரு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமே இயங்கி வருகிறது.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மலர்விழி கூறுகையில், குரோம்பேட்டை பழைய மருத்துவமனை வளாகம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர சிகிச்சை மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தாம்பரம் மையத்தைப் பொறுத்தவரை, அதன் பயன்பாட்டை மாற்றுவது குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதிகள் வேகமாக வளர்ந்து வருவதால், பொதுச் சொத்துக்களை முறையாகவும் விரைவாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.