தனியார் சர்க்கரை ஆலையிடமிருந்து பாக்கித்தொகையை உடனே பெற்றுத்தருக போளூரில் கரும்பு விவசாயிகள் போராட்டம்
11 Mar 2026, 4:32 pm
<p><strong>தனியார் சர்க்கரை ஆலையிடமிருந்து பாக்கித்தொகையை உடனே பெற்றுத்தருக போளூரில் கரும்பு விவசாயிகள் போராட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை, மார்ச் 11- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் உள்ள தரணி சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு நீண்ட காலமாக வழங்காமல் வைத்துள்ள பணத்தை உடனே வழங்கக் கோரி போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் புதன்கிழமை (மார்ச் 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்தரப்பு கூட்டத்தில் ஒப்புக்கொண்டபடி பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள் பாக்கிப் பணத்தை ஆலை நிர்வாகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை கரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தை வழங்காமல் வஞ்சித்து வருகிறது. முத்தரப்பு கூட்டத்தில் ஒப்புக்கொண்ட படி கரும்பு விவசாயிகளுக்குப் பாக்கிப் பணத்தை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆலை மட்ட நிர்வாகிகள், மேலதிகாரிகளை ஆலோசித்துத் தகவல் தெரிவிப்பதாக வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் ரூ.13.18 கோடி பாக்கிப் பணத்தை வழங்குவதாக ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒப்புக்கொண்ட படி உரிய நாளில் பாக்கிப் பணத்தை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் முற்றுகைப் போராட்டத்தை விவ சாயிகள் கைவிட்டனர்.</p>
