அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளம் சிதைக்கப்படுகிறது
8 Jun 2026, 9:19 pm

அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளம் சிதைக்கப்படுகிறது

பீகாரில் தேர்தல் ஆணையத்தின், வாக்காளர் பட்டி யல் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) தொடர்பான உத்தரவுகளுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய உத்த ரவைப் பிறப்பித்துள்ளது. “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், குடியுரிமை குறித்து ஒரு வரைய றுக்கப்பட்ட விசாரணையை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அதிகா ரம் உள்ளது” என்று அந்த உத்தரவு குறிப்பிடுகிறது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வாயம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. துல்லியமான வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பதும், தகுதியுள்ள நபர்கள் மட்டுமே தங்கள் வாக்குரிமையைப் பயன் படுத்துவதை உறுதி செய்வதும் தேர்தல் ஆணையத் தின் அரசமைப்பு ரீதியான பொறுப்பாகும். இந்தப்பொ றுப்பிலிருந்தே அதற்கான அதிகாரம் பெறப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் அற்ற அதிகாரமும் வெளிப்படைத்தன்மை இன்மையும்

இதன்மூலம், உச்சநீதிமன்றம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மிக விரிவான அளவில் அதிகாரத்தை வழங்கியுள்ளது என்பது தெளிவாகிறது. வழக்கு விசார ணையின்போது, தேர்தல் ஆணையத்தின் வாதங்களை ஆழமாக ஆராய்ந்து பார்ப்பதைக் கூட நீதிமன்றம் மேற் கொள்ளவில்லை. பீகாரில் 2002-03 காலகட்டத்திலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் கள் தயாரிக்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட பரந்த கொள் கைகளின் அடிப்படையிலேயே, வாக்காளர் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ தொடர்பான விசாரணை முறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது புதிதாக உருவாக் கப்பட்ட தனித்துவமான நடைமுறை அல்ல என்றும் ஆணையம் வாதிட்டிருந்தது.

மனுதாரர்களின் தீவிரமான கேள்விகளுக்குப் பதில ளித்தபோது, 2002-03 காலகட்டத்திய அசல் உத்தர வுகளையோ அல்லது அப்போது பின்பற்றப்பட்ட நடை முறைகளையோ சமர்ப்பிக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்பதையும் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. இருப்பினும், உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள இந்த விரிவான அதிகாரம், தேர்தல் ஆணை யத்தின் பொறுப்புக்கூறும் தன்மையை நீக்கிவிட்டது. அத்துடன், ஒரு குறிப்பிட்ட அளவிலாவது வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தவில்லை. நீதித்துறை மற்றும் நீதித் துறை சார்ந்த (quasi-judicial) நடைமுறைகள் நியாய மானதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், அவை நியாய மானவையாகத் தோற்றமளிக்கவும் வேண்டும் என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாடு இதில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய வெளிப்படைத்தன்மை குறித்து இந்தி யத் தேர்தல் ஆணையம் துளியும் அக்கறை காட்ட வில்லை என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிந் தது. நீக்கப்பட்டவர்களின் பட்டியலையோ அல்லது அதற்கான காரணங்களையோ ஆணையம் வழங்க வில்லை. பொதுமக்கள் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக, நீக்கப்பட்டவர்களின் பட்டியலை கணினியால் வாசிக்கக் கூடிய (machine-readable) வடிவத்தில் வழங்கவும் ஆணையம் மறுத்துவிட்டது. இந்த முக்கியமான கேள்வி க்கு ஆணையம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. பொது மக்களின் ஆய்வுக்கு உட்பட்டுப் பொறுப்புடன் செயல் படுவதில் அதற்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

வரையறுக்கப்பட்ட அதிகாரமும் நீதிமன்ற மறுஆய்வும்

எனினும், குடியுரிமை தொடர்பான இறுதித் தீர்மா னங்களை எடுப்பதில் இந்தியத் தேர்தல் ஆணையத் திற்கு அரசமைப்பு ரீதியாக இறுதி அதிகாரம் வழங்கப் பட முடியாது என்பதை உயர்நீதிமன்றம் அறிந்திருந் தது. எனவே, ஒரு நபர், குடியுரிமை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான சட்டப் பூர்வ நிபந்தனைகளை நிறைவு செய்கிறாரா என்பதில் ஆணையத்திற்குத் திருப்தி ஏற்படாத பட்சத்தில், அக் கோரிக்கையைச் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுப்ப தற்காக ஒன்றிய அரசின் தகுந்த அதிகார அமைப்பிடம் அது ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 16-ஆவது பிரி வைக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், வாக்குரிமை என்பது குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமை என்றும்; எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதற்கு குடியுரிமை என்பது ஒரு அடிப்படைத் தேவையாகும் என்றும் கூறியிருக்கிறது. தனது வாதத்தை நிறைவு செய்கையில் உச்சநீதிமன்றம் பின் வருமாறு கூறியிருக்கிறது:

“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 16-ஆவது பிரிவில் உள்ள சட்டரீதியான தேவையின் அடிப்படை யில், வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும்போதோ அல்லது திருத்தம் செய்யும்போதோ, குடியுரிமை தொடர் பான கேள்விகளை ஆய்வு செய்ய ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருப்பினும், அத்தகைய ஆய்வானது வாக்காளர் பட்டியலில் ஒருவரைச் சேர்ப்ப தா அல்லது நீக்குவதா என்பதைத் தீர்மானிக்கும் நோக் கத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஏற்கெனவே பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள ஒரு வாக்காளருக்குச் சாதகமாக இருக்கும் சட்டப்பூர்வ அனுமானத்தை (presumption) உரிய முறையில் கருத்தில் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும். இத்தகைய வரையறுக்கப்பட்ட சட்டச் சூழலுக்குள்ளேயே, தேர்தல் நோக்கங்களுக்காக ஒரு முடிவை எட்டுவதற்குத் தனது முன் உள்ள ஆவணங்க ளை ஆணையம் மதிப்பீடு செய்கிறது. மிக முக்கியமாக, இந்த முழுச் செயல்முறையும் நீதிமன்ற மறுஆய்வுக்கு (judicial review) உட்பட்டது. இதன் மூலம், அந்த ஆய்வானது சட்டத்திற்கு இணங்கவும், நடைமுறை நியா யத்தின் எல்லைகளுக்கு உட்பட்டும் நடத்தப்படுவதை உறுதி செய்ய முடிகிறது.”

வாக்குரிமை மறுப்பும் மக்கள் மீதான சுமை திணிப்பும்

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான நற்சான்றிதழை அளித்து, ‘ஆணையம் தனது சட்டப் பூர்வ அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டது’ என்ற வாதத் தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதன் மூலம், உண் மையில் மேலும் குழப்பத்தையும் முரண்பாட்டையுமே உருவாக்கியுள்ளது. இது நமது குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களையே பாதிப்ப தாக அமைந்துள்ளது. நமது அரசமைப்புச்சட்டம் உரு வாக்கப்பட்ட வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்தால், ஒரு சுதந்திரமான, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற குடியரசாக, வாக்களிக்கும் அரசமைப்புச் சட்ட உரிமை யையே நமது தேர்தல் அமைப்பின் அடிப்படை அடித்தள மாகக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

இதனால்தான், முதல் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, வாக்காளர் பட்டிய லில் ஒருவரைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான பொறுப்பை ஒருபோதும் தனிப்பட்ட குடிமக்களின் மீது நாம் சுமத்தியதில்லை. இதை உறுதிசெய்வது எப்போ தும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகவே இருந்து வந்துள்ளது. வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கருதினாலும், தனிப்பட்ட குடிமக்களுக்கான வாக்க ளிக்கும் அரசமைப்புச்சட்ட உரிமை குறித்த மிக முக்கியமான அம்சத்தைப் பற்றித் தீர்ப்பு மௌனம் கடைப் பிடிப்பது கவலைக்குரியதாகும்.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் 27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரி மையை இழந்த எதார்த்த நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தக் கேள்விகள் முக்கியமானவை யாகின்றன. தேர்தல் ஆணையம் பின்பற்றிய காலக் கெடு மற்றும் சர்ச்சைக்குரிய, சட்ட நடைமுறைகள் இல்லாததே இந்த உரிமை மறுப்பிற்குக் காரணங்க ளாக அமைந்தன. இறுதியாக, இத்தகைய சர்ச்சைக ளைத் தீர்ப்பதற்கான நீதித்துறை சார்ந்த தீர்ப்பாயங்க ளை (judicial tribunals) அமைக்குமாறு உச்சநீதிமன் றமே முன்மொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பி னும், அத்தகைய தீர்ப்பாயம் ஒன்றின் தலைவரும் கொல் கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி யுமான ஒருவர், “மனுக்களைப் பரிசீலித்து முடிவெடுக் கக் குறைந்தது நான்கு ஆண்டுகள் தேவைப்படும்” என்று வெளிப்படையாகக் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, உச்ச நீதிமன்றத்தின் உத் தரவு இந்தச் சூழலைக் கணக்கில் கொள்ளவில்லை.

இந்துத்துவா சித்தாந்தமும் சிதைக்கப்படும் ஜனநாயகமும்

2014-இல் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து, இந்திய அரசின் ஆதிக்கம் செலுத்தும் கொள்கையாக ‘இந்துத்துவா’ முன்னிறுத்தப்பட்டு வருவதைக் காண்கி றோம். ஆட்சி அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய வற்றிலிருந்து மாறுபட்டு, நீதித்துறை மட்டும் இத்த கைய கருத்தியல் போக்குகளிலிருந்து விலகித் தனித்து நிற்கும் என்று கருதுவது அறியாமையாகவே இருக்கும். இந்திய அரசமைப்புச் சட்டம் எப்போதும் தனிமனித உரி மைகளை மையமாகக் கொண்டதாகவே இருந்து வருகி றது. அந்த அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக் கும் இறுதி அரணாக உச்சநீதிமன்றம் உள்ளது.

இந்திய நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் வழக்க றிஞர்கள் வட்டாரங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பு அமைப்பான ‘அகில பாரதிய அதிவக்தா பரிஷத்’ தனது செல்வாக்கை எவ்வாறு நீதிமன்ற அமர்வுகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களில் தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறது என்பது குறித்த செய்திகள் ஊடகங்க ளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடிமட்ட அளவில் குடிமக்களின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதி லாக, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வலுப் படுத்தும் வகையிலான ‘பாரதிய’ சட்ட அணுகுமுறை க்கு இடமளிக்கும் விதமாக, குடியரசு என்ற தன்மையி லான நமது அரசமைப்புச் சட்டத்தின் சாராம்சத்தைச் சிதைக்கும் முயற்சியாகவே இந்த நிகழ்வு அமைகிறது.

கூர்ந்து கவனிக்கும் வாசகர்களுக்கு இதுவே போது மான ஒரு குறிப்பாகும். எனவே, அச்சமோ அல்லது பாரபட்சமோ இன்றி வாக்களிப்பதற்கான அரசமைப் புச் சட்ட உரிமையைக் காத்துக்கொள்ள, தேர்தல் சீர் திருத்தங்களுக்கான நீண்டகாலப் போராட்டத்தின் மூலம் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் முறை யைப் பறிக்க முனையும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.