கைவிடப்பட்ட ‘அத்திப்பட்டி’யாக சுஜில்குட்டை பவானிசாகர் அணைக்கரையிலேயே தொடரும் தாகக் கூக்குரல்!
3 Jun 2026, 10:57 pm

கைவிடப்பட்ட ‘அத்திப்பட்டி’யாக சுஜில்குட்டை பவானிசாகர் அணைக்கரையிலேயே தொடரும் தாகக் கூக்குரல்!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைதான் ஈரோடு, திருப்பூர், கரூர் எனப் பல மாவட்டங்களின் தாகத்தை தீர்க்கும் முதன்மை நீர் ஆதாரம்.

லட்சக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்க ளுக்கு வளம் சேர்க்கும் இந்த அணைக் கரையின் எல்லையிலேயே, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடிநீர் வசதியின்றி, அடிப்படை உரிமைகளுக் காக தவிக்கும் ஒரு ‘அத்திப்பட்டி’ கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? பவானிசாகர் ஒன்றியம், புங்கார் ஊராட்சிக்குட்பட்ட ‘சுஜில்குட்டை’ கிராம மக்களின் அவல வாழ்வு, ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை எள்ளி நகை யாடுவது போல் அமைந்துள்ளது.

சுமார் 250 குடும்பங்கள் வசிக் கும் சுஜில்குட்டை கிராமம், மலை களாலும் காடுகளாலும் சூழப்பட்ட ஒரு பகுதி. யானை, மான் போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் மிகுந்த இப் பகுதிக்கு, வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்து வரும் நகரப் பேருந்து காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை என இரு முறை மட்டுமே வந்து செல்கிறது. பகலில் தெங்குமரஹடா பேருந்து மட்டுமே இப்பகுதியை கடக்கிறது. அவசரத் தேவைக்கோ அல்லது மருத்துவ வசதிக்கோ இந்த இரண்டு பேருந்துகளைத் தவிர வேறு வழியே இல்லை. மூன்று தலைமுறைகளாக மக்கள் வசித்து வரும் இப்பகுதியில், இதுவரை யாருக்கும் நிலத்திற்கான பட்டா வழங்கப்படவில்லை. பட்டா இல்லாததால், கலைஞர் கனவு இல்லம் போன்ற அரசிடம் இருந்து வீடு கட்டுவதற்கான எந்தவொரு நிதியுதவியையும் இவர்களால் பெற முடிவதில்லை. தாங்களாகவே கட்டிய எளிய வீடுகளில்தான் வசித்து வரு கின்றனர். வீடுகளுக்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டிருந்தாலும், வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு தெரு விளக்கு வசதி கூட இல்லை. கிராமத் தில் ஒரு நடுநிலைப் பள்ளியும், அங் கன்வாடியும் மட்டுமே உள்ளன.

முறை யான மருத்துவ வசதியோ, நியாய விலைக் கடையோ கிடையாது. ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என் றாலும், அவசர சிகிச்சைக்கு என்றாலும் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவானிசாகருக்குத் தான் அலைய வேண் டியுள்ளது

. அணையின் நீர்மட்டம் குறையும் போது, மேடான பகுதிகளில் ஆயில் என்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி தற் காலிக விவசாயம் செய்கின்றனர்.

ஆனால், மழை பெய்து அணை நிரம் பினால் பயிர்கள் நீரில் மூழ்கிவிடும். விளைச்சல் கைக்குக் கிடைத்தால் மட்டுமே வியாபாரிகள் தேடி வருவார்கள்; இல்லையெனில் நஷ்டம்தான் மிச்சம்.

இதனால் ஆண்கள் அணைப் பகுதி யில் மீன்பிடி தொழிலையும், பெண்கள் 100 நாள் வேலைத் திட்டத்தையும் நம்பியுள்ளனர். ஆனால், அதிலும் நிலையான வருமானம் கிடைப்பதில்லை.

போக்குவரத்து வசதி இல்லாததாலும், பாதுகாப்பு குறைபாட்டினாலும் வெளி யூர்களுக்குச் சென்று வேலை தேடவும் இவர்களால் முடிவதில்லை.

இத்தனை துயரங்களுக்கும் முதன்மையாக இருப்பது இவர்களின் குடிநீர் பிரச்சினை. கிராமத்தில் குழாய் கள் மூலம் விநியோகிக்கப்படும் தண் ணீர் எப்போது வரும் என்றே தெரியாது. அதுவும் இரண்டடி ஆழத்திற்குத் தோண்டி, குடங்களை வைத்து பிடிக்க வேண்டும்

. அப்படிப் பிடிக்கும் தண்ணீரும் ‘உப்புத் தண்ணீர்’ என்பதால் குடிக்கப் பயன்படுவதில்லை; மற்ற வீட்டு உபயோகங்களுக்கு மட்டுமே. குடிப்பதற்கான நன்னீர் தேவைக்கு, 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்குத் (இவர்கள் இதனை ஆறு என்றே அழைக்கின்றனர்) தான் செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் சென்றாலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வாகனத்தை நிறுத்த வேண்டும். பின்னர் புல்வெளிகள், வறண்டு வெடித்துக் கிடக்கும் வண்டல் மண் படிவங்கள் மற்றும் சேறு சகதி நிறைந்த பகுதிகளைக் கடந்துதான் தண்ணீரை அடைய முடியும். பலத்த காற்று வீசும் போது தண்ணீர் சேறு கலந்து கலங் கலாகிவிடும்.

அந்தச் சேற்றுக்குள் மனி தர்களை உள்ளிழுக்கும் அபாயகரமான பகுதியைக் கடந்து, தெளிவான தண் ணீர் இருக்கும் இடத்திற்குச் சென்று குடங்களை நிரப்ப வேண்டும். இந்த கடுமையான பணியை பெண்கள் அல்லது முதியவர்களால் செய்ய முடியாது என்பதால், ஆண்கள் மட்டுமே தலையிலோ அல்லது தோளிலோ சுமந்து வர வேண்டியுள்ளது. ஆண்கள் இல்லாத குடும்பங்கள் தண் ணீருக்காக மற்றவர்களை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் அவலம் நாள்தோறும் அரங்கேறுகிறது.

இவர்களிடம் குடும்ப அட்டை மற் றும் வாக்காளர் அட்டை போன்ற அனைத்து அரசு ஆவணங்களும் உள் ளன. இம்மாநிலத்தில் எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன, ‘நிதி ஆயோக்’ வந்துவிட்டது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கும் சட்டத் திருத்தங்களும் வந்துவிட்டன. தமிழகத்தில் பல ஆட்சி கள் மாறிவிட்டன, பல அதிகாரிகள் மாறிவிட்டனர்.

ஆனால், இந்த மக்களின் தாகத்தைத் தீர்க்க இன்னும் ஒரு திட்ட மும் வரவில்லை. உச்ச நீதிமன்றமே வியந்து பாராட் டும் அளவுக்கு ‘கிராம சபைக் கூட்டங் களுக்கு’ அதிகாரம் இருப்பதாக கூறப் படுகிறது.

ஆனால் மூன்றடுக்கு உள் ளாட்சி அமைப்புகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் என மக்கள் பிரதிநிதிகள் இருந்தும், சுஜில்குட்டை கிராமம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது. பிரபல திரைப்படத்தில் வரும் ‘அத்திப்பட்டி’ கிராமத்தைப் போல, அதிகார வர்க்கத் தின் கண்களுக்கு தெரியாத ஒரு மறைந்த போன கிராமமாகவே சுஜில் குட்டை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கே தாகம் தீர்க்கும் பவானிசாகரின் கரையில் அமர்ந்து கொண்டு, குடிக்க ஒரு குடம் தண்ணீ ரின்றி தவிக்கும் இந்த மக்களின் நிலையை உணர்ந்து, மாவட்ட நிர் வாகமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் இப்பகுதிக்கு பாது காக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வச தியையும், அடிப்படை பட்டா மற்றும் சாலை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே இம்மக்களின் கோரிக்கை. - எஸ்.சக்திவேல்