வடசென்னையைக் காக்க உடனே களமிறங்குக!
16 Nov 2025, 3:30 pm

வடசென்னையைக் காக்க உடனே களமிறங்குக!

வடசென்னையில் வசிக்கும் இலட்சக் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் வெள்ள அபாயம் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கை, வெறும் புள்ளிவிவரமாக அல்லாமல், ஒரு அவசர நிலையாகவே கருதப்பட வேண்டும். இந்த ஆய்வு அறிக்கை, சில தன்னார்வ அமைப்புகளால், தயாரிக்கப் பட்டு வடசென்னையின் சில குடியிருப்பு அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளது.

இது தெரிவிக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், வடசென்னையில் வாழும் மக்களில் 99.2 சதவீதம் பேர் வெள்ளத் தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்; வீடுகளுக்குள் சராசரியாக 3.4 அடி உயரம் வரை நீர் நுழையக்கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இது 2023-ஆம் ஆண்டு வெள்ளத்தின் கோரமான அனுபவத்தை மீண்டும் சந்திக்கும் அபாயத்தை உறுதிப்படுத்தும் ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும்.

இந்த ஆய்வறிக்கையின்படி, வடசென்னை யின் வடிகால்கள் அடைபட்டுள்ளதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முத லாவதாக, வடிகால்களை அடைத்துள்ள முக்கிய அம்சம், அனல்மின்நிலையங்களில் இருந்து உருவாகும் சாம்பல் அளை (Fly Ash) எனப்படும் நுண் சாம்பல் தூள் ஆகும். எண்ணூர் முகத்துவாரத்தில் 3.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்—இது ஏறத்தாழ 492 கால்பந்து மைதானங்களுக்குச் சமம்—கொசஸ்தலை யாறு மற்றும் எமூர் நீர்ப்பகுதிகளில் இந்த சாம்பல் படிந்து, வடிகால்களின் நீரோட்டத் திறனை முழுவதுமாக மூச்சுத்திணறச் செய்துள்ளது.

இரண்டாவதாக, உயர் அலைகள் ஏற்படும்போது, கடல் நீர் பின்னோக்கித் தள்ளப்பட்டு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற முக்கிய நீர்வழிகள் மூலம் குடியிருப்புப் பகுதி களுக்குள் திரும்புவதே “பின்னடைவு வெள்ள விளைவு” (Backwater Effect) எனப்படுகிறது.

எனவே, இப்போது மக்கள் கோருவது வழக்கமான நிவாரண உதவிகள் அல்ல; அறிவியல் அடிப்படையிலான நிரந்தரப் பாதுகாப்பு.

இந்தப் பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்து, கண்டறியப்பட்டுள்ள சாம்பல் அளைப் படிவுகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக அகற்ற வேண்டும். மேலும், பின்னடைவு வெள்ளத்தைத் தவிர்க்க, முக்கிய நீர்வழிகளின் முகத்துவாரங்களை ஆழப்படுத்தி, நீரை கடல் நோக்கி வேகமாகத் தள்ளும் அதிகத் திறன் கொண்ட நீரேற்று நிலையங்களை (High-capacity pumping stations) நிரந்தரமாக நிறுவ வேண்டும்.

மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவது தமிழக அரசின் முதற் கடமையாகும். இனியும் தாமதிக்காமல், இந்த அறிக்கையை ஒரு வாய்ப்பாகக் கருதி, வடசென்னையின் பல ஆண்டுச் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.